தமிழ்நாட்டின் சுயமரியாதைப் பாதையில் இணைந்த கர்நாடகா. தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறுத்து தன் மாநிலத்திற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது கர்நாடகா. கர்நாடக மாநில கல்விக் கொள்கை நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

கர்நாடக மாநில கல்விக் கொள்கை சொல்வதென்ன?
நாட்டின் கல்விக் கட்டமைப்பையே கேள்விக்குரியதாக மாற்றும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டது ஒன்றிய கல்வி அமைச்சகம். கூட்டாட்சித் தன்மையைச் சிதைக்கும் வகையிலும், மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் மும்மொழிக் கொள்கை, குலக்கல்வித் திட்டம் எனப் பல பிற்போக்கான செயல்திட்டங்களைக் கொண்டிருந்தது தேசிய கல்விக் கொள்கை.
தலை குனிய மறுத்த தமிழ்நாடு!

இந்திய அரசமைப்பில் ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் கல்வியில் ஒன்றிய அரசு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது எனும் நிலையில், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-யின் குறிப்பிட்ட அம்சங்களை தமிழ்நாடு ஏற்க மறுத்தது. அதையடுத்து கடந்த ஆகஸ்ட் 08-ம் தேதியன்று, பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
இந்தச் சூழலில் கர்நாடக மாநிலமும் தனக்கான மாநில கல்விக் கொள்கையை கடந்த சில நாள்களுக்கு முன் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கர்நாடக மாநில கல்விக் கொள்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
கர்நாடக மாநிலக் கல்விக் கொள்கை (KSEP) முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
கர்நாடகாவில் பா.ஜ.க தலைமையிலான அரசு தேசிய கல்விக் கொள்கை (NEP) கடந்த 2020-ம் ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தரமான கல்வியை உறுதிசெய்ய புதிய மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றார். அதன்படி, மாநில கல்வி கொள்கையை வரையறை செய்வதற்கு கல்வியாளரும் யுஜிசி முன்னாள் தலைவருமான பேராசிரியர் சுக்தேவ் தோரட் (Sukhadeo Thorat) தலைமையில் 11 பேர்கொண்ட மாநில கல்வி கொள்கை ஆணையத்தை அமைத்தது கர்நாடக அரசு. இந்த ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியன்று கர்நாடக மாநில கல்விக் கொள்கையைச் சமர்ப்பித்தது.
பண்பாட்டை பிரதிபலிக்கும் கல்விக் கொள்கை!
கர்நாடக அரசின் மாநில கல்விக் கொள்கை, கல்வியில் மாநிலங்களின் உரிமையையும் அதிகாரத்தையும் வலுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. “ஒரே நாடு ஒரே கல்விமுறை’ எனும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாறாக, மாநில மக்களின் சமூக மற்றும் பண்பாட்டு இயல்புகளை அடிப்படையாகக்கொண்டு KSEP வகுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலமாக கர்நாடக மாநிலத்தின் மொழி, கலாசாரம், வரலாறு ஆகிய அடிப்படைகள் கல்வியமைப்பில் இயல்பானதாக இடம்பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
தனித்துவமான பாடத்திட்டம் & இருமொழிக் கொள்கை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (NCERT) பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டு, மாநிலத்திற்கென தனித்துவமான பாடத்திட்டத்தை உருவாக்க பள்ளி கல்விக்கான விரிவான பாடத்திட்டம் (Comprehensive Curriculum for School Education-CCSE) உருவாக்கப்படவிருப்பது மிக முக்கியமான மாற்றமாகும்.
அதோடு, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி / கன்னடம் கட்டாயம் மற்றும் இருமொழிக் கொள்கை (தாய்மொழி+ஆங்கிலம்) ஏற்கப்பட்டிருப்பதன் மூலமாக, மாணவர்களின் கற்றல் எளிமையானதாகவும் தனித்துவமானதாகவும் மாறும். இது இந்தி திணிப்பை எதிர்ப்பதோடு, உலகளாவிய ஆங்கில திறனையும் ஊக்குவிக்கிறது.
