`தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ புத்தகத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதியிருந்தார். ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வியைக் காவி மயமாக்குவது, குலக் கல்வி முறையை ஊக்குவிப்பது, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பது என RSS-ன் சித்தாந்தங்களைத் தேசிய கல்விக் கொள்கை (NEP) வழியாக ஒன்றிய அரசு திணிக்க முயற்சிப்பதை குறித்து விரிவாக இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்.

`தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் 17.05.2025 அன்று நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கோபாலா கவுடா, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங், முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தகத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உரையாற்றினார். அதன் தொகுப்பை இங்கே பார்ப்போம்.
தாலாட்டிய பிள்ளைக்குப் பாராட்டு!
“தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ – இது, புத்தக வெளியீட்டு விழாவா? இல்லை, உரிமைக் குரல் எழுப்பும் கூட்டமா? என்று கேட்கத் தோன்றுகிறது. ஒன்றிய பாஜக அரசால் தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளையும், அரசியல் ரீதியாக அவர்கள் வஞ்சித்துக் கொண்டிருப்பதை எடுத்துச் சொல்லும் விதமாகவும் துணிச்சலோடு தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
உதயாவும் மகேஸும் என் கண் முன்னால் வளர்ந்த பிள்ளைகள். இன்றைக்கு அனைவரும் பாராட்டுகிற வகையில் சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது அளவில்லா மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறது. என் மனநிலை தாலாட்டி வளர்த்த மகனுக்குப் பாராட்டு கிடைக்கும்போது, ஒரு தாய் எப்படி மகிழ்ச்சி அடைவாரோ, அதே மனநிலையில் இருக்கிறது. ஏனென்றால், என் நண்பன் பெற்றெடுத்த மகன் மகேஸ்.
அன்பில் குடும்பம்!
எங்களுடைய குடும்பத்துக்கும், அன்பில் குடும்பத்திற்குமான நட்பு என்பது மூன்று தலைமுறை நட்பு. இத்தமிழறிஞர் கலைஞர் – அன்பில் தர்மலிங்கம், நான் – அன்பில் பொய்யாமொழி, உதயநிதி – அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்று இந்த நட்பு தொடர்கிறது. 1999 நாடாளுமன்றத் தேர்தல் நேரம் அது. திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், கலைஞர் அவர்கள் உரையாற்றிக் கொண்டு இருந்த மேடையில் இருந்த அன்பில் பொய்யாமொழி சிரித்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார்.
ஆனால், இரவு விடிவதற்குள்ளாக எங்கள் எல்லோரையும் அழ வைத்துவிட்டார். அப்போது, நான் தேனியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தேன். இடியாக வந்திறங்கிய செய்தியைக் கேட்டதும் திருச்சிக்கு வந்தேன். என் நண்பனுடைய உடலில் சாய்ந்து அழுதேன். அன்றைக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “என் பிள்ளைகளில் ஒருவரை இழந்துவிட்டேன்” என்று எழுதினார். இதுதான் எங்களது நட்பின் ஆழம். இந்தக் குடும்ப பாச உணர்வோடு, பொய்யாமொழியின் இடத்தில் இருந்து நூலாசிரியர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்!
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அடைந்திருக்கின்ற உயரங்களைப் பார்க்கிறேன். இல்லம் தேடிக் கல்வி, மாணவர் மனசு, எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், நம்ம பள்ளி நம்ம ஊரு, வானவில் மன்றம், மணற்கேணி செயலி, கோடைக் கொண்டாட்டம், கலைத் திருவிழா, தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஹை-டெக் லேப்கள், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா, பன்னாட்டு புத்தகத் திருவிழா, சாரண – சாரணியர் இயக்க மாநாடு, ஆசிரியர்களுக்கு டேப் எனப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். 234 தொகுதிகளிலும் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

ஆண்டுதோறும் 10, +1 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம், அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகரித்து வருகிறது. இடைநிற்றல் இருக்கக் கூடாது என்று மாணவர்களை திரும்பக் கல்விச் சாலைகளை நோக்கி அழைத்து வருகிறார். பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமாக நம்முடைய திராவிட மாடலை மாற்றியிருக்கிறார், அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
மதயானை: முத்தமிழறிஞர் கலைஞரின் எதிர்ப்புக் குரல்!
`தேசிய கல்விக் கொள்கை என்ற மதயானை தமிழகத்துக்குள் புகுந்து, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூகநீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்கு கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கே அறிக்கை வெளியிட்டார்.

