
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி, கல்வியில் சமத்துவம் மற்றும் சமூகநீதிக்காகப் போராடிய கலங்கரை விளக்கம் சாவித்திரிபாய் புலே.
இறுகிக்கிடந்த இந்தியச் சமூகக் கட்டமைப்பைத் தகர்த்து, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விச் சமத்துவத்துக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மகத்தான ஆளுமை. தனது கணவர் ஜோதிராவ் புலேவுடன் இணைந்து, சாவித்திரிபாய் மேற்கொண்ட புரட்சிகரமான முயற்சிகள், இந்தியாவின் சமூக மற்றும் கல்வி வரலாற்றில் அழியாத அத்தியாயங்களை எழுதின.
தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு பற்றித் தெரிந்து கொள்ள: Click
இருளுக்கு மத்தியில் ஒரு ஒளிக்கீற்று
இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. சாதி, மதம், பாலினம் போன்ற பாகுபாடுகள் கோலோச்சியிருந்த அந்தக் காலகட்டத்தில், சாவித்திரிபாய் புலே, கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்த போராளியாக உருவெடுத்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள நைகாவ்னில், 1831ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பிறந்தார். அவரின் ஒன்பது வயதில் ஜோதிராவ் புலேவுடன் குழந்தைத் திருமணம் நடந்தது. கல்வி வெளிச்சம் கிடைத்திராத சாவித்திரிபாய், தனது கணவர் ஜோதிராவ் புலேவின் வழிகாட்டுதலில் முதன்முறையாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். இது அக்காலத்தில் பெண் கல்விக்கு எதிரான சமூக விதிமுறைகளைத் துணிச்சலுடன் உடைத்தெறிந்த ஒரு புரட்சிகரமான செயலாக வரலாற்றில் நிலைபெற்றது!
இந்தியாவின் முதல் மகளிர் பள்ளி
தான் கற்றுக்கொண்ட கல்வியை தனக்கு மட்டுமாக அல்லாமல், அனைத்துப் பெண்களுக்கும் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற உன்னத நோக்கம் அவருக்குள் சுடர்விட்டது. 1848-ம் ஆண்டில் ஜோதிராவ் புலேவுடன் இணைந்து புனேவில் உள்ள பிடே வாடாவில் இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர் சாவித்திரிபாய்.

இவர்களின் இந்த முயற்சிக்குக் கடுமையான சமூக எதிர்ப்பு கிளம்பியது. புலே தம்பதியின் முற்போக்கான எண்ணங்களை ஏற்காத குடும்பத்தினரால் அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், சாவித்திரிபாய் தனது லட்சியத்திலிருந்து சிறிதும் விலகவில்லை.
”கல்வி இல்லாத பெண் வேர்கள் இல்லா ஆலமரம்”
சாவித்திரிபாய் புலே மற்றும் அவரது கணவர் ஜோதிராவ் புலே மேற்கொண்ட அயராத உழைப்பின் விளைவாக, 1851-ம் ஆடில் மூன்று பள்ளிகள் அவரால் நிறுவப்பட்டன. 150க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றனர். விளிம்புநிலை சமூகங்களுக்கான கல்வி அறக்கட்டளைகளையை ஏற்படுத்தி பெண்கல்வியைப் பரவலாகீனார். அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் இஸ்லாமியப் பெண் ஆசிரியையான பாத்திமா பேகம் ஷேக் அவர்களைத் தனது பள்ளியில் பணியமர்த்தி, புரட்சிகர மாற்றங்களுக்கு விதை தூவியனார் சாவித்திரி பாய்.

1852-ம் ஆண்டில், கல்விக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சாவித்திரிபாய் “சிறந்த ஆசிரியர்” என்று கௌரவிக்கப்பட்டார். “கல்வி இல்லாத ஒரு பெண் வேர்கள் அல்லது இலைகள் இல்லாத ஆலமரம் போன்றவள்” என்பதே சாவித்திரிபாய் புலேவின் கருத்தாக இருந்தது.
சாவித்திரிபாய் புலே அநீதிக்கு எதிரான கலகக்குரல்!
சாவித்திரிபாய் ஒரு கல்வியாளர் மட்டுமல்ல; அவர் சமூக அநீதிகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய ஒரு முன்னோடி சீர்திருத்தவாதி. அக்காலத்தில் இந்தியச் சமூகத்தில் பெண் சிசுக்கொலை பரவலாக இருந்தது. குறிப்பாக கைம்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளம். அவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக, சாவித்திரிபாய் ஓர் காப்பகத்தை நிறுவினார். கைம்பெண்களுக்கென தாய் சேய் நல விடுதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு புகலிடம் அளித்தார்.

