
சென்னை பெரியார் திடல் கடந்த 29.6.2025 அன்று மாலையில் மாணவர்களின் உற்சாக வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய, தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ நூலின் மக்கள் பதிப்பு மற்றும் மின்னூல் பதிப்புகளின் அறிமுக விழா, திராவிடர் கழகத் தலைவர், மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் அன்றைய தினம் நடைபெற்றது. திராவிடர் கழக மாணவர் அணியும், திமுக மாணவர் அணியும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று, சிறப்புரை ஆற்றியிருந்தார்.
நம் அனைவருக்கும் ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ புத்தகம் குறித்து, பல்வேறு விதத்திலும் இன்றைக்கு பாடம் எடுக்க வருகை தந்திருக்கின்றார் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள். இந்த நிகழ்வு நடைபெறுகின்ற நம்முடைய தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் இருக்கின்ற இந்த இடம்தான் நமக்கான தலைமைக் கழகம். இவ்விழா நடைபெறுகின்ற அரங்கம், நடிகவேள் அய்யா எம்.ஆர்.இராதா அவர்களுடைய பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கின்றது.
வரவேண்டிய இடத்துக்கு வந்திருக்கிறேன்.
நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ‘‘தந்தை பெரியாருடைய செல்லப்பிள்ளை அன்பில் தர்மலிங்கம்” என்று. எனது தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்கள், நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, அன்பில் என்கிற சிறிய கிராமத்தில், ஒரு மிகப்பெரிய கூட்டத்தையே நடத்தியிருக்கின்றார். இப்படி பல செய்திகள் நாம் கேள்விப்பட்டிருகலாம். அவை அனைத்தையும் ஒன்றிணைத்தது போல இன்றைக்கு, வரவேண்டிய இடத்தில் நாங்கள் வந்து நிற்கின்றோம்.

இந்த அரங்கில் கூடியிருக்கும் இளைஞர்கள், மாணவச் செல்வங்கள், கழக நிர்வாகிகள், சான்றோர்கள் அனைவருமே– எதற்காக இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது? என்பதைச் சிந்திக்கவேண்டும். ஏன் இப்படி ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று நினைத்தோம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
மனிதர்களைப் பாகுபடுத்தி பார்க்கக் கூடாது!
மிகவும் எளிமையாகச் சொல்லவேண்டுமானால், உடலில், தலை, தோள், தொடை, கால் என்று இவற்றை உடற்பாகங்களாகப் பார்க்கவேண்டுமே தவிர, அவற்றை குறியீடாக்கி மனிதர்களைப் பாகுபடுத்தி பார்க்கக்கூடாது என்கின்ற எண்ணத்தால் உருவாக்கப்பட்ட புத்தகம்தான் தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை.

இன்றைய இளைஞர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, கருத்தியல்ரீதியாக நிறையப் வாசிக்க விரும்புபவர்கள். இரண்டு, அனுபவரீதியாக, பல்வேறு கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள முயற்சிப்பவர்கள். இரண்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். அவர்களுகுச் சொல்லவேண்டிய செய்திகளை, வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துச் சொல்ல வேண்டும். புதிய புதிய வடிவங்களை அவர்கள் கவனிக்கிறார்கள். காது கொடுத்துக் கேட்கிறார்கள்.
ஓர் இளைஞன் ‘ராப்’ பாடல் பாடினால், அது நம் இளைஞர்களுகுப் பிடிக்கிறது. முற்போக்கான கருத்துகளை மனதால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் இளைய சமுதாயம் அமைந்திருகிறது. அப்படியான நம்முடைய இளைஞர்களுக்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
துணிச்சல் தந்த முதலமைச்சர்!
‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள், ‘‘இன்றைய காலச் சூழலில், இதுபோன்ற புத்தகத்தை எழுதுவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்’’ என்று சொன்னார். அந்தத் துணிச்சலை எனக்குக் கொடுத்ததே, என்னுடைய அரசியல் ஆசான் மாண்புமிகு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள்தான்.

