திராவிட மாடல் கல்வி: கேம்பிரிட்ஜ் முதல் ஆக்ஸ்ஃபோர்டு வரை – உலக அரங்கில் எதிரொலித்த சமூக நீதிக் குரல்!

லகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக  அரங்குகளில்  தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றியது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தனித்துவமான நிகழ்வு.

ஆம்! உலகம் போற்றும் அறிஞர்களும் அறிவியலாளர்களும் மேதைகளும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்களும் உரையாற்றிய அரங்குகளில் நீதிக்கட்சி தொடங்கி திராவிட மாடல் அரசு வரை தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை எடுத்துரைத்திருக்கிறார்.

அழைப்புக் கடிதங்களும் அரசியல் ஆசானின் அறிவுரையும் வாழ்த்தும்!

2025 செப்டம்பர் மாதம் 22ம் தேதி அன்று கேம்பிரிட்ஜ் தெற்காசியக் கழகத்தின் அமைப்பாளரும் (CAMSAF) கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியருமான முனைவர்.திரிஷந்த் சிம்லாய் அவர்களிடமிருந்து ஓர் அழைப்புக் கடிதம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டது.   

அந்தக் கடிதத்தின் சாராம்சம் இதுதான், ‘மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு வணக்கம். கேம்பிரிட்ஜ் தெற்காசியக் கழகம் சார்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 10ம் தேதியன்று உரையாற்றத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். ‘திராவிட மாடல் மற்றும் கல்வி: சாதனைகள் மற்றும் சவால்கள்’ (The Dravidian Model and Education: Achievements and Challenges) என்ற தலைப்பில் தங்கள் உரை அமையவேண்டும் என விரும்புகிறோம். இந்த நிகழ்ச்சி, ஒரு நேர்காணல் வடிவில் இருக்கும். ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவர் உங்களுடனான உரையாடலை வழிநடத்துவார். அதன் பிறகு திறந்தநிலை கலந்துரையாடல் (Open Discussion) இருக்கும். 

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கைகள் எவ்வாறு சமத்துவம், அணுகல் மற்றும் புதுமைகளை (Equity, Access, and Innovation) மேம்படுத்தியுள்ளன. இன்னும் இருக்கும் முக்கிய சவால்கள் என்னென்ன (Key Challenges that remain) அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து தங்களுடைய விரிவான அனுபவங்களையும் கருத்துகளையும் நாங்கள் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இந்த நிகழ்வு எங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கேம்பிரிட்ஜ் கல்விச் சமூகத்திற்கு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை அளிக்கும் என்றும் நம்புகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே செப்டம்பர் 22ம் தேதி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு யூனியன் சார்பில் அதன் தலைவர் மூசா ஹர்ராஜ் அவர்களிடமிருந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு ஓர் அழைப்புக் கடிதம் வந்திருந்தது. தமிழ்நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட ‘இல்லம் தேடிக் கல்வி’, வகுப்பறைகளில் டிஜிட்டல் கருவிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் மாணவச் சமூகங்களிடையே சமத்துவத்தை மேம்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, முறைசாரா உரையாடலில் (Fireside Chat) பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

1823ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்களால் ஆக்ஸ்போர்டு யூனியன் இல் நிறுவப்பட்டது. ‘மேற்குலகில் கருத்து சுதந்திரத்திற்கான கடைசி அரண்” என்று பாராட்டியிருக்கிறார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஹரோல்ட் மேக்மில்லியன். அரசியல், இலக்கியம், அறிவியல் மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளில் கட்டுப்பாடற்ற விவாதங்களுக்குப் பேர் பெற்ற இந்த அரங்கத்தில் இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத், சர் வின்ஸ்டன் சர்ச்சில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் மால்கம் எக்ஸ் போன்ற உலகத் தலைவர்கள் பங்கேற்று மாணவர்களிடையே விவாதித்திருக்கிறார்கள். 

