மும்மொழித் திணிப்பு மற்றும் குலக் கல்விக்குத் தள்ளும் தேசிய கல்விக் கொள்கைக்கு உறுதியான எதிர்ப்பை பதிவு செய்து, தமிழ்நாடு அரசு நம் மாநிலத்திற்கே உரிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாநில கல்விக் கொள்கை – 2025 ஐ வெளியிட்டு, தமிழ்நாட்டின் கல்வி துறைக்கு புதிய பாதையைத் திறந்தார்.
தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கொள்கை, எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI), நவீன தொழில்நுட்பங்கள், மற்றும் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
இந்தக் கொள்கையின் நோக்கம், பள்ளிக் கல்வியை ஒரு புத்துணர்ச்சி மிக்க, மாணவர் மையப்படுத்தப்பட்ட, திறன் சார்ந்த முறைப்படியாக மாற்றுவது. இதன் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரடியாக பதிலளித்து, பொதுமக்களுக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தி வருகிறார்.
சமத்துவக் கல்வி!
மாநில கல்விக் கொள்கை - 2025 சமச்சீர் கல்வி முறையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்?
பள்ளிக் கல்வித் துறையின் முதுகெலும்பு சமச்சீர் கல்வி முறைதான். அதனை வலுப்படுத்தும் விதமாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளோம். திறன் சார்ந்த கற்றல், ஒருங்கிணைந்த கலைத்திறன் வளர்ச்சி தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கற்பித்தல் என ஒவ்வொரு மாணவரும் முழுமையான சமத்துவமான கல்வியினைப் பெறுவதை மாநில கல்விக் கொள்கை – 2025 உறுதி செய்யும்.
அனைவருக்குமான கல்வி!
தேசிய கல்விக் கொள்கைக்கும் நம் மாநில கல்விக் கொள்கைக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மூன்று மொழிகளை மாணவர்கள் கற்க வேண்டும் என மொழித் திணிப்பில் ஈடுபடுகிறது. நம் தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை-2025 தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கிறது.
நாம் 10 மற்றும் +2ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு முறையைப் பின்பற்றுகிறோம். NEP 2020 மூன்றாம் வகுப்பிலிருந்தே பொதுத் தேர்வுகளை உருவாக்கி மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது.
நாம் சமூகநீதி வழியில் அறிவியல் பார்வையை உறுதி செய்கிறோம். NEP மதவாதிகளிடம் கல்வியை ஒப்படைத்து வேதகால பழமைவாத பாரதம் என புராணங்களைப் பாடமாக்கத் துடிக்கிறது.
நமது இலக்கு எதிர்காலத்தை நோக்கியது. NEP-2020 மாணவச் செல்வங்களை குலத்தொழிலில் தள்ளி அவர்கள் காலில் சங்கிலியைப் பூட்டுகிறது.
சாத்தியமாகும் உயர் தொழில்நுட்பக் கல்வி!
மாநில கல்விக் கொள்கை – 2025-ல் குறிப்பிடப்பட்டுள்ளது போல, கிராமப்புற பள்ளிகளிலும் AI, Robotics போன்ற உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் கொண்டுவருவது எப்படிச் சாத்தியமாகும்?
TN SPARK திட்டம் வட்டார அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, கிராமப்புற பள்ளிகளுக்கும் உயர் தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
வானவில் மன்றம் மூலமாக தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப அறிவு, அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
மாற்றம் அல்ல முன்னேற்றம்!
மாநில கல்விக் கொள்கையால் தேர்வு முறையில் மாற்றம் ஏற்படுமா?
வாரியத் தேர்வுகள் மனப்பாட முறையிலிருந்து பயன்பாடு அடிப்படையிலும் திறன் அடிப்படையிலும் மாற்றம் பெறும்.
+2 பொதுத் தேர்வுக்கு முன் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 11-ம் வகுப்பைத் தயாரிப்பு ஆண்டாகக் கருதி பொதுத் தேர்வை எதிர்கொள்வதற்கு முன்திறன் பயிற்சிக் களமாக மாற்றியுள்ளோம்.
மனஅழுத்தம் இனி இல்லை!
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் மதிப்பீடு மற்றும் தேர்வுகள் எப்படி மாறும்?
மனப்பாடத் திறனை மட்டும் சார்ந்திராமல் புரிதல், தெளிவு, தீர்வு காணுதல், நடைமுறைப் பயன்பாடு போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு இனி மதிப்பீடுகள் அமையும்.
மனஅழுத்தம் தரக்கூடிய தேர்வு முறைக்கு மாற்றாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு (Formative Assessment) முறையில் கற்றல் செயல்திறன்களோடு, உலகளாவிய வாழ்க்கைத் திறன்களையும் சோதித்தறியும் வகையில் பொதுத் தேர்வுகள் அமையும்.