பிற்போக்குத்தனமான நம்பிக்கைகள் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் சாவித்திரிபாய் எதிர்காலம் குறித்துச் சிந்தித்து செயலாற்றினார். பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகக் கிளம்பிய கலகக்குரல் அவரது இந்தப் பணிகள் என்றால் மிகையல்ல.
மகிளா சேவா மண்டல்:

பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, குறிப்பாக விதவைகளின் தலையை வலுக்கட்டாயமாக மொட்டையடிக்கும் மனிதாபிமானமற்ற நடைமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக சாவித்திரிபாய் மகிளா சேவா மண்டல் என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதிலும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதிலும் முக்கியப் பங்காற்றியது.
சாவித்திரிபாய் புலே சத்யசோதக் சமாஜ்

1873-ம் ஆண்டில் தனது கணவர் ஜோதிராவ் புலேவுடன் இணைந்து, சத்யசோதக் சமாஜம் என்ற அமைப்பை நிறுவினார் சாவித்திரிபாய். இந்த அமைப்பு சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதையும், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதையும், தலித்துகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. குழந்தை திருமணம், சதி (உடன்கட்டை ஏறுதல்) போன்ற கொடூரமான சமூகப் பழக்கங்களை இதன்வழியாகய் தீவிரமாக எதிர்த்தார் சாவித்திரி பாய். மேலும், விதவை மறுமணம் மற்றும் கலப்புத் திருமணங்களை ஆதரித்து, சமூகத்தில் சமத்துவத்தையும் நியாயத்தையும் நிலைநாட்டப் பாடுபட்டார்.
கவிதையெனும் கருவி!
சாவித்திரிபாய் திறமையான கவிஞராகவும் இருந்தார். அவரது கவிதைகள் பெரும்பாலும் பெண்களின் உரிமைகள், சமூக சீர்திருத்தம் மற்றும் சமத்துவம் பற்றிய செய்திகளை வெளிப்படுத்தின. 1854-ல் ‘காவ்யா புலே’ மற்றும் 1892-ல் ‘பவன் காஷி சுபோத் ரத்னாகர்’ ஆகிய கவிதை நூல்களை அவர் வெளியிட்டார்.

அவரது “புறப்படு, கற்றிடு” என்ற குறிப்பிடத்தக்க கவிதை, பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் கல்வி மற்றும் அதிகாரமளித்தலின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு சக்திவாய்ந்த குரலாக ஒலித்தது. அவரது இலக்கியப் பங்களிப்புகள், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக கலை எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தன.
சாவித்திரிபாய் புலே தன்னலமற்ற சேவை மற்றும் மரபு
1897-ம் ஆடில் பிளேக் நோய் வெகுதீவிரமாகப் பரவிக்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலமற்று சேவை செய்தார் சாவித்திரிபாய். ஆனால்,பிளேக் அவரையும்தொற்றிவிட்டது எதிர்பாராத சோகம்.

அதே ஆண்டு மார்ச் 10-ம் தேதி அன்று பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு சாவித்திரிபாய் புலே காலமானார்.
தன்னலமற்ற அர்ப்பணிப்பு, சமூகத்தின் மீதும், மனிதகுலத்தின் மீதும் துளிர்க்கும் ஆழ்ந்த அன்பு, கடமையுணர்வு, அநீதிக்கு எதிரான முழக்கம், இவையெல்லாம் சாவித்திரி பாய் புலேவைப் பற்றி அறிந்துகொள்வதற்கான சொற்சித்திரங்கள்.
உண்மையில், சாவித்திரிபாய் புலேவின் வாழ்க்கை என்பது பெண் கல்வி பெறத் தொடங்கிய இடைக்கால வரலாற்றின் ஆரம்ப கணத்தில் உரசப்பட்ட முதல் தீப்பொறி. அது பற்றி எரித்தது சமூக மூடத்தனங்களை. இன்று இந்தியா சமூகத்தில் பெண்கள் உயர்கல்வியை நோக்கிச் செல்வதும், கல்வியால் தங்களின் சொந்த அடையாளங்களை உருவாக்கிக்கொண்டதும் அதிலிருந்து கிளர்ந்த வெளிச்சம்.
சாவித்திரி என்பதற்கு வெளிச்சத்தின் மகள் என்று பொருள்!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr