அன்பில் IN சட்டமன்றம்!
2026 ஜனவரி 20 முதல் 24 வரை நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்வாக, மூன்றாவது நாளான ஜனவரி 22, 2026 அன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதுவரை 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து, உரிய தீர்வு காண தமிழ்நாடு அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

“15 முறை பேச்சு வார்த்தை – இது வரலாறு”
தமது பதிலுரையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கூறியதாவது: “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு கருத்துகளை இங்கு பதிவு செய்துள்ளார். ஆனால், இந்த நான்கரை ஆண்டுக் கால ஆட்சியில் 15 முறை அரசு ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இது ஒரு வரலாற்றுச் செய்தி.”
கடந்த கால ஆட்சிகளில் அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ போராட்டம் நடத்தினால், “எங்களை அழைத்துப் பேசுங்கள்” என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. “15 முறைக்கும் மேல் அழைத்துப் பேசியதோடு, அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நாளில் முதலமைச்சரின் சேம்பர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் மகிழ்ச்சியால் நிரம்பியது. இனிப்புகள் வழங்கி அவர்கள் கொண்டாடியதை அனைவரும் பார்த்தோம்.”
53,000 பேருக்கு பணி நிரந்தரம் – ஒரே கையெழுத்தில்!
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்ட அமைச்சர், “ஒரே ஒரு கையெழுத்து மூலம் 53,000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கிய பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கே உரியது” என்றார்.
அதேநேரம், முந்தைய ஆட்சியில் ESMA, TESMA சட்டங்களின் மூலம் நடந்த நிகழ்வுகளையும் அவர் நினைவூட்டினார். “ஒரே இரவில் 1 லட்சத்து 78 ஆயிரம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் யார் என்பதை அரசு ஊழியர்கள் இன்னும் மறக்கவில்லை. அதில் 13,000-க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், 10,000-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்களும் அடங்குவர்.”
திராவிட மாடல் 2.0 – அரசு ஊழியர்களுக்கான புதிய நம்பிக்கை
“இன்னும் 40 முதல் 60 நாட்களில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். அப்போது அரசு ஊழியர்களுக்கான புதிய நலத்திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்ற காத்திருக்கிறோம்” என்று அமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
TAPS – ஆசிரியர்களின் நன்றியின் அடையாளம்
“ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பேச்சுவார்த்தைக்கு வரும்போது முதலில் ‘நன்றி’ சொல்லித்தான் தொடங்குகிறார்கள். ஏன் தெரியுமா? 22 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமான TAPS-ஐ கொண்டு வந்ததற்காக” தான் என்றார். “TAPS போலவே, எங்கள் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுங்கள் என்றுதான் அவர்கள் கேட்கிறார்கள். யாரும் கோபத்துடன் பேசவில்லை. இதை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார்.

மனிதநேய அணுகுமுறை!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் உறுதியான அக்கறை, தொடர்ச்சியான பேச்சுவார்த்தை, நடைமுறை தீர்வுகள் — இவை அனைத்தையும் பிரதிபலிக்கும் இந்த சட்டமன்ற உரை, திராவிட மாடல் ஆட்சியின் அரசியல்-மனிதநேய அணுகுமுறையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது.
விடியல் தந்த முதல்வருக்கு நன்றி!
இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைக்கு வழிவகை செய்வதாக முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான சலுகைகளை பணி மூப்பு அடிப்படையில் நிறைவேற்றும் அறிவிப்பு 2026 ஜனவரி 24 அன்று வெளியானது. பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் மற்றும் ‘ஜாக்டோ-ஜியோ’ உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்கள்!