சமச்சீர் கல்வி தொடரும்!
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் மாற்றப்படுமா?
இல்லை. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களே தொடரும். ஆனால், அவை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நவீன உதாரணங்கள், உள்ளூர் தொடர்புடைய தகவல்கள், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, திறன் சார்ந்த உள்ளடக்கம் ஆகிய சேர்க்கைகளின் மூலமாகப் புதுப்பிக்கப்படும். கற்றலை மேம்படுத்தத் துணைப் பாடக் கையேடுகள் (Supplementary materials) அச்சு மற்றும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
இரு மொழிக் கொள்கை!
தேசிய கல்விக் கொள்கையுடன் ஒப்பிடுகையில் இருமொழிக் கொள்கை மாணவர்களின் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துமா?
நிச்சயமாக இல்லை. நம் மொழிரீதியான கலாசார அடையாளங்களைக் காக்கவும், உலகளாவிய வாய்ப்புகளை உறுதி செய்யவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வலுவான செயல்பாட்டுத் திறனை உறுதி செய்கிறது இருமொழிக் கொள்கை.
கூடுதல் மொழிகளை விருப்பப் பாடங்களாகக் கற்கலாமே தவிர, எந்தவொரு குழந்தையும் கட்டாய மூன்றாவது மொழித் திணிப்புச் சுமையை அனுபவிக்கக்கூடாது என்பதே நமது கல்விக் கொள்கை!
பாடங்கள் அல்ல… மாணவர்களே கல்வியின் மையம்!
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை-2025க்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள் என்னென்ன?
நடைமுறையிலிருக்கும் சமச்சீர் கல்வி வலுவான மற்றும் சமத்துவமான கல்விக் கட்டமைப்பை வழங்குகிறது. ஆனால், கொரோனா தொற்றுக்குப் பிறகான கற்றல் இடைவெளி, குறைந்த மின்னணு ஒருங்கிணைப்பு, எதிர்காலத் திறன்களின் தேவை போன்ற சவால்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
மாநில கல்விக் கொள்கை-2025,மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களைத் திருத்தம் செய்யும் சுழற்சி அமைப்பினை முன்மொழிகிறது. 21-ம் நூற்றாண்டின் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, காலநிலை அறிவு, தொழிற்கல்வி வழிகாட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
உள்கட்டமைப்பினை நவீனப்படுத்துதல், ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மிக முக்கியமாகப் பாடப் புத்தகங்களை அடிப்படையாகக்கொண்ட கல்வி முறையிலிருந்து, கற்போரை மையமாகக்கொண்ட திறன்சார்ந்த கல்விமுறைக்கு நாம் மாறவிருக்கிறோம்.
மாற்றங்கள் படிப்படியாக அமையும்!
மாநில கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் நடப்பு கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுமா, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதன் பயன்கள் கிடைக்குமா?
இல்லை. மாற்றங்கள் படிப்படியாக, ஒவ்வொரு கட்டமாகச் செயல்படுத்தப்படும். சமச்சீர் கல்வியின் முக்கிய பாடப் பகுதிகள் தொடரும். கூடவே, அதிக செயல்பாடுகளைக் கொண்டதாகவும் திறன் மற்றும் தொழில்நுட்ப வளமிக்கதாகவும் பாடங்கள் அமையும். ஆசிரியர்கள் ‘பயிற்சிப் பார்வை’ போன்ற தளங்களின் மூலம் கற்பித்தல் தொடர்பான திறன்களைக் கட்டமைக்கவும், மாற்றங்களுக்கு ஏற்ப கல்வியின் புதிய திட்டமிடல்களை எளிதில் கையாளவும் வழிவகை செய்யப்படும்.
Also Read: வெளிச்சத்தின் மகள் : சாவித்திரிபாய் புலே
வேலைவாய்ப்புக்கான கல்வி!
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை மாணவர்களை வேலை வாய்ப்புக்கு எவ்வாறு தயார்ப்படுத்தும்?
மாணவர்களை தேர்வுக்கு மட்டும் தயார் செய்யாமல் அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கும் வேலைவாய்ப்பிற்கும் தயார் செய்கிறது மாநில கல்விக் கொள்கை.
மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உள்ளூர் தொழில் வளங்களைப் பயன்படுத்தி பயிற்சி நவீனக் காலத்திற்கேற்ற AI, Robotics, Coding மற்றும் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: மாநில கல்விக் கொள்கை: நாளைய தமிழ்நாட்டுக்கான Blueprint!