ஒரே சமயத்தில் கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் இருந்து வரப்பெற்ற அழைப்பை அடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தனது பயணத்திற்கான அனுமதியையும் வாழ்த்துகளையும் பெற விழைந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். அப்போது, ‘புகழ்வாய்ந்த உலக அரங்குகளில் நம்முடைய திராவிட மாடல் அரசின் கல்வித் திட்டங்களையும் இலக்குகளையும் குறித்து உரை நிகழ்த்தச் செல்லும் உனக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகள். இந்த அரங்குகளில் நிகழ்த்தப்போகும் உரைகளைக் காட்டிலும் கேம்ப்ரிட்ஜ் தெற்காசியக் கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு யூனியனின் உறுப்பினர்களோடும் பல்கலைக்கழக மாணவர்களோடும் நிகழ்த்தவிருக்கும் கலந்துரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் அறிவுறுத்தி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பள்ளி கல்வித் துறையின் சாதனைகளை விளக்கும் நூல்கள் மற்றும் மாநில கல்விக் கொள்கை-2025 பிரதிகளுடனும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடைய இங்கிலாந்து பயணம் இனிதே தொடங்கியது.

லண்டனில் ‘காஃபி வித் அன்பில்!’  


லண்டன் சென்றடைந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், அங்குள்ள தமிழ்ச் சொந்தங்கள் ஏற்பாடு செய்த ‘காஃபி வித் அன்பில்’ எனும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். இதுவோர் அன்புப் பரிமாறல் நிகழ்வாக இருந்தாலும் கிட்டத்தட்ட அமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னோட்டமாகவே அமைந்தது. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் ­கல்­வித் திட்­டத்தின் வழியாக, லண்டனில் உயர்கல்வி பயிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் குருஷியா ஜெயராமன் மற்றும் ஆகாஷ் இருவரும் தங்களின் லண்டன் கல்விப் பயண அனுபவங்களைப் பகிர்ந்தனர். எந்தவித பொருளாதார பின்புலமும் இல்லாமல் தமிழ்நாடு அரசின் கல்வி உதவித் திட்டத்தால் மட்டுமே எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கு கார­ண­மான நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு நன்றி’ என்று கூறியபோது மகிழ்ச்சியில் நெகிழ்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கேம்பிரிட்ஜ் உரையும் நியூட்டனின் நிறக்கற்றையும்

10–10–2025 அன்று, கேம்­பி­ரிட்ஜ் தெற்­கா­சிய மன்­றத்­தில் பல்­க­லைக்­க­ழ­க மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் நிறைந்திருந்த அவையில் அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி அவர்களுடைய ‘திரா­விட மாட­லும் கல்­வி­ சாத­னை­கள் மற்­றும் சவால்­கள்’ உரை தொடங்கினார். 

“கேம்­பி­ரிட்ஜ் தெற்­கா­சிய மன்­றத்­தின் மாண்­பு­மிகு உறுப்­பி­னர்­களே, மதிப்­பு­மிக்க பேரா­சி­ரி­யர்­கள், மாண­வர்­களே வணக்­கம்!

கேம்பிரிட்ஜ் தென்னாசியக் கழகத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மதிப்புமிக்க ஆசிரியர்களே, மாணவச் சகோதரர்களே…

உங்கள் முன்பாக அமர்ந்திருக்கும் நான் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி அமைச்சராக மட்டுமல்ல, திராவிட மாடல் எனும் உலகளாவிய சித்தாந்தமும் அதன் அடிப்படை ஆயுதமாக விளங்கும் கல்விக் கட்டமைப்புகளும் எப்படி கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது என்பதற்கான நேர்சாட்சியாக இங்கு அமர்ந்திருக்கிறேன். அரசுப் பள்ளிகள் என்பவை வறுமையின் அடையாளம் அல்ல… அவை பெருமையின் அடையாளம் என மாற்றிக் காட்டிய அனுபவத்துடன் இங்கு அமர்ந்திருக்கிறேன்.

சர் ஐசக் நியூட்டன் தனது நிறப்பிரிகை கோட்பாடு குறித்து இதே கேம்ப்ரிட்ஜ் வளாகத்தில் தான் முன்வைத்திருந்தார். அத்தகைய மகத்தான அவையில் அறிவியல் கண்டுபிடிப்புக்கும் சமூக மாற்றத்துக்கும் இடையேயுள்ள ஆழமான தொடர்பை முன்வைக்க நினைக்கிறேன்.

