‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’

திருச்சியில் நடந்த திமுகவின் 12வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி முழக்கம்!

தமிழ்நாடு அரசியலின் திருப்புமுனை மையமாக விளங்கும் திருச்சியில், 09-03-2026 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12-ஆவது மாநில மாநாடு ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

சிறுகனூரில் திரண்டிருந்த லட்சக்கணக்கான கழகத் தீரர்களிடையே உரையாற்றிய கழகத் தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் 2026-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகத்தையும் முன்வைத்தார். முதலமைச்சர் தனது உரையில் திருச்சியுடனான கழகத்தின் 75 ஆண்டுகால பந்தத்தை நினைவுகூர்ந்தார். 

திருச்சியும் கழகமும்: வரலாறும் பாசமும்

“இதுவரை நடந்த திமுகவின் 12 மாநில மாநாடுகளில் 7 மாநாடுகள் திருச்சியில்தான் நடந்துள்ளன. தந்தை பெரியார் வாழ்ந்த ஈரோடு மாளிகை, அண்ணாவும் பெரியாரும் சிறைப்பட்ட இடம், கலைஞர் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் நடத்திய இடம் என அனைத்தும் திருச்சியிலேயே. 1953-இல் கைக்குழந்தையாக இருந்த தன்னை, சிறையில் இருந்த கலைஞரிடம் காட்டிய இடமும் இதே திருச்சிதான். திருச்சி என்றாலே திருப்பம், எழுச்சி, உணர்ச்சி மற்றும் மகத்தான வெற்றி“ என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

திராவிட மாடல் 5 ஆண்டுகாலச் சாதனைகள்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார். “14 ஆண்டுகள் கழித்து 11.19% பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் ஈர்க்கப்பட்ட 4.13 லட்சம் கோடி முதலீட்டைவிட, தற்போது 12.54 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், 33 புதிய சிப்காட் பூங்காக்கள் மற்றும் 13,500 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சாகுபடி பரப்பு 62.32 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறைக்கான நிதி 2,268 கோடியாக உயர்த்தப்பட்டு, 301 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது“ எனத் தரவுகளோடு தலைவர் பேசினார்!

எவராலும் மாற்ற முடியாத மக்கள் நலத் திட்டங்கள்

“திமுக அரசின் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளதால், யாராலும் இவற்றை நிறுத்த முடியாது“ என்று முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார். “பெண்களுக்கான திட்டங்களாக 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் மூலம் 910 கோடி பயணங்கள், ‘புதுமைப்பெண்’ மூலம் 6.95 லட்சம் மாணவிகளுக்கு நிதியுதவி.  19.34 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம்,
5.40 லட்சம் மாணவர்களுக்குத் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலம் 2.56 கோடி பேரும், ‘இன்னுயிர் காப்போம் 48’ மூலம்
4 லட்சம் உயிர்களும் காக்கப்பட்டுள்ளன“ எனப் பேசினார் முதலமைச்சர் அவர்கள்!

அரசியல் முழக்கம்: தமிழ்நாடு vs NDA

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்த முதலமைச்சர், இது“ `தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா?` என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்“ என்றார். கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ திட்ட அனுமதி என எதையும் தராத NDA கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் `நோ என்ட்ரி (No Entry)` என்று முழங்கினார். “எடப்பாடி பழனிசாமி தனது சுயலாபத்திற்காக அதிமுகவை டெல்லியிடம் அடகு வைத்துவிட்டதாகவும், பீகாரைப் போன்ற சூழ்ச்சிகள் தமிழ்நாட்டில் பலிக்காது“ என்றும் எச்சரித்தார்.

திராவிட மாடல் 2.0-விற்கு
நான் ரெடி… நீங்கள் ரெடியா?

`வெல்வோம் 200` என்ற இலக்கை முன்வைத்த முதலமைச்சர், “சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும் இந்த அரசு தொடர வேண்டும்“ என்று கேட்டுக்கொண்டார். ” திராவிட மாடல் 2.0-விற்கு நான் ரெடி… நீங்கள் ரெடியா?“ எனக் கேள்வி எழுப்பி, “ஏழாவது முறையும் நாம்தான்! இனி எப்போதும் நாம்தான்!” என்ற சூளுரையுடன் தனது உரையை நிறைவு செய்தார்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

English
Scroll to Top