திருவள்ளூர் அரசுப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அண்மையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் பலவற்றைத் தொடங்கிவைத்தது கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது!  

கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்: புதிய வகுப்பறைகள் மற்றும் பசுமைப் பள்ளிகள்

மாணவர்களுக்குச் சிறப்பான கற்றல் சூழலை உருவாக்க, 12 அரசுப் பள்ளிகளில் ரூ.3.93 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த, மூன்று அரசுப் பள்ளிகளில் ‘பசுமைப் பள்ளி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8.55 கோடி மதிப்பில் சூழல்சார்ந்த புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நவீன கற்றல் உபகரணங்கள்

மாணவர்களின் டிஜிட்டல் கற்றலை மேம்படுத்த, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பூண்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக ரூ.20 லட்சம் மதிப்பில் ‘நடமாடும் அறிவியல் ஆய்வகம்’ (Mobile Lab) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் அடிப்படை அறிவியல் கருத்துகளை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்

‘மகிழ் முற்றம்’ திட்டம்: மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வளர்க்கும் வகையில், தலைமைத்துவ வில்லைகள் மற்றும் மதிப்பீட்டுப் பலகைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

‘அறிவியல் களம்’ திட்டம்: அடிப்படை அறிவியல் திறன்களை ஊக்குவிக்க, மாவட்டத்தின் 5 பள்ளிகளில் ‘அறிவியல் களம்’ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

ஆங்கிலத் திறன் மேம்பாடு: பூண்டி ஒன்றியத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் பேச்சு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்த, தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கற்றல் கையேடுகள் : பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வுத் தயாரிப்புக்காக, ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட விரிவான கற்றல் கையேடுகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்கள் அனைத்தும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதிலும், மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

மக்கள் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் அரசுப் பள்ளிகள்!

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top