பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பதில்!

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘வருங்காலத்தை சந்திக்கிறோம் இன்று – Future Meets Today’ நிகழ்ச்சி சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்றது. இதில், ‘கல்வி யை காலத்திற்கேற்பக் கட்டமைப்போம்’ என்ற தலைப்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சிக்காக, 28 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 946 கேள்விகளை தொகுத்து அனுப்பியிருந்தனர். அதில், தேர்வுசெய்யப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்தார்.
கல்விக் கட்டமைப்பில் மாணவர் கருத்துக்கே முதல் முன்னுரிமை!
முதலாவதாக, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவி பூஜா ஸ்ரீ, ‘’சமூகநீதியிலும் கல்விச் சீர்திருத்தங்களிலும் என்றால், தமிழ்நாடு எப்போதும் முன்னிலையில் இருக்கிறது. கல்விக் கொள்கைகள், பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து தங்கள் கருத்துகளை மாணவர்களே நேரடியாக சட்டம் இயற்றுபவர்களிடம் பகிர முடியுமா? மாணவர் கொள்கை மன்றம் அமைக்க முடியுமா?’’எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
‘’முடியும்! மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக ஒரு கமிட்டி, The stakeholders of the SEP, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்களைச் சந்தித்துக் கருத்து கேட்பது வழக்கம். அதுதான் நல்ல நடைமுறை!
தங்களுக்கு என்ன வேண்டும் என்று மாணவர்களுக்குத்தான் தெரியும். அவர்களது கருத்துக்களை முதலில் உள்வாங்குங்கள் என்றுதான் மாண்புமிகு முதல்வர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவார். மாணவர் நலன் என்று வந்துவிட்டால், ஒவ்வொரு விஷயமும் பார்த்துப்பார்த்துச் செய்ய வேண்டும் எனச் சொல்வார்.
Students Policy Forum அமைப்பை வருங்காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நம் சிஸ்டத்துக்குள் கொண்டுவரலாம். நம் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!’’ என்றார்.
காலத்திற்கேற்பக் கல்வி முறையில் வேலைகள் தரும் வேலைகள் உருவாக்குவோம்!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவி அவந்திகா, ‘’புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு கல்லூரிக் கல்வி அளித்து முன்னேறச் செய்கிறது தமிழ்நாடு அரசு. எளிய பெண்கள் கல்வி பெறுவதோடு, நம்பிக்கையோடு வேலைவாய்ப்பிலும் முன்னேற தொழில்நுட்பப் பயிற்சி வழிகாட்டுதல்கள், தொழில் சார்ந்த ஆதரவுகள் தரும் வகையில் எதிர்காலத் திட்டம் இருக்கிறதா?’’எனக் கேள்வி எழுப்பினார்.

மாணவிக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘புதுமைப்பெண் திட்டம்’ ஒரு முக்கியமான நலத்திட்டம். ப்ளஸ் டூ முடித்த பிள்ளைகளை வேலைக்கு அனுப்பிடாதீங்க, கல்லூரிக்கு அனுப்பிவைங்க. அது 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் கல்லூரிப் படிப்பாக இருந்தாலும் மாதாமாதம் ஊக்கத்தொகை 1000 ரூபாய் உங்களுக்கு வந்து சேரும். 6 முதல் 12 வரை நீங்கள் அரசுப் பள்ளியில் படித்திருந்தால், இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
அதே மாதிரி, Employment Ability என்ற வார்த்தையையே பட்ஜெட்டில் கொண்டுவந்தது திராவிட மாடல் அரசுதான். வேலைகள் தரும் வேலைகளை உருவாக்குவதும் அதில் முதன்மையானது. அம்பேத்கர் பெயரில் தொழில்முனைவோர் திட்டம் உள்ளது. இப்போது பள்ளியிலேயே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் தொடங்கிவிடுகிறது!’’ என்றார்.
புத்தகம் , தொழில்நுட்பம் இரண்டுமே கல்விக்கு முக்கியம்
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவி கீர்த்தனா, ‘’Open AI, Chat GPT போன்றவையால் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைகிறது. டிஜிட்டல்மயமாக்கலால் இலக்கியத் திறன், தகவல் பரிமாறும் திறன்கள் மாறுகின்றன. இதனை மாற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘’குழந்தைகள் புத்தகத்தைப் படிக்க வேண்டியது அவசியம். புத்தகத்தைப் பார்த்து மனதில் பதிய வைப்பது போன்ற விஷயம் வேறு எதிலும் கிடைக்காது. அதேசமயம் Technology Adaptation இருக்க வேண்டும். இரண்டுமே நமக்குத் தேவை. இதற்காக 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவும் நம்முடைய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட உள்ளது என்றார்.
உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்குவோம்!
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக மாணவி ஹனேஷ்வர் வகீசன் ரேகா, பள்ளிக்காலம் முதலே, மாணவர்களுக்கு தங்கள் உள்ளூர் வளங்களைக்கொண்டு உள்ளூரிலேயே நிறுவனங்கள் மூலம் தொழில் தொடங்கும் பயிற்சியை வழங்க முடியுமா? எனக் கேட்டார்.

பதிலளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களைக் கேள்விகளைக் கேட்கவைத்ததே நமது கல்விமுறையின் சாதனைதான். மாணவர்கள் தங்கள் திறனை அறிந்து மேம்படுத்திக்கொள்ளவே, நமது மாண்புமிகு முதலமைச்சர் கொண்டுவந்துள்ள, அவரது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம்தான். இதன் மூலம் மாணவர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு நிறுவனத்தில் வேலைவாய்பையும் ஏற்படுத்தித் தருகிறோம். வரும்காலத்தில் இந்தப் படிப்பைப் படித்தால், இந்த நிறுவனத்திற்கு உள்ளூரிலேயே பணிக்குச் செல்லலாம் என்ற நிலையை உருவாக்குவோம்’’ என்றார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு கல்வி யின் பலன் தெரியும்
கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் மாணவர் ரகுநாத், ‘’சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே ஆராய்ச்சி சிந்தனையும், உலக சிந்தனையும் வளர்க்க முழுமையான கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மாணவர்களிடம் நடப்பு நிலை அனுபவங்களைக் காட்டிலும், தத்துவார்த்த சிந்தனைகளில் அதிக கவனம் செலுத்துகிறோமா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

மாணவிக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘’நம் மாணவர்களை அழைத்துக்கொண்டு சிங்கப்பூர், தென் கொரியா, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். சுற்றுலாவில் நாங்கள் முதலில் பார்வையிடுவது ஆய்வகங்களைத்தான். மனப்பாடம் செய்து படிக்கும் காலம் இனி இல்லை. மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.
எங்கள் ஆட்சியில், கல்வி சார்ந்து பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். இக்கால மாணவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்குப் பாடம் நடத்த, ஆசிரியர்களுக்கும் நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். வானவில் மன்றம் என்ற திட்டம் கொண்டு வந்துள்ளோம். அன்றாட விஷயங்களை மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் STEM குழுவினர் பள்ளிக்குச் சென்று நேரடி செயல்முறை காண்பித்து விளக்குகின்றனர். மாணவர்களுக்கு எளியமுறையில் புரியவைக்கின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டங்களின் பலன்கள் அனைத்தும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், குழந்தைகள் அடுத்த கட்டத்திற்கு வளரும்போது அவர்களது பெற்றோர்களும் உணர்கின்ற வண்ணம் தெரிய வரும்’’ என்றார்.
கல்வி செயல்படுகளுக்கு வேரென அரசு இருக்கும். விழுதுகளாய் நாம் இருப்போம்!
லயோலா காலேஜ் மாணவி வர்ஷா பி, ‘’மாநில கல்விக் கொள்கையை, பாடத்திட்டத்தையும் கல்வி நெறிமுறைகளையும் சீர்திருத்தி, அமைப்பை மேலும் ஜனநாயகமானதாகவும், பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றும் நோக்கத்தில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமிருந்து அவ்வப்போது கருத்துகளைப் பெற முடியுமா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘’முன்னாள் மாணவர்களுக்காகவே விழுதுகள் என்ற திட்டம் உண்டு. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுச் செல்லும் மாணவர்கள் தங்கள் பள்ளியையும் ஆசிரியர்களையும் மறந்துவிடக் கூடாது என்பதற்காக CSR Activity-யை உருவாக்கினோம். நம்ம முதல்வர் தனது சொந்த நிதி ஐந்து லட்சம் கொடுத்துத் தொடங்கிவைத்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் CSR நிதியாக மட்டும் 600 கோடி கிடைத்துள்ளது. முன்னாள் மாணவர்கள் கொடுத்த வழிகாட்டுதல்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளக் காரணமாக இருந்தது. விழுதுகள் மூலமாக சுமார் 7.5 லட்சம் முன்னாள் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்’’ என்றார்.
உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்!
பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி மாணவி ருஹமா எஸ். ஜஸ்பெர், ‘’நமது மாணவர்களிடையே சட்டம், அரசியல் தொடர்பான விழிப்புஉணர்வு குறைவாகவே உள்ளது. பள்ளிக் கல்வியில் அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள், கடமைகள், போன்ற கருப்பொருள்கள் சேர்க்கப்படுமா? இத்தகைய முயற்சி மாணவர்களுக்கு ஜனநாயகத்தில் பங்கேற்க உதவிகரமாக இருக்குமல்லவா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