கலைஞரின் வரிகளையே புத்தகத்தின் தலைப்பாக எழுதியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஒன்றிய பாஜக அரசைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் காவிமயமாக்க வேண்டும். முதலில் கல்வியைக் காவிமயமாக்க வேண்டும். அதற்காகக் கொண்டு வரப்பட்டதே இந்த தேசியக் கல்விக் கொள்கை. இந்தப் புத்தகத்தின் மூலமாக “மதவாதம் உருவாக்கும் அழிவுப் பாதையில் நாம் செல்லப் போகிறோமா? நம் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கும் சமூகநீதிப் பாதையை நோக்கிச் செல்லப் போகிறோமா?” என்ற மிக முக்கியமான கேள்வியை இந்த நாட்டை நோக்கி எழுப்பி இருக்கிறார். இதை ஒரு அமைச்சராக மட்டும் அவர் எழுதவில்லை. “சமூகநீதியை அடித்தளமாகக் கொண்டு உருவான தமிழ்நாட்டின் கல்விக் கூடத்தில் படித்து உருவான ஒரு இளைஞனாக இந்த நூலை எழுதி இருக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டின் இளைஞனாக, இந்திய நாட்டுக் குடிமகனாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாக, தன்னுடைய கடமையை சிறப்பாகச் செய்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் நாம் ஏன் சமூகநீதிப் பார்வையோடு தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று விரிவாக எழுதியிருக்கிறார்.
திராவிட மாடல் – ரோல் மாடல்!
எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால், அது நம் திராவிட மாடல். இன்னார் மட்டுமே படிக்க வேண்டும் என்று சொன்னால், அது பாஜக-வின் காவி மாடல். `எல்லார்க்கும் எல்லாம்’ என்று சொன்னால், அது நம் திராவிட மாடல் கருத்தியல். `எல்லாம் ஒருவர்க்கே’ என்று சொன்னால், அது ஆரியக் கருத்தியல். இதுதான் ஈராயிரம் ஆண்டுகளாக இந்தச் சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கின்ற போர். இன்றைக்கு நம்முடைய உயர்வுக்கும், மேன்மைக்கும் அடித்தளமாக இருப்பது கல்வி. அறிவுதான் நம்முடைய ஆயுதம். இன்று கல்விக்குத் தடை போடும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக நம்முடைய திராவிட மாடல் அரசு போர்வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை இட ஒதுக்கீட்டைச் சிதைத்துவிடும். இடஒதுக்கீடு இருக்கின்ற வரைதான், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும். பன்முகப் பண்பாட்டை NEP தகர்த்துவிடும்.
75 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டைச் சிதைத்து, சமஸ்கிருத பண்பாடு கொண்ட ஒற்றை தேசியத்தைக் கட்டமைப்பதே ஒன்றிய அரசின் ஒரே நோக்கம். தேசியக் கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளரும் என்று சில நாட்களுக்கு முன்னால், உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷாவே சொல்லி இருக்கிறார். எது நடக்கும் என்று நாம் தொடர்ந்து எச்சரித்தோமோ, அதை உள்துறை அமைச்சரே உறுதி செய்திருக்கிறார்.
To read more about the book release: Click
மாநிலத்தில் சுயாட்சி!
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் அழிக்கும் முயற்சி இது. இதைத் தடுக்க ஒரே வழி, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான். அதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும். பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும் மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக ஒன்றிய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக் கனியாக மாறிவிடும்.
மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய பண்பாடு இருக்கின்ற நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் படிக்கவேண்டும், எந்த பாடத்திட்டத்தில் படிக்கவேண்டும் என்று முடிவு செய்கின்ற அதிகாரம் மாநில அரசுகளுக்குத்தான் இருக்கவேண்டும். எனவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் வரை நம்முடைய போராட்டம் தொடரும். அதற்கு அன்பில் மகேஸ் எழுதியுள்ள இந்த நூல் ஊக்கமளிக்கிறது.
தமிழ்நாடு வெல்லும்!
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடி தராமல் முரண்டு பிடிக்கிறது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய அந்த நிதியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. இதற்கு எதிராக, நிச்சயமாகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரும். எப்படி, நாட்டிற்கே வழிகாட்டும் தீர்ப்புகளைப் பெற்று, இன்றைக்கு இந்திய நாட்டின், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்தோமோ, அதேபோல, இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம்.

தம்பி அன்பில் மகேஸ் அன்பில் – அறிவில் – ஆற்றலில் – பண்பில் – பாசத்தில் – பேச்சில் என்ற அந்த வரிசையில், இப்போது எழுத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: பெரியார் திடலில், கொள்கை முழக்கம் எழுப்பிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! - Anbil Mahesh Forever