எங்கள் கல்விப் பயணம் 2,000 ஆண்டுகளுக்கு மேலாகன தமிழ் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. கணியன் பூங்குன்றனாரின் ஒரு பாடல் உலகமயமாதலின் ஆரம்பக் கால வெளிப்பாடுகளில் ஒன்றைத் தந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ இதன் பொருள் ’எல்லாமே நம் ஊர்; எல்லோரும் நம் உறவினர் என்பது. 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பாடலின் உணர்வு தமிழ்நாட்டு மக்களிடம்  கடத்தப்பட்டு வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் இந்த வரிகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. மரபான தமிழ் இலக்கியம் எவ்வாறு உலகளாவிய மனித மதிப்பீடுகளைப் பேசுகிறது என்பதை நிரூபித்த வரிகள் இவை.

இந்தத் தத்துவம் நமது பெருங்கவிஞர் பாரதியாரின் வரிகளில் அதன் நவீன வெளிப்பாட்டைக் கண்டது. அவர் அறிவித்தார், “சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” “எட்டுத் திசைகளுக்கும் சென்று அறிவின் அனைத்துப் பொக்கிஷங்களையும் இங்கே கொண்டு வாருங்கள்” என்பது அவரின் வெளிப்பாடு. இவை வெறும் கவித்துவ வெளிப்பாடுகள் அல்ல; அவை திராவிட மாடலின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அடையாளங்கள்.  உலகமயமாதல், அறிவுத் தேடல், மற்றும் பேரறிவு ஆகியவை முழு மனித குலத்திற்கும் சொந்தமானது என்ற நம்பிக்கையையே நாம் முன்வைக்கிறோம். நமது மூதாதையர்கள் உலகளாவிய உறவுமுறையை அறிவித்ததுபோல, இன்று நாம் ‘அனைவரையும் உள்ளடக்கிய கல்வி’ என அழைப்பு விடுக்கிறோம். இந்தத் தத்துவ அடித்தளத்தையே திராவிட மாடல் கொண்டிருக்கிறது.

தமிழரின் பண்டைய ஞானத்தை சமூக மாற்றத்துக்கான கொள்கையாக மாற்றிய தொலைநோக்கைக் கொண்ட தலைவர்களின் தீப்பந்தத்தை நான் சுமக்கிறேன். 1910-களில் நீதிக்கட்சி அக்காலகட்டத்துக்கு உரிய அரசியல் எழுச்சியாக உருவெடுத்தது. அப்போது கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாரருக்கென மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.  சமூகத்தில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே கற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கல்வியின் பயனைப் பெற்ற சி.நடேசனார், டி.எம். நாயர், சர்.பி.தியாகராயர், பனகல் அரசர் ராமராய நிங்கர் போன்ற முன்னோடிகள் மட்டுப்படுத்தப்பட்ட சமூகத்தை உயர்த்தவும், சமத்துவமின்மையை ஒழிக்கவும் கல்வி மட்டுமே ஒரே ஆயுதம் என்று உறுதியாக நம்பினார்கள்.

மக்களுக்குக் கல்வியறிவை அளிக்க அரசியல்ரீதியிலான ஒன்றுபடுதலும், பொதுத் தளங்களில் அதற்கான உரையாடலும், சட்டமியற்றும் அதிகாரமும் அவசியம் எனக் கருதி அதற்கான விரிவான இயக்கத்தைக் கட்டமைத்தனர். 

1920-ல் அதிகாரத்தைக் கைப்பற்றி நீதிக் கட்சி அரசு அமைத்தபோது, கல்வி அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. நீதிக்கட்சியை வழிநடத்தி, திராவிட இயக்கத்தை உருவாக்கிய தந்தை பெரியார், சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளால் ஏற்படுத்திய அறிவு வெளிச்சம் என்றென்றும் திராவிட மாடலின் கல்வி வளர்ச்சிக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றது. அவர் வழியில் திராவிட இயக்கத்தை அரசியல் பாதைக்குள் கொண்டுவந்த பேரறிஞர் அண்ணா முன்னெடுத்த மொழிப்போராட்டம் மாணவர்களின் கல்வி உரிமைக்கு வலு சேர்த்தது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது மொழியுணர்வு அல்லது மொழித் திணிப்புக்கு எதிரானப் போராட்டங்களாகத் தோன்றலாம். ஆனால், இந்தித் திணிப்பு எப்படி தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பையும் பண்பாட்டு அடித்தளத்தையும் மொழி கலாசார உணர்வுகளையும் பறிக்கும் என்பதை அன்றே உணர்ந்திருந்தார் அண்ணா. 

வெற்றிகரமான அவரது அணித்திரட்டல் இருமொழிக் கொள்கை என்ற ஒரு பிரதான கருவியாக மலர்ந்தது. இன்றைய தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு இருமொழிக் கொள்கையே மாபெரும் கவசமாகத் திகழ்கிறது. கல்வி நமது மக்களின் தேவைகளுக்குச் சேவை செய்ய வேண்டும்; வெளிப்புறத் திணிப்புகளுக்காக அல்ல என்பதை எல்லோருக்கும் புரியும் மொழியில் நிறுவினார் அண்ணா.

இந்த அர்ப்பணிப்பு முத்தமிழறிஞர் கலைஞரிடமிருந்து தொடர்ந்தது. மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், உயர்க்கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து, கணினி கல்வி, இந்தியாவுக்கே முன்னோடியாக ஐடி கொள்கை, பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளை நிறுவி உயர்கல்வியை ஜனநாயகமாக்கிய தொலைநோக்காளர் முத்தமிழறிஞர் கலைஞர். இவர்களே திராவிட மாடலின் ஆரம்ப கால கதாநாயகர்கள்! 

இன்றைய நிலையில், எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தன்னிகரற்று விளங்கும் திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு கல்வியில் அடைந்திருக்கும் சாதனையை உலகம் வியக்கிறது. புரட்சிகரமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்களின் வழியாக  எல்லார்க்கும் எல்லாம் எனும் திராவிட இயக்க மரபின் தொடர்ச்சியை முன்னெடுத்து வருகிறோம். நமது கல்வி அமைப்பையும் முன்னெப்போதும் இல்லாத உயரங்களுக்கு உயர்த்தியிருக்கிறோம்.

110 ஆண்டுகளுக்கும் மேலாக, நீதிக்கட்சியிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு தலைவரும் திராவிட மாடலின் கோட்பாடுகளுக்கு உரம் சேர்த்திருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி; கல்வியின் வழியாக சமத்துவம், சமூகத்தைக் கட்டுப்படுத்தும் சங்கிலிகளை உடைப்பது. கல்வி அடிப்படையிலான மாற்றத்திற்கான தளராத அர்ப்பணிப்பு இவையே திராவிட மாடலின் கல்விக் கொள்கை. இவை கொள்கைத் தொடர்ச்சி மட்டுமல்ல; மனித கண்ணியத்திற்கும் சமூக நீதிக்கும் வலுசேர்க்கும் பண்பாட்டுப் பணியையும் சேர்த்தே பாதுகாப்பவை. 

நூற்றாண்டு சமூக நீதி: திராவிட பரிணாம வளர்ச்சி

1920-இல் நவம்பர் மாதம், கல்விக் கூடங்களில் பசித்த குழந்தைகளுக்கு உணவளிக்கும்  நீதிக்கட்சித் தலைவர்களின் புரட்சிகரமான நடவடிக்கையோடு தொடங்கியது திராவிட மாடல் கல்விப் பயணம். நீதிக் கட்சியின் தலைவரும் மெட்ராஸ் மாநகராட்சித் தலைவருமான சர்.பி.தியாகராயர், சென்னை மாநகரிலுள்ள (அன்றைய மெட்ராஸ்) ஆயிரம் விளக்கு பகுதியில் முதல்முதலாக இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அது வெறுமனே வறுமைக்கு எதிரான திட்டமாக மட்டுமல்லாமல் -சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான ஆயுதமாகவும் இருந்தது.  

1920-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாள் வரை, கல்வி பெரும்பாலும் பாகுபாட்டை விதைத்துவந்த சமுதாயத்தினால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒன்றாகவே நீடித்தது. இது பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல, சமுதாயத்தின் கட்டமைப்பே பட்டியலிடப்பட்ட வகுப்புகள், பழங்குடி இனங்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து, ஒன்றாகக் கற்று, அல்லது ஒரே இடத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாதவாறு அமைந்திருந்தது.

