
அன்பில் தர்மலிங்கம் அடிக்கல் நாட்டிய பள்ளியில் அன்பில் மகேஸ் நூற்றாண்டு கொண்டாடும் நிகழ்வு. `மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ எனப் பள்ளிக்குப் பல வருடங்களுக்குப் பிறகு திரும்பச் செல்வது அலாதியான மகிழ்ச்சியைத் தரும். `பள்ளியில் அமர்ந்த மேஜை’, `நிழல் தந்த மரம்’ என அனைத்தும் காவியமாகும். காலத்தின் காவியமாகிப்போன தனது தாத்தா அன்பில் தர்மலிங்கத்தின் நினைவுகளைச் சேகரித்து வைத்திருக்கும் ஒரு பள்ளிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்று வந்துள்ளார்.

மதுராந்தகம் அருகேயுள்ள நெல்வாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். 1973 டிசம்பர் 15-ல் இதே பள்ளியின் கூடுதல் கட்டடத்துக்கு அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த அன்பில் தர்மலிங்கம் அடிக்கல் நாட்டியிருக்கிறார். இன்று அதே பள்ளியில் நூற்றாண்டு நிறைவு வளைவினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்துவைத்திருக்கிறார். தலைமுறைகள் கடந்து வளர்ந்து நிற்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதற்கு இதுவே ஒரு சான்று.

`அன்பில்’ என்பதே அனைவருக்கும் பிடித்த பெயர்தான். அது என் பிறந்த ஊரின் பெயரும்கூட என்பதில் கூடுதல் பெருமை’ எனத் தனது தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்களின் பெருமைகளை ஒரு நேர்காணலில் அமைச்சர் கூறியிருந்தார்.
அன்பில் தர்மலிங்கம்: கலைஞரின் அநிருத்தப் பிரம்மராயர்
“புட்டபர்த்தி சாய்பாபா ஒரு நாள் முத்தமிழறிஞர் கலைஞரைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கே வந்து சென்றார். `உங்களைப் பார்க்க அவ்வளவு பேர் இருக்கும்போது நீங்கள் சென்று கலைஞரைச் சந்தித்து விட்டு வருகிறீர்களே’ என்று சாய்பாபாவைக் கேட்டார்களாம். `உங்களுக்குத் தான் அவர் கலைஞர், என்னைப் பொறுத்தவரையில் அவர் ராஜராஜ சோழன்’ என புட்டபர்த்தி சாய்பாபா பதிலளித்திருக்கிறார்.

அன்று ராஜராஜ சோழனின் அமைச்சராகப் பணியாற்றியவர் அநிருத்தப் பிரம்மராயர். இவர் அன்பில் ஊரைச் சார்ந்தவர். அதே அன்பில் கிராமத்திலிருந்து வந்தவர்தான் என் தாத்தா அன்பில் தர்மலிங்கம். ராஜராஜ சோழனாக கலைஞர் இருந்தார் என்றால், அவரிடம் பணியாற்றக்கூடிய அமைச்சராக அன்பில் தாத்தா இருந்தார் என்பதைப் பெருமையாகப் பார்க்கிறேன்.

அன்பில் தர்மலிங்கம் என்பது தாத்தாவின் முழுப்பெயராக இருந்தாலும், அண்ணா, கலைஞர் அனைவரும் தாத்தாவை `அன்பில்’ என்றே செல்லமாக அழைப்பார்களாம். 1956 திருச்சியில் நடந்த மாநாட்டில் கூட `அன்பில் அழைக்கிறார் அனைவரும் திரண்டு வாரீர்’ என அண்ணாவே அழைத்திருக்கிருக்கிறார்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr