இந்தியா டுடே கான்க்ளேவ் சௌத் 2025: கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டது – மாணவர்களே மையம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் மது பங்காரப்பா வலியுறுத்தல்”

 கோயம்புத்தூரில்  செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற இந்தியா டுடே கான்க்ளேவ் சௌத் 2025 மாநாட்டில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலை கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா கலந்து கொண்டனர். “ஓர் தேசம், பல வகுப்பறைகள் – தேசிய கல்விக் கொள்கை மாநிலங்களின் யதார்த்தங்களுடன் ஒத்துப்போகுமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில், கல்வி அரசியல் மற்றும் சித்தாந்தங்களின் பிடியில் சிக்காமல், மாணவர்களின் நலனையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை இரு மாநில அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

கல்வியில் காவிமயமாக்கலுக்கு எதிர்ப்பு

அமர்வில் இரு அமைச்சர்களும் கல்வியை “காவிமயமாக்கும் முயற்சிகள்” குறித்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கல்வி அரசியலின் செல்வாக்கிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு அறிவை கற்பிக்க வேண்டுமே தவிர சித்தாந்தங்களை அல்ல என்றும் வலியுறுத்தினர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் அடிப்படையிலான கல்விக் கொள்கை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல எனக் குறிப்பிட்டார். 

மது பங்காரப்பா, காவிமயமான பாடப்புத்தக உள்ளடக்கங்களை நீக்குவது தம் அரசின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியாக இருந்தது என்றும், தாம் அமைச்சராகப் பொறுப்பேற்றதும் எடுத்த முதல்நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று என்றும் தெரிவித்தார்.

தாய்மொழிக் கல்விக்கு ஆதரவு – கட்டாய இந்திக்கு எதிர்ப்பு

மொழிக் கொள்கை தொடர்பாக இரு மாநில அமைச்சர்களும் ஒரே நிலைப்பாட்டை தான்  எடுத்துரைக்கின்றனர். இந்தியை கட்டாயமாக்கும் முயற்சிகளை இருவரும் எதிர்த்தனர். 

மொழி என்பது அறிவின் அளவுகோல் அல்ல, அது தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமே என தமிழ்நாடு  அமைசச்ர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வலியுறுத்தினார். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகியவற்றில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர், இந்தியில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக அவரின் எதிர்காலம் தடுக்கப்படுவது அநியாயம் என அவர் கூறினார்.

கர்நாடகாவில் 5,000 இருமொழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதையும், பெற்றோர்களுக்கே தங்கள் குழந்தைகளுக்கான பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும்   கர்நாடக அமைசச்ர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

திறன் அடிப்படையிலான கல்வி – எதிர்காலத்தின் பாதை

இரு மாநிலங்களும் திறன் அடிப்படையிலான கல்வியை எதிர்கால வளர்ச்சியின் முக்கிய கூறாகக் கருதுகின்றன. “கல்வி மட்டுமே போதாது, திறனே எதிர்காலத்தை நிர்ணயிக்கும்” என்ற நோக்கில் கர்நாடகா ஆறாம் வகுப்பு முதல் “Skill at School” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கற்கும்போதே சம்பாதிக்கும் (Earn while you learn) வாய்ப்பை பெறுகின்றனர். இதற்காக தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITIs) மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் இணைந்து செயல்படுகின்றன என்றார் கர்நாடக அமைச்சர் மது  பங்காரப்பா.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சமூகநீதி இணைந்த அரசுக் கொள்கைகள் நடைமுறையில் உள்ளன. மதிய உணவுத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவை குழந்தைகளைப் பள்ளியில் தக்கவைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. தேசிய அளவில் இருந்து திட்டங்களை அப்படியே நகலெடுக்காமல், தமிழ்நாடு  தன் சொந்த கல்வி மாதிரிகளை உருவாக்கி வருகிறது. மனித மேம்பாடு மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் தமிழ்நாட்டின் முன்னேற்றம், அதன் கல்விக் கொள்கைகளின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

நிதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின் பங்கீடு

கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் இரு மாநில  அமைச்சர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% கல்விக்காக ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறினாலும், தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கே ரூ.46,767 கோடி ஒதுக்கியுள்ளது. இது ஒன்றிய அரசின் தேசிய ஒதுக்கீட்டான ரூ.78,000 கோடியுடன் ஒப்பிடும் போது சுமார் ஒரு பில்லியன் ரூபாய் அதிகம் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறிப்பிட்டார்.

மது பங்காரப்பா, ஜிஎஸ்டி வழியாக அதிக பங்களிப்பு செய்யும் மாநிலங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை என்றும், இதை மக்கள் ஒருநாள் கேட்கத் தொடங்குவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

NEET தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு

மருத்துவப் படிப்புக்கான NEET தேர்வை இரு மாநில அமைச்சர்களும் கடுமையாக எதிர்த்ததோடு  இது திறமையை அளவிடும் தேர்வாக இல்லாமல், பயிற்சி வகுப்புகளுக்குச் செலவு செய்யும் திறனை மதிப்பீடு செய்கிறது என்று அவர்கள் கூறினர். NEET இல்லாத காலத்திலேயே தமிழ்நாடு தரமான மருத்துவர்களை உருவாக்கி வந்ததாகவும், தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அல்ல, சுகாதார சேவையின் தரமே மாநிலத்தின் தரத்தை நிரூபிக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தினார்.

கல்விச் சமத்துவமே இலக்கு

ஒன்றிய அரசுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கல்வியில் சமத்துவம் மற்றும் அனைவருக்கும் அணுகுமுறை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இரு மாநிலங்களும் ஒரே பாதையில் உள்ளன. கல்வி என்பது எல்லா மாநிலங்களின் குழந்தைகளுக்கும் உரிமை எனவும், பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் மாணவர்களும் தங்களுடைய குழந்தைகளே எனவும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

அமர்வு முடிவில் இரு அமைச்சர்களும் அரசியல் வேறுபாடுகளை மறந்து நகைச்சுவையுடன் கலந்துரையாடினர். கல்வி அரசியலைத் தாண்டிய ஒன்றாக இருக்க வேண்டும், அதிலும் முக்கியமானது மாணவர்களின் எதிர்காலமே என்ற ஒருமித்த கருத்துடன் நிறைவடைந்தது.

Also Read :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

English
Scroll to Top