முதன்முதலாக இலவச மதிய உணவுத் திட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, எந்தவொரு குழந்தையும், அவர்களின் சாதி, வர்க்கம் அல்லது சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஒன்றாக அமர்ந்து, ஒன்றாக உணவு உண்டு, ஒன்றாகக் கற்க வேண்டும் எனும் தீவிரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  உணவு உண்ணுமிடம் சமத்துவத்தின் முதல் வகுப்பறையாக மாறியது. பகிர்ந்து உண்ணப்பட்ட உணவு மனித மாண்பின் முதல் பாடமாக அமைந்தது. அதன் பலன்கள் உடனடியானதாகவும் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநகராட்சிப் பள்ளியின் மாணவர்களின் வருகை 811 இலிருந்து 1,671 என இரு மடங்காக உயர்ந்தது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு மிக்க தலைமையின் கீழ், 2022 செப்டம்பர் 15 அன்று இந்தியாவின் முதல் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தது திராவிட மாடல் அரசு.  இன்று, அந்த புரட்சிகரமான திட்டத்தில், 32,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20.59 லட்சம் மாணவர்கள் பசியாறுகிறார்கள். ரூ.600 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் எல்லா பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளும் காலை உணவுக்கு ஒன்றாக அமரும்போது, 1920-ல் தொடங்கிய அதே புரட்சிகரமான செயலில் பங்கேற்கிறார்கள். அதுமட்டுமல்ல மாணவர்கள் பள்ளி வருகையில் 40% முன்னேற்றத்துக்கும் தொடக்கக் கல்வி இடைநிற்றல் ‘0’ சதவிகிதம் எனும் மாற்றத்துக்கும் காலை உணவுத்திட்டம் அடிகோலியது. இத்திட்டத்துக்கு  சர்வதேச அங்கீகாரமாக இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளும் திராவிட மாடலை ஏற்றுக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட மாடலின் அடிப்படைக் கோட்பாடுகள்

வழக்கமான அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுத்தும் ஐந்து அடிப்படைத் தூண்களின் மீது திராவிட மாடலும் கல்வியும் நிலைபெற்றிருப்பதாகக் குறிப்பிடலாம்.

முதலாவது: எல்லோருக்கும் எல்லாம் எனும் அணுகுமுறை 

“எல்லார்க்கும் எல்லாம்” இலவசம் என்பதாக மட்டும் அல்லாமல் கல்விக்கு அப்பால் ஒரு விரிவான சூழல் அமைவை திராவிட மாடல் உருவாக்கியிருக்கிறது. இலவச சைக்கிள்கள் (ஆண்டுக்கு 5.47 லட்சம்), மடிக்கணினிகள் (15.7+ லட்சம் விநியோகம்), இலவசப் பேருந்து பயண அட்டைகள், இலவச சீருடைகள், சமச்சீர் கல்வித்திட்டம், இலவச பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட திட்டங்கள் இதற்கு நல்ல சான்றுகள். கல்விச் சூழலை எல்லோரும் அணுகுவதற்கும், சமத்துவமான நிலையை உருவாக்குவதற்கும் இந்தத் திட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன. திருவள்ளுவரின் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – எல்லா உயிர்களும் பிறப்பால் சமம்’ எனும் கோட்பாட்டையே நாங்கள் பிரதிபலிக்கிறோம். 

இரண்டாவது: உள்ளடக்கத்தின் மூலம் சமூக நீதி

திராவிட மாடலின் திட்டங்கள் வெறும் நலத்திட்டங்கள் அல்ல, அவை உள்ளடக்கத்தின் மரபைக் கொண்டவை. புதுமைப் பெண் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்ற 2.73 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி, அவர்கள் உயர்கல்வி பெறுவதை ஆதரிக்கிறது. தமிழ்ப் புதல்வன் திட்டம் 3.28 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கி ஆதரவு அளிக்கிறது. உள்ளடக்கிய கல்விச் செயல்பாடுகளால் மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை 85.19% ஆக அதிகரித்திருக்கிறது. அன்பு கரங்கள் திட்டம் 6,082 ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கி அவர்களின் வாழ்க்கையை மதிப்புடன் உயர்த்துகிறது. நாங்கள் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் வழங்கவில்லை. அவர்களின் இருப்பை கண்ணியப்படுத்தி, அவர்களுