மக்கள் மனம் கவர்ந்த மானியக்கோரிக்கை!

மானியக்கோரிக்கை யில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை செயல்படுத்தி வரும் எண்ணும் எழுத்தும் திட்டம், நலம் நாடி, மகிழ் முற்றம் போன்ற திட்டங்களின் சாதனைகள், புதிதாகச் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்துப் பேசியிருந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கல்வியைப் பற்றி பேசுகையில்,

கல்வியால் மக்களுக்கு சுயமரியாதையும் பாதுகாப்பும்
அமைந்திட வேண்டும் என்று சொன்ன தந்தை பெரியார்,
போட்டியும் பொறாமையும் பொய்ச் சிரிப்பும் இருக்கின்ற இந்த உலகில்
நாம் நேர்மையாக நடைபோடுவதற்கு
நமக்குத் துணையாக இருப்பது கல்வி மட்டுமே என்று சொன்னார்
பேரறிஞர் அண்ணா.

மானியக்கோரிக்கை உரையில் முத்தமிழ் அறிஞர்…

“வள்ளுவர் கோட்டம் கட்ட வேண்டும்,
வள்ளுவனுக்கு சிலை எடுக்க வேண்டும்
என்று எந்த தமிழறிஞர்களும் கோரிக்கை வைக்கவில்லை.

கணினி என்பது அனைவருக்கும் முழுமையாகச் சென்று சேர்வதற்கு முன்
எங்களுக்கு ஒரு டைடல் பார்க் வேண்டும் என்று
எந்த மாணவ சமுதாயமும் கொடி பிடிக்கவில்லை.

தன்னுடைய பிள்ளையும் இலவசமாகப் பேருந்திலே பயணம்செய்து
பள்ளிக்கூடம் சேர்ந்து பாடம் படிப்பான்
என்று எந்த பெற்றோரும் நினைத்துப் பார்க்கவில்லை.

ஒட்டுமொத்தமாக நுழைவுத்தேர்வு என்பதையே ரத்து செய்துவிட்டு
தன்னுடைய பிள்ளைகளும் மருத்துவர்கள் ஆவார்கள் என்று
கிராமப்புறத்தைச் சேர்ந்த எந்த பெற்றோரும் நினைத்துப் பார்க்கவில்லை.

கல்வி என்பது மேம்படுத்தப்பட்டு தன்னுடைய பிள்ளைகளும்
அமெரிக்கா வரை சென்று சம்பாதிப்பார்கள் என்று
எந்த கிராமப்புறத்தைச் சேர்ந்த பெற்றோரும் நினைத்துப் பார்க்கவில்லை.

சென்னை என்பது ஆட்டோமொபைலின் நகரமாக மாற வேண்டும் என
எந்தப் பொருளாதார நிபுணர்களும் சொல்லவில்லை

புதிதுபுதிதாக தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள்
தமிழ்நாட்டில்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று
எந்தப் பொறியாளர்களும் சொல்லவில்லை.

இவை அனைத்தும் நடந்தது. அதற்குக் காரணம் ஒருவர்.

ஒப்பனை செய்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம்
கற்பனை செய்தாலும் யாரும் கலைஞராக முடியாது!
அந்த கலைஞர் உறங்குகின்ற திசை நோக்கி வணங்குகிறேன்.

முதலவர் மு. க ஸ்டாலின் குறித்து மானியக்கோரிக்கை யில்..

கால் நூற்றாண்டு கடந்து அரை நூற்றாண்டு கடந்து
மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த
நான் முதல்வன் திட்டத்தினால் நான் பயனடைந்தேன் என்று
யாரவது ஒருவர் சொன்னாலும் போதும்
அதுவே எனக்கு மிகப்பெரிய பெருமை எனச் சொன்னவர்…
நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்.

மாணவரின் மனதை அறிந்து
எண்ணும் எழுத்துமாய் வாசிப்பு இயக்கமாய்
எங்கள் இல்லம் தேடி வந்தது கல்வி.

நம்ம ஸ்கூல் நல்ல ஊரு பள்ளி சென்று
முதலமைச்சரின் காலை உணவுண்டு
அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள
வானவில் மன்றங்களும்
மணற்கேணி செயலியும்,
ஆங்கில வழி ஆய்வகங்களும்,
புதிது புதிதாய் நூலகங்களையும் பெற்றோம்.

கூடி மகிழ்ந்திட மலர்ச்சி பொங்கிட கோடைக் கொண்டாட்டங்களும்
திறமையைக் காட்ட கலைத்திருவிழாக்களும்,
வெளிநாடு கல்விச் சுற்றுலா சென்று
கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்பதை அறிந்தோம்.

பள்ளி ஆண்டு விழா, தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள்,
சிறார் திரைப்படங்கள், செஸ் ஒலிம்பியாட், சாரண சாரணியர் இயக்கம்,
புத்தகத் திருவிழாக்கள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்,
அனைவருக்கும் ஐஐடி திட்டங்கள்,
பாரதியார், அண்ணா, பேராசிரியர் பெயரில் விருதுகள்,
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீடு தேடிக் கல்வி,
இயன்முறை மருத்துவம் என திராவிட மாடல் ஆட்சியில் பெற்றோம்
பலவழிக் கல்வித் திட்டத்தைக் கற்றோம்
ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்துக் கொண்டாடுவோம்!

