சென்னையில் ரூ.44.81 கோடி மதிப்பிலான நலத் திட்டங்கள் தொடங்கிவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்!


புதிய 11 முதல்வர் படைப்பகங்கள்!

சென்னை, அடுத்த 50 ஆண்டுகாலத்தில் அடைய வேண்டிய வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சியின் இந்த 5 ஆண்டு கால ஆட்சியிலேயே அடைந்துவிட்டது என்றார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதற்குக் கட்டியம்கூறும் வகையில் கல்வி, விளையாட்டு மற்றும் பொது உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (3.3.2026) பல்வேறு அதிரடித் திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். 

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் நோக்கில் சென்னை முழுவதும் 11 ‘முதல்வர் படைப்பகங்கள்’ மற்றும் நவீன நூலகங்கள் உள்ளிட்ட ரூ.44.81 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அசோக் நகர் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்:

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி

அசோக் நகரில் 12.74 கோடி ரூபாய் செலவில், 7,874 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை முதலமைச்சர் நேரில் திறந்து வைத்தார். 

குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய இந்த நூலகத்தில் தரைத்தளத்தில் வரவேற்பறை, குழந்தைகளுக்கான பிரத்தியேக நூலகக் கூடம், நூலகர் அறை, நாளிதழ் வாசிப்பு அறை, காத்திருப்போர் அறை, பிரதான வாசிப்பு மண்டபம், நூல்கள் வைப்பறை, புத்தக அலமாரிகள், நூல் வெளியீட்டு அரங்கம், தேநீர் விநியோகம், மின்சாதன கண்காணிப்பு அறை, மின்தூக்கி வசதிகள், ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நவீனக் கழிப்பறை வசதிகளும் அமைந்துள்ளன. 

முதல் தளத்தில், முதல்வர் படைப்பகம், கணினி அறை, கூட்டரங்கம், போட்டித் தேர்வு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு, அலுவலக அறை, நூல் வாசிப்பு அரங்கம், நூலகம், புத்தக அலமாரிகள், புத்தக வைப்பறை, எறிகருவி படங்காட்டி திறன் அறை, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நவீனக் கழிப்பறை வசதிகள் அமைந்துள்ளது.  திறந்தவெளித் தளத்தில், மேல்மட்ட உயரப் பகுதி, மின்தூக்கி அறை கூரை, 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைக் குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இப்படைப்பகத்தின் சுற்றுப்புறத்தில், திறந்தவெளி அரங்கம், அவசரகால வெளியேறும் வழி, 16,200 லிட்டர் கொள்ளவு கொண்ட தரைத்தள நீர்தேக்கத் தொட்டி, பசுமைத் தோட்டம், நடைபாதைக் கற்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

காணொலி காட்சி வாயிலாகத் திறக்கப்பட்ட
முதல்வர் படைப்பகங்கள் 

அசோக் நகர் முதல்வர் படைப்பகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திறக்கப்பட 10 முதல்வர் படைப்பகங்கள்…

திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி

 ஓட்டோரி, சுப்புராயன் தெருவில் 3.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்.

ஜமாலியா, மங்களபுரத்தில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்.

புளியந்தோப்பு, வெங்கடேசபுரத்தில் 1.28 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்.

பட்டாளம், பக்தவச்சலம் பூங்காவில் 2.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்.

ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி

மேயர் பாசுதேவ் தெருவில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்.

எழும்பூர் சட்டமன்றத் தொகுதி

சூளை, இராட்லர் தெருவில் 82 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி

ருக்கஞ்சேரியில் 1 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம். 

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடத்தில் 1.56 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்.

 மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி

ராஜா அண்ணாமலைபுரத்தில் 3.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்தார்

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, கொண்டித்தோப்பு, அம்மன் கோயில் தெருவில், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து 4.24 கோடி ரூபாய் செலவில் சென்னை நடுநிலைப் பள்ளியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்

 அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலைக் கடைகள்

திரு.வி.க. நகர் மண்டலம், ராஜா தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 34.70 லட்சம் ரூபாய் செலவில் 1,206 சதுர அடி பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலைக் கடைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 2,311 குடும்பங்கள் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விளையாட்டரங்கம்

திரு.வி.க. நகர் மண்டலம், லோகோ ஸ்கீம் 1வது தெருவில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதி மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 2.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த உள்விளையாட்டரங்கம் 22,560 சதுர அடி பரப்பளவில் குத்துச் சண்டை மேஜை, குத்துச் சண்டை உபகரணங்கள், வர்ணம் பூசுதல், மின்விளக்குகள், கழிவறை வசதிகள், கூடைப் பந்து மைதானம், பிக்கில் பால் மைதானம், நடைபாதை, செயற்கைத் தரை, சுற்றுப்புறச் சுவர், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், பசுமைப் படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம்

திரு.வி.க. நகர் மண்டலம், கபிலர் தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 7.64 கோடி ரூபாய் செலவில் சென்னை நடுநிலைப் பள்ளிக்காகக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்தக் கட்டடமானது தரைத் தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் 5,016 சதுர அடி பரப்பளவில் 17 வகுப்பறைகள், அரங்கம், 15 கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்கள்

இந்த விழாவில் அமைச்சர்கள் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் , முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். சென்னையின் மாணவர் சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும் இந்த ‘முதல்வர் படைப்பகங்கள்’ ஒரு மிகச்சிறந்த அறிவுத்தளமாக அமையும் என்பது உறுதி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

English
Scroll to Top