பேராசிரியர் அன்பழகன் விருது : ஒரு பார்வை! 

Prof Anbazhagan

‘அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து அறிஞர் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றுதான் பேராசிரியர் அன்பழகன். அவருடைய கருத்தழகும் தமிழ் கட்டழகும் மேடையில் கண்டு மகிழ்ந்தவர்கள் நாம்…’ என முத்தமிழறிஞர் கலைஞர் போற்றிய பெருந்தகை. 

“ஒவ்வொரு நாளும் உறங்கப்போகும் முன், தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாருங்கள்!” எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த  இனமானப் பேராசிரியர். 

தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் வாழ்நாள் முழுவதும் உறுதியாக இருந்த, சமரசம் அறியாத சுமரியாதைக்காரர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குத் தொண்டனாக, பேரறிஞர் அண்ணாவுக்கு பாசமிகு தம்பியாக, முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கைக் கூட்டாளியாக விளங்கியவர்தான் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன்.  

திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவர்

திமுக-வின் ஐம்பெரும் முழக்கங்களைக் கடைபிடிப்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட பேராசிரியர், இந்தி எதிர்ப்பு தொடங்கி, திமுகழகத்தின் அனைத்து அரசியல் செயல்பாடுகளிலும்  முன்களத்தில் நின்றவர். இந்தியை ஒரு மொழியாக அல்லாமல், ஒரு பண்பாட்டுத் திணிப்பாகக் கருதியவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைத் தவிர வேறு எந்த மொழிக்கும் கல்வியில் இடமளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்.  

Prof Anbazhagan with C N Annadurai

திமுகவின் பொதுச் செயலாளராகப் அவர் பொறுப்புவகித்த காலங்கள் மகத்தானவை. 1977 முதல் 2020 வரை, சுமார் 43 ஆண்டுகள் அந்தப் பொறுப்பை அலங்கரித்தவர் பேராசிரியர் அன்பழகன். அவர் ஓர் அரசியல்வாதியாக மட்டுமல்ல, சிறந்த கல்வியாளர் என்பதோடு, தமிழ்நாட்டில் சிறப்புற நடைமுறைப்படுத்தப்பட்ட இலவச சீருடை, இலவச பஸ் பாஸ், சமச்சீர் கல்வித்திட்டம் உள்ளிட்ட பல மாற்றங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஊன்றிய விதைகளை, பயிராக்கி, களம் சேர்த்தவர் பேராசிரியர் அன்பழகன். கழகத்தின் வளர்ச்சி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருப்பவர் பேராசிரியர் அன்பழகன். 

வாழ்க்கைப் பயணம் மற்றும் அரசியல் பங்களிப்புகள்

திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் இணையரின் மகன் பேராசிரியர் க.அன்பழகன்.  இராமையா எனும் இயற்பெயர் கொண்ட இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை (சிறப்பு) தமிழ் படித்து, 1944-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார் தமிழ் இலக்கியத்தில் கரைகண்ட பேராசிரியரின் மொழிப்பற்றும் திராவிட இனப்பற்றும் அவரை திராட இயக்கத்தை நோக்கி அழைத்துவந்தது. 

அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ராமையாவிலிருந்து அன்பழகனாக மாறியது தன்மானம், அன்பழகனில் இருந்து திராவிட இயக்க பேராசிரியர் அன்பழகனாக மாறியது இனமானம்” என இரண்டே வரிகளில் தன் சொந்த வாழ்வையும் திராவிட இயக்கத்தில் தனக்குள்ள ஆழமான பிடிப்பையும் விளக்கிவிடலாம். 

திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதில், குறிப்பாகச் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை மக்களிடம்கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியவர் பேராசிரியர் க.அன்பழகன். ஒன்பது முறை தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கலைஞரின் அத்தனை ஏற்ற இறக்கங்களிலும் அவருக்கு உற்ற துணையாகவும், கொள்கை வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் பேராசிரியர் அன்பழகன் 2001-2006 காலகட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கண்காணித்து, மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை முன்னெடுத்தார். 

மாணவராகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய பேராசிரியர் அன்பழகன், தன்னால் ஈர்க்கப்பட்டு அரசியலை நோக்கி வந்த பல மாணவர்களை பல்துறைகளில் ஆளுமைகளாக மாற்றிய அரசியல் பேராசிரியராகவும் இருந்தார். பல்வேறு காலகட்டங்களின் தமிழ்நாட்டின் நிதி, வேளாண்மை மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவர், 1977 முதல் 2020 வரை, சுமார் 43 ஆண்டுகள் திமுகவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். குறிப்பாக, கல்வித் துறையில் அவரது பங்களிப்புகள் தனியாக எடுத்துரைக்கப்பட வேண்டியவை. 

பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது!

 கல்வித் துறைச் சாதனைகள் 

தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சராக பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பொறுப்பு வகித்த காலத்தில்தான் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக,

  • பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்ல பேருந்து பயண அட்டை
  • பெண் குழந்தைகள் கல்வி பயிலக் கல்வி உதவித்தொகை
  • இலவச சீருடைத் திட்டம்
  • ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம்
  • அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் சமச்சீர்க் கல்வித் திட்டத்துக்கான அடித்தளத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்தார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அரசியல் வழிகாட்டியும், திமுகவின் மூத்த தலைவருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்கள், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அன்பழகன் ஆற்றிய பணிகளைப் போற்றுவதோடு, எதிர்காலத் தலைமுறையினருக்குச் சிறந்த கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டவை.

“பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” 

Prof Anbazhagan Education Campus

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் அவருக்குத் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு, ரூ. 85 லட்சம் செலவில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. 

“பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்”

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு, குறிப்பாகப் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ. 7,500 கோடி மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் மாபெரும் திட்டமாக, “பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு சுமார் ரூ. 1,400 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கற்றல்-கற்பித்தல் முறைகளை நவீனமயமாக்குதல், ஆசிரியர்களின் தனித்திறன்களை மேம்படுத்துதல், மாணவர்களின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்தல் போன்ற பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து, கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்.

“பேராசிரியர் அன்பழகன் விருது”

கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன், தலைமைத்துவம், மாணவர் மேம்பாடு மற்றும் பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் “பேராசிரியர் அன்பழகன் விருது” வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 2 பள்ளிகள் வீதம், மொத்தம் 76 சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ. 7.28 லட்சம் மதிப்பீட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. 

விருதுக்குத் தேர்வு செய்யப்படும் பள்ளிகளின், பொதுத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் பங்களிப்பு, தினசரி கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்படும் புதுமைகள், வகுப்பறையில் தொழில்நுட்பப் பயன்பாடு, கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, விளையாட்டுப் போட்டிகள், கலைத் திருவிழா மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இது பள்ளிகளிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்கி, தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துகிறது.

எதிர்காலத்தில் கல்வி சிறந்த தமிழ்நாடு

பேராசிரியர் அன்பழகன் பெயரில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் தமிழ்நாட்டின் கல்விச் சூழலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துபவை. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுவது, ஆசிரியர்களுக்குப் புதிய பயிற்சி முறைகள் அறிமுகப்படுத்துவது, தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிப்பது போன்றவை கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும். இதனால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, விளையாட்டு, கலை போன்ற இணைச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு, பன்முக ஆளுமைகளாக வளர்வார்கள்.

இத்திட்டங்கள் மூலம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களால் வழிநடத்தப்படுகிறார்கள். கல்வித் தரம் உயர்வடைகிறது. இடைநிற்றல் சதவிகிதம் குறைந்து, உயர்கல்விச் சேர்க்கை அதிகரிக்கிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் சமமான கல்வி வாய்ப்புகளைப் பெற்று, அவர்களின் திறமைகளை வளர்க்கிறார்கள். 

எதிர்காலத்தில், தமிழ்நாடு ஒரு அறிவுசார் சமூகமாக, திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்கும் மாநிலமாக முன்னேறி, நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. பேராசிரியர் க. அன்பழகனின் கனவுகளை மெய்ப்பிக்கும் விதமாக, தமிழ்நாடு கல்விப் புரட்சியில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும். அதற்குப் பங்களிப்பு செய்யும் திட்டங்களுக்கு பேராசிரியரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது, அவருக்கான மிகச் சிறந்த நன்றிக்கடனாகவே இருக்க முடியும். 

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top