மாணவியின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”இது முக்கியமான கேள்வி. ஓர் அரங்கத்தில் நடிகரைப் பிடிக்குமா என்றால், அனைவரும் அலறுகிறார்கள். மேடையில் ஏற்றி, அந்த நடிகரின் முதல் படம் என்ன, 50-வது படம் என்று கேட்டால், பெருமையாகச் சொல்கிறார்கள். அதுவே உங்களுடைய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பெயர் என்ன என்று கேட்டால், பதில் தெரியாமல் பலர் யோசிக்கிறார்கள்.
அரசியலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்காதீர்கள். இராசேந்திரன் என்ற மாணவன் தமிழ் மொழிக்காக உயிர்நீத்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அன்று என்ன பிரச்சனை இருந்தது, யாரெல்லாம் போராடினார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அரசியல் அறிவு அனைவருக்குமே தேவையான ஒன்று. நாட்டு நடப்பைத் தினமும் அறிந்துகொள்ளுங்கள்.
பள்ளியிலிருந்தே சட்டம் – அரசியல் இரண்டையும் அறிமுகப்படுத்துவது குறித்து ஏப்ரல் 24 அன்று சட்டமன்றத்தில் பேசுகிறேன். உங்கள் அனைவரையும் சட்டமன்றத்திற்கு அழைக்கிறேன்!’’ என்றார்.
இது வளர்ச்சிக்கான அடுத்த கட்டம்
விஐடி பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் சல்மான் ஃபாரிஷ், “உலகளவில் கல்வித் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், EdTech Solutions போன்ற மேம்பட்ட கல்வி தொழில்நுட்ப தளங்களை ஒருங்கிணைப்பதில் தமிழ்நாடு கவனம் செலுத்துமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மாணவர் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘’தொழில் நுட்பத்துறையில் தமிழ்நாடு முன்னேறி வருகிறது. பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை அதிகம். மாணவர்களுடன் நார்வே நாட்டிற்குச் சென்றிருந்த போது அந்நாட்டின் கல்வித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே நார்வே நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையாகும். மக்கள் தொகை அதிகமாக இருக்கும் போது, அதையொட்டி தீட்டப்படும் திட்டமும், அது மக்களை சேரும் வீதமும், அதற்கான விளைவுகளும் வெளிப்படும் நேரம் சிறிது தாமதமாகும்.
தமிழ்நாட்டில், அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என மொத்தம் 48000 பள்ளிகள் உள்ளன. AI பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையிலும், ஒன்றிய அரசு SSA நிதி ரூ.2152 கோடி தராமல் உள்ளது. நிதியின்மையால் மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் செயல்படுத்துகிறோம். ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கான கல்வி நிதி கேட்டு போராட்டமும் தொடர்கிறது. இதில் வெற்றியடையும் போது தொழில்நுட்பத் திட்டங்கள் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு அடுத்தகட்ட நிலைக்குச் செல்லும் வாய்ப்பு அமையும் என்றார்.’’
உரிமைகளைப் போராடி மீட்டெடுப்போம்…
ஒன்றிய அரசிடம் நமக்கான நீதி கிடைக்காதபோது இந்தத் தேசத்தின் நம்பிக்கை, நீதிமன்றங்கள்தான். நீதிமன்றத்தின் மூலமாகவே 69% இடஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி. மாணவர்களுக்கான 27% இட ஒதுக்கீடு கிடைக்க சட்டப்போராட்டம் நடத்தி கொண்டுவரப்பட்டது என எல்லாம் சாத்தியமானது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடிய தீர்ப்பு சமீபத்தில் வந்தது. ஆளுநரின் வரம்பு என்ன எனச் சம்மட்டி அடியாக வந்த தீர்ப்பு. மாணவர்களின் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால்,
‘உடம்பில் கையிருக்கும் காலிருக்கும்
மூக்கிருக்கும் முழியிருக்கும்.
ஆனால், உயிர் மட்டும் இருக்காது’
என்ற வசனத்தை உறுதிப்படுத்தக்கூடிய தீர்ப்பு.
நீட் விலக்கு உட்பட நம்முடைய உரிமைகளைத் தொடர்ந்து போராடி மீட்டெடுப்போம் என்றார்.

மேலும், மாணவர்கள் எனது ஆசிரியர்கள் எனப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களின் விடுபட்ட கேள்விகளுக்கும் சமூக வலைதளத்தில் பதிலளிக்கப்படும் என்றும், மாணவர் கேள்விகளில் இருந்து தேவைப்பட்டால் புதுத் திட்டங்கள் பிறக்கட்டும் எனவும் பேசினார்.
இறுதியாக, நிகழ்ச்சிக்கு பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவர் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.





Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: Kalvi Suttrula : Tamil Nadu's Government School Students Take Flight to Germany - Anbil Mahesh Forever