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்களாய்
நான் முதல்வன், நாங்கள் புதுமைப் பெண்கள் என்று என்றும் கர்வம் கொள்வோம்.
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்போம்!

இன்றைய இளைய தலைமுறையின் ஈர்ப்பு சக்தி…
ஒரு கல்லை எடுத்தார், இவ்வளவு பேரும் சட்டமன்றத்திற்கு வந்தோம்.
ஒரு சொல்லை எடுத்தார், 40 பேரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தோம். நம் மாண்புமிகு துணை முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமை!

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் அறிவுசார்ந்த சமுதாயமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.
வீரனுக்கு வீரனாக, அரணுக்கு அரணாக,
அரசனுக்கு அரசனாக என் அரசியல் ஆசானாக இருப்பவர் முதலமைச்சர்.

ஒரு பறவை, தேனீயிடம் கேட்டது.
“தேனீ நீ கஷ்டப்பட்டு உழைத்து தேன் தயாரிக்கிறாய்
கடைசியில் அதை ஒரு மனிதன் களவாடிப்போவது வருத்தம் இல்லையா?” எனக் கேட்டபோது,

அதற்குத் தேனீ சொல்லியதாம்…
“மனிதனால் நான் தயாரித்த தேனைத்தான் களவாட முடியும்.
தேன் தயாரிக்கிற என் திறமையைக் களவாட முடியாது’’.

அப்படி முத்தமிழறிஞர் கலைஞரிடம் பெற்ற நிர்வாகத்திறமையின் மூலமாக,
எவ்வளவு நிதி நெருக்கடி வந்தாலும், எந்த திட்டங்களையும் நிறுத்தக் கூடாது
என்றவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.

உங்களால் எங்களின் வரிப்பணத்தை மட்டும்தான் களவாட முடியும்.
நிர்வாகத் திறமையை அல்ல!

NEP குறித்து நான் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
கணிதத்தில் LHS = RHS என்ற சூத்திரத்தை நாம் பயன்படுத்துகிறோம்.
ஆனால், ஒன்றிய அரசு உங்களுடைய LHS = RHS என்ற சூத்திரத்தை தூக்கிப்போடுங்கள்.
`On the whole the Education Should Be RSS’ எனச் சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

காகங்கள் அமர்கின்ற சிலைகளை நாம் பார்த்திருப்போம்.
மேகங்கள் அமர்கின்ற அளவுக்கு 133 அடியில் வள்ளுவருக்கு சிலை அமைத்துத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வள்ளுவரை உயர்த்திப் பிடிக்கிறோம் என்றால்
தமிழையும் நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம்!

இந்தியக் கோலேந்திகளின் அட்டகாசத்தைப் பார்த்து
சிரிக்கிறான் ஹிட்லர்
நம்மையும் மிஞ்சிவிட்டார்களே என உற்றுநோக்குகிறான் முசோலினி
ஜார் மன்னன் சிரிக்கின்றான்
லூயி மன்னன் வெட்கப்படுகின்றான்

ஜனநாயகம் ரத்தம் பட்ட உடலோடு கிடக்கின்றது
நாட்டினுடைய ஓர் அரணாக, அன்னையாக
அந்த ஜனநாயகத்தைத் தன் மடியில் கிடத்தி
அதைச் சரிசெய்கின்ற பணியில் நம் தமிழ்நாட்டு முதலமைச்சர்
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.

புராணக் கதைகளிலே வருவதுபோல
ஒருசில விஷ வண்டுகள் அவரது தொடைகளில் ஒருபக்கம் நுழைந்து மறுபக்கம் வருகின்றது. அவருக்கு ரத்தம் வருகின்றது.
பரவாயில்லை தமிழ் வண்டுகள்தானே என பெருமையோடு இருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல
மரத்தை வெட்டுபவன் களைப்பாறுவதற்கு
இன்னொரு மரத்தைத்தான் தேடுகின்றான்.
நம்மையும் ஒருநாள் வெட்டுவானே என்று
அந்த மரம் நிழல் தர மறுப்பதில்லை.

அதுபோல, தமிழ்நாட்டு முதலமைச்சர் தன்னை வஞ்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, தன்னை விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கும் அன்பை மட்டுமே பரிசாக வழங்குகிறார்.

அந்த அன்பு உள்ளம்
அடுத்த ஆண்டு தேர்தல் முடிந்த பிறகு
இந்த நாட்டையும் நாட்டு மக்களின் உள்ளத்தையும் ஆளும்!

அந்த அன்பு உள்ளத்தின் வயது 72
அதில் இருக்கும் 7 என்பது,
அடுத்த ஆண்டும் தேர்தல் முடிந்த பிறகு
7-வது முறையாக திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்.

அதில் இருக்கும் 2 என்பது,
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என இரண்டாவது முறையாக ஆளுநர் மாளிகையை அதிரவைப்பார்.
நம் கொள்கை எதிரியைப் பதறவைப்பார்.
தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மானியக்கோரிக்கை உரை தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை ஒன்றுசேர பிரதிபலித்தது.

To know more about 234/77 visit : click

1 thought on “மக்கள் மனம் கவர்ந்த மானியக்கோரிக்கை!”

  1. Pingback: பள்ளிக்கல்வித் துறையின் 2025-26ம் ஆண்டுகான மானியக் கோரிக்கை - திட்டங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

English
Scroll to Top