இன்றைக்கு இந்தப் புத்தகத்தைப்பற்றி ஆங்காங்கே பேசப்படுகிறது; புத்தகத்தில் உள்ள கருத்துகளைப்பற்றி உரையாடல்கள் எழுகின்றன.
யார்ரா அந்தப் பையன்..?
நாந்தான்டா அந்தப் பையன்!
ஒன்றியத்தில் இருக்கக்கூடியவர்கள், ‘‘மதயானை’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறானே, யாருடா அந்தப் பையன்?’’ என்று கேட்பார்கள். அப்பொழுது, “யாருடா, அந்தப் பையன்?” என்ற கேள்விக்குப் பதிலாக, நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியாக மாறி, ‘‘நான்தான்டா, அந்தப் பையன்’’ என்று பதில் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய புத்தகமாக இருந்தாலும், இது உங்களுடைய புத்தகம். உங்களுடைய கல்வி உரிமைக்கான புத்தகம். பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் உங்களுடைய உடன்பிறப்புகளின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறதே, அதற்கு எதிராக எழுதப்பட்ட புத்தகம். அதனால்தான் சொல்கிறேன்.
“இந்தப் புத்தகத்தை எழுதியது யாரேன்று கேட்டால், ‘‘நான்தான்டா அந்தப் பையன்’’ என்று நீங்கள் தைரியமாகச் சொல்லவேண்டும்.

என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு பெருமை- ஒரு பேறு!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் திடலுக்கு பல நேரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான் வந்திருக்கின்றேன். நமது மாண்புமிகு துணை முதலமைச்சர், ஒரு புத்தகத்தை வெளியிடுகின்ற நிகழ்ச்சியில், நான் ஒரு பார்வையாளனாக கீழே அமர்ந்து பார்த்திருக்கின்றேன். பல நேரங்களில், திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக இந்த அரங்கத்திற்கு வந்திருக்கின்றேன். ஆனால், இம்முறை ‘மதயானை’ புத்தகத்தின் நிகழ்ச்சிக்காக இங்கே வந்திருக்கிறேன். எங்களுடைய தலைமை நிலையத்தில், எங்களுடைய அய்யாவினுடைய உரையைக் கேட்பதற்காக வந்திருக்கின்றேன் என்பதை, என்னுடைய வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு பெருமையாக, ஒரு பேறாக நான் கருதுகின்றேன்.
100 வயதைக் கடந்து நீங்கள் வாழவேண்டும்!

‘சுயமரியாதை இயக்கம்’ நூற்றாண்டு நிறைவு விழா காணும் காலகட்டத்தில், இதுபோன்ற புத்தகத்தை எழுத வேண்டிய தேவை இன்னும் நமக்கு இருக்கின்றது. நமக்கு வழிகாட்டியாக நம் ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள். ‘‘அய்யா, 92 அல்ல, 100 வயதைக் கடந்து நீங்கள் வாழ்ந்து, இந்தக் கருத்துகளைப் பரப்பவேண்டும், அய்யா’’.உங்களை நாங்கள் ஊக்கப்படுத்துகின்றோம் என்று சொன்னால், நீங்கள் ஓரிடத்தில் சும்மா இருக்க மாட்டீர்கள்? நாங்கள், உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்; ‘விடுதலை’யைப் பார்க்கின்றோம்; சமூக வலைதளங்களிலும் பார்க்கின்றோம்.ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாள், ஏதோ ஒரு கருத்தை நீங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.அந்த ‘எனர்ஜி’ உங்களுக்கு எங்கே இருந்து வருகிறது என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால், உங்களைப் பார்க்கும்போது, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு, இன்னும் உழைக்கவேண்டும்; இந்த சமுதாயத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கின்ற எண்ணம் எங்களுக்கு வருகிறது.குறிப்பாக சுயமரியாதை இயக்கம் நமக்குத் தந்த தலைவர்கள்தான், அறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.
புரவலர் அன்பில் தர்மலிங்கம்
தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இருந்தாலும், சுயமரியாதை இயக்கமாக இருந்தாலும், நீதிக்கட்சியாக இருந்தாலும், திராவிடர் கழகமாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், இதில் எல்லா இயக்கத்திலும் பணியாற்றியவர்தான் அய்யா புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்கள். அவருடைய பேரப் பிள்ளையாகவும், அதன் கடமையாகவும் இதுபோன்ற புத்தகத்தை எழுதி, இன்றைக்கு இந்த மேடையை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் சமுதாயமே, ஒன்றை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. அரசு, எப்படியெல்லாம் நம்மை வஞ்சிக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பைப் பயன்படுத்தியவன் தமிழன்!