புதிய கல்வி அமைப்பு: 2+8+4 முறை
தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்த 5+3+3+4 எனும் கல்வி அமைப்பு முறைமைக்கு மாற்றாக 2+8+4 எனும் புதிய கல்வி அமைப்பை உருவாக்கியுள்ளது கர்நாடக மாநில கல்விக் கொள்கை. அதன்படி 2 ஆண்டுகள் – முன்பருவப் பள்ளி; 8 ஆண்டு – தொடக்கப் பள்ளி; 4 ஆண்டு – மேல்நிலைப் பள்ளி என்ற முறைமை பின்பற்றப்படவிருக்கிறது. இந்தக் கல்வி அமைப்பு முறைமை குழந்தைகளின் அடிப்படை வாசிப்பு, எழுதுதல், கணித திறன்களை உறுதிசெய்வதற்கேற்ப, தொடக்கப் பள்ளிக்காலத்தை நீட்டிக்கிறது. இதன்மூலம் கற்றல் இடைநிற்றல் விகிதம் பெருமளவு குறையும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
உயர் கல்வியில் சமத்துவ விரிவாக்கம்
மிக முக்கியமாக, கர்நாடகா தனியார் சுயநிதி பல்கலைக்கழகங்கள், மதிப்பிடப்பட்ட பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் அனைத்திலும் SC/ST/OBC இட ஒதுக்கீடு அமல்படுத்துகிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 15(5)-ன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தக் கொள்கை முடிவின் வழியாக, தனியார் கல்வி நிறுவனங்களும் சமூகநீதியைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகக்கூடாது என்கிற மகத்தான பார்வையை முன்வைக்கிறது.
அதுமட்டுமின்றி, அரசு & அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் பெண்களுக்கு இலவசக் கல்வி, குழந்தைத் திருமணத் தடுப்பு நிதி ஊக்குவிப்பு, உயர் கல்வி கற்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற ஆண்டு வருவாய் ரூ.10 லட்சம் வரை அதிகரிப்பு என கல்வியில் பாலினச் சமத்துவம் மற்றும் சமூகச் சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன.
நிர்வாகச் சீரமைப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை
பல கல்வி அமைப்புகளை ஒன்றிணைத்து ஒற்றை ஆணையம் உருவாக்கப்படுகிறது. DSERT → SCERT ஆக மாற்றப்பட்டு, பாடத்திட்டப் பொறுப்பு கல்வியாளர்களின் கைகளில் வழங்கப்படவிருக்கிறது. மாவட்ட அளவிலான கல்வி நிர்வாகமும் கல்வியாளர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்படும். மாநில தர மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டு, கற்றல்-கற்பித்தலில் தரக் கட்டுப்பாடு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு, கல்வியில் அரசியல் தலையீடுகளின் தாக்கத்தைக் குறைத்து, கல்வியாளர்களின் பங்கினை உயர்த்தும் விதமாக நிர்வாகக் கொள்கையைச் சீரமைக்க முன்வந்திருக்கிறது KSEP..
ஆசிரியர் நியமனம் மற்றும் பயிற்சி
காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை அடுத்த 5 ஆண்டுகளில் முழுமையாக நிரப்புவதற்காக முக்கிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. KEA எழுத்துத் தேர்வு+ பல்கலைக்கழக நேர்காணல், புதிய பேராசிரியர்களுக்கு கட்டாயப் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன. இதன்மூலமாக கற்பித்தல் தரம் உயர்வதோடு ஆசிரியர் பற்றாக்குறையும் சீர்செய்யப்பட்டு இரட்டை பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
ஆராய்ச்சி, புதுமை மற்றும் நிதி ஆதரவு
மாநில ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநிலத்திற்கான ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும். கல்வி நிதி கழகம் மூலம் குறைவான வருவாய் பின்புலம்கொண்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த கல்விக் கடன் வழங்கப்படும். இதன்மூலமாக உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகள் வழங்கும் ஆராய்ச்சி மனப்பாங்கும் ஊக்குவிக்கப்படும். நிறைவாக, உலகளாவிய கல்விச் சூழலை உருவாக்க, மாநிலத்தின் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் வெளிநாட்டு மாணவர் மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இது மாநிலத்தின் கல்வி பன்னாட்டு தரத்தை உயர்த்தும் என்கிறது கர்நாடக மாநில கல்விக் கொள்கை.
தேசிய இயக்கமாக…
கர்நாடக மாநிலக் கல்விக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான மாநிலங்களின் உரிமை மீட்புப் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் சுயமரியாதைப் பாதையில், கர்நாடக மாநிலமும் தனித்துவமான கல்விக் கொள்கையுடன் உருவாக்கியிருப்பது, எதிர்காலத்தில், இந்திய மாநிலங்கள் தங்களுக்கே உரிய கல்விக் கொள்கையை உருவாக்கும் தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.
மேலும் வாசிக்க:
- வழிகாட்டும் கல்லூரி களப்பயணம் -2025
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! -வயிறு நிறையட்டும்; செவிகள் திறக்கட்டும்!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