மிகமிக பழைமையான மொழிக்காரர்கள் நாமெல்லாம். தமிழன் என்கின்ற இனம், தனித்துவமான இனம். மிகவும் பழைமையான மொழிக்குச் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல, அண்மையில் அறிவியல் கண்டுபிடிப்பு சொல்லிற்று – 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பைப் பயன்படுத்தியவன் தமிழன் என்ற பெருமையை நீங்கள் எல்லாம் மறந்துவிடக் கூடாது.Tamils is for Identity; English for Opportunity- தமிழ் என்பது அடையாளத்திற்கானது; ஆங்கிலம் என்பது வாய்ப்புக்கானது.இதை நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால், நம்முடைய அடையாளத்தை மறைக்கின்ற விதமாக ஒன்றிய பா.ஜ.க. அர இன்றைக்கு என்ன வெல்லாம் செய்கிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.அது எங்கே இருந்து ஆரம்பிக்கும் என்றால், இதுபோன்று என்.இ.பி என்ற இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய அறிவை மழுங்கச் செய்து, அவர்கள் என்னென்ன கருத்தை சொல்கிறார்களோ, அதை ஏற்றுக்கொண்டு, அது சரிதான் என்று நம்மையே பேச வைத்துவிடும்.
நம்முடைய விரல்களாலே, நம்முடைய கண்களைக் குத்திக் கொள்கின்ற நிலை!

கிட்டத்தட்ட நம்முடைய விரல்களாலே, நம்முடைய கண்களைக் குத்திக் கொள்கின்ற பணியைச் செய்வதுதான் என்.இ.பி.2020. அதைத் தெளிவுபடுத்தவேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம்.குறிப்பாகப் தமிழர்களுடைய அறிவு என்பது கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரைக்கும், தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்ற என்பது வரை இருந்தது. ஆனால், அதன் பிறகு அந்த சங்கங்கள் மருவ, மருவ, நம்முடைய கல்வி அறிவு நமக்குக் கிடைக்காமலே போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அதனை மூடிவிட்டார்கள்.
நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும் தேவைப்பட்டனர்!

மூடியிருந்த அந்தக் கல்வி அறிவு நமக்குக் கிடைப்பதற்கு, திறப்பதற்கு ஏறத்தாழ 17 நூற்றாண்டுகள் ஆயின. அதற்கு, நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், தந்தை பெரியார் போன்றவர்களும் தேவைப்பட்டார்கள்.அவர்கள் எல்லாம் வராமலிருந்திருந்தால், இந்த இயக்கமே பிறந்திருக்காவிட்டால், இப்படி ஓர் அரங்கத்தில், இப்படி சமமாக நாமெல்லாம் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியாது.அப்படிப்பட்ட ஒரு தெளிவை கல்வி அறிவின் மூலமாகத்தான் கொடுக்க முடியும் என்று நினைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.அதனால்தான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, விஞ்ஞானம் சார்ந்தும் சரி; தன்மானம் சார்ந்தும் சரி; ஒழுக்கம் சார்ந்தும் சரி. இதையெல்லாம் எது சொல்லித் தருகிறதோ, அதுதான் கல்வி. அதைச் சொல்லித் தராதது கல்வி அறிவாக இருக்க முடியாது என்று தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
17 நூற்றாண்டுகள் கடந்துதான் நமக்குக் கல்வி அறிவு கிடைத்தது!
17 நூற்றாண்டுகள் கடந்து தான் நமக்குக் கல்வி அறிவு கிடைத்தது , மிக எளிதாகவா அது நமக்குக் கிடைத்தது. கதவு திறந்தது, நம்முடைய பிள்ளைகள் எல்லாம் படிக்கச் செல்லலாம் என்கின்றபோது, ஹிந்தித் திணிப்பு என்று ஒன்று வந்தது.அதற்குப் பிறகு, சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான், நீ மருத்துவராக ஆக முடியும் என்ற நிலை இருந்தது.அதற்குப் பிறகு குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்று வந்தது.எல்லாவற்றையும் தந்தை பெரியார் அவர்கள், கையில் வைத்திருக்கும் கைத்தடியால், அடித்து அடித்து விரட்டினார். அவர் அப்படி செய்யவில்லை என்று சொன்னால், நமக்கு இந்த அறிவு கிடைத்திருக்காது.

1938-ஆம் ஆண்டிலேயே, “மதத்தையும், அறிவையும் தனியாகப் பிரித்து வைத்திடுங்கள். மதத்தைப் புகுத்தி, அறிவைத் தடுத்துவிட்டால், சுதந்திர ஞானம் வராது” என்று சொன்னவர் தந்தை பெரியார்., மதத்தைக் கையிலெடுத்தால், அந்தச் சமுதாயம் பாழ்பட்டுவிடும். அறிவியலையும், அறிவையும் கையிலெடுக்கும் சமுதாயமே முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற்காக எழுதப்பட்டதுதான் இதுபோன்ற புத்தகங்கள்.
Artificial Intelligence & Robotics

“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT)-வின் பாடத் திட்டங்களைப் பொறுத்தவரை, இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட வேத கருத்துகளை எப்படியெல்லாம் பாடங்களில் நுழைக்கலாம் என்று சிந்திக்கிறது. நம்முடைய மாநிலம், ஆர்டிபிசியல் இன்ட்டலிஜென்சையும், ரோபோட்டிக்ஸையும் கற்றுக்கொடுத்து வருகிறோம். நம்மைப் பொறுத்தவரையில், அறிவியல் சார்ந்து இருக்கவேண்டும். அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உலக அறிவோடு நாம் போட்டிப் போட்டுக்கொண்டே செல்லவேண்டும். இந்தியாவின் வேறு மாநிலங்களுடன் அல்ல, உலக நாடுகளுடன் நாம் போட்டி போடவேண்டும். நம்முடைய பிள்ளைகளை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல பல டெக்னாலஜியை நாம் நம்முடைய பாடத் திட்டங்களில் கொண்டுவருகிறோம்.
தேசிய கல்விக் கொள்கை-2020 உருவாக்கியது யார்?

ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை-2020 உருவாக்கியது யார்? மதவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் RSS அமைப்பினரும், அந்த அமைப்பைச் சார்ந்த 11 துணை அமைப்புகளும்தான். இந்த அமைப்புகள் ஒன்றுசேர்ந்துதான் தேசிய கல்விக் கொள்கை-2020 பிற்போக்குத்தனமான ஒரு ப்ராடக்ட்டைக் கொடுக்கின்றார்கள். அதை எப்படி நம்மால் வாங்க முடியும்? இந்த உண்மையைச் சொல்வதற்காகவே இந்தப் புத்தகத்தை நாங்கள் எழுதியிருக்கின்றோம். திராவிட இயக்கம், ‘திராவிட மாடல்’ அரசு என்று சொல்கிறோம் அல்லவா! அதிலிருக்கின்ற ஒவ்வொரு அமைச்சர்களும், தங்கள் துறை சார்ந்து, அதனுடைய கருத்துகள் சார்ந்து, அதனுடைய பொருள் சார்ந்து, கொள்கையிலிருந்து விலகிவிடாமல் பணியாற்றுகிறோம். அந்தக் கொள்கைப் பிடிப்புதான் இதுபோன்ற புத்தகங்களை எழுத வைக்கின்றது.
அடுத்த நாட்டுடன் நாம் போட்டி போடவேண்டும்!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் போட்டுத்தந்த பாதையில் நாம் பயணிப்பதால்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சொல்கிறார், ‘‘நீ எங்கள் மாநிலத்திற்குக் கொடுக்கவேண்டிய 2,152 கோடி ரூபாயை, நீ சொல்லுகின்ற கொள்கையை ஏற்றுக்கொண்டால், தருவேன் என்று சொன்னால், அதற்காக நீ 10 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுத்தாலும், எங்களுக்கு அந்த நிதி தேவையில்லை. அதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்வதற்குக் காரணம் அதுதான்.நாம், இவ்வளவு உரக்க ஒரு புத்தகத்தை எழுதுகிறோம். பல நேரங்களில், பல கருத்துகளை நாம் எடுத்துச் சொல்லுகின்றோம் என்கிறபோது, இன்னமும் அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாமல், தங்களுடைய திணிப்பையேதான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இளைய சமுதாயமாகிய உங்களிடம்தான்…

இந்தத் திணிப்புக்கு எதிராகப் பேசவேண்டிய மிகப்பெரிய கடமை யாருக்கு இருக்கிறது தெரியுமா? மேடையில் இருக்கின்ற எங்களுக்கு மட்டுமல்ல; எதிரே அமர்ந்திருக்கின்ற இளைய சமுதாயமாகிய உங்களிடமும் இருக்கின்றது. அதனை உள்வாங்கக்கூடிய கொள்கைக் கூட்டமாக, இந்த மாணவர் கூட்டம் அமைந்திடவேண்டும். அதற்காகவே நம்முடைய அன்புத் தம்பிகளோடு சேர்ந்து இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது..
ஆசிரியர் சொன்ன திருத்தங்கள்!

‘மத யானை’ புத்தகத்தில் உள்ள சிறு சிறு திருத்தங்களை நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்னார். அதனால்தான், அவரை நாமெல்லாம் ‘‘ஆசிரியர், ஆசிரியர்’’ என்று சொல்கிறோம் – அவர் சொன்ன திருத்தங்களை சரி செய்து, இன்றைக்குப் புதிதாக ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, ‘‘அய்யா, நீங்கள் சொன்ன திருத்தங்களை நான் செய்திருக்கிறேன்’’ என்று ஒரு மாணவனாக இன்றைக்கு அவரிடம் நான் சொன்னேன்.
சிவப்புக் கோடுகளும், பச்சைக் கோடுகளும்தான்!

இன்றைக்கு ஆசிரியர் அய்யா அவர்கள் என்னைப் பார்த்தவுடன், ‘‘நீங்கள் கொடுத்த புத்தகத்தை உடனே படித்து முடித்துவிட்டேன்; அந்தப் புத்தகத்தில் எங்கே பார்த்தாலும், சிவப்புக் கோடுகளும், பச்சைக் கோடுகளும்தான் இருக்கும்’’ என்று சொன்னார்.ஆசிரியர் அய்யா அவர்கள், கிழித்தது வெறும் சிவப்புக் கோடுகள் மட்டுமல்ல, மொழிக்காக தங்களு டைய இன்னுயிரை நீத்தார்களே, அந்தச் சிவப்புக் கோடுகள்மூலமாக அவர்களை நான் பார்க்கின்றேன்.அவர் கிழித்த பச்சைக் கோடுகள், நமக்கான உணர்வு களை, நம்முடைய தன்மானத்தைத் தூண்டுகின்ற விதமாக, படித்துக் கோடு போட்டிருக்கிறார். இங்கே வந்திருக்கின்ற தம்பிகள், ஒருமுறையாவது இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.இதை அரசியல் சார்ந்து நாங்கள் சொல்லவில்லை. கண்மூடித்தனமாக ஒன்றிய அரசு கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்த்து நாங்கள் பேசவில்லை.ஏறத்தாழ, பள்ளிக் கல்வித் துறை சார்ந்து மட்டும் எழுதப்பட்ட புத்தகம் இது. கல்லூரிப் பக்கமே இந்தப் புத்தகத்தில் போகவில்லை.
பெரியார் சொன்னதையே, இப்போது உங்களுக்குச் சொல்கிறோம்!
ஒரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, நான் என்னுடைய எல்லையைத் தாண்டி விடக்கூடாது என்பதற்காக, பள்ளி சார்ந்து மட்டுமே இந்த விழிப்பு ணர்வை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஏறத்தாழ 39 வகையான சரத்துகளின் மூலமாக நமக்குத் தேவையில்லாத திணிப்புகளை மேற்கொள்கிறார்கள். அதனால், மாணவச் செல்வங்கள் பாதிக்கப்படுகிறார்கள்; பெற்றோர் பாதிக்கப்படுகிறார்கள். என்னுடைய பெருமதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவேளை நாங்கள் சொல்வதில் தவறு இருக்கின்றது என்றால், நீங்கள் எங்களைத் தாராளமாகக் கேட்கலாம்.

தந்தை பெரியார் சொன்னதையே இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். ‘‘நாங்கள் சொல்வதை அப்படியே நீங்கள் நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களுக்கென்று ஒரு பொது அறிவு இருக்கிறது அல்லவா – அதை வைத்து, “ஆம், அன்பில் மகேஸ் சொன்னது சரிதான்’’ என்று உங்கள் மனதில் பட்டால், ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தப் புத்தகம் 240 பக்கங்கள் கொண்டது. 2 மணிநேரத்தில் படித்துவிடலாம். எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்… எப்படியெல்லாம் நம்மை வஞ்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும்.
நமக்கெல்லாம் பாதுகாப்பு அரண் நம்முடைய முதலமைச்சர்!

ஓர் அரணாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டையும், நம்முடைய பள்ளிக் கல்வித் துறையையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார். எந்தவிதத்திலும் பிற்போக்குத்தனத்திற்கு இடமில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால், எங்களுக்கான ஒரு கலங்கரை விளக்கம் – எங்களுக்கான ஒரு சாட்டிலைட் பெரியார் திடலில்தான் இருக்கிறது. இந்தத் திடல், எங்கேயெல்லாம் எங்களைப் பார்க்கிறதோ, அது சார்ந்து எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டே இருக்கின்றோம். அது சார்ந்து எங்களை நாங்கள் திருத்திக் கொண்டே இருக்கின்றோம் என்பதைச் சொல்வதற்காகத்தான், இன்றைக்கு இதுபோன்ற நிகழ்வில் நாம் பங்குபெற்றிருக்கின்றோம்.
மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றி!
இங்கே வருகை தந்துள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், இளைய சமுதாயத்திற்கும், பல்வேறு இயக்கத்தைச் சார்ந்திருக்கின்ற நம்முடைய நிர்வாகிப் பெருமக்களுக்கும், குறிப்பாக, இந்த மாலைப் பொழுதை, ஒரு பயனுள்ள மாலைப் பொழுதாக மாற்ற இங்கே வருகை தந்துள்ள நம்முடைய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியைத் தெரிவித்து, என்னுரையை நிறைவு செய்கின்றேன்” என உணர்ச்சித் தெறிக்கப் பேசினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அவர் ஆற்றிய உரை தி.க., தி.மு.க மாணவர் அணியினரிடையே மாபெரும் எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல!
மதயானை நூல் அறிமுக நிகழ்ச்சிக்கு முன்னதாக, தந்தை பெரியார் நினைவிடத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் முன்மொழிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முழங்க, மாணவரணியினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டது சிலிர்ப்படையச் செய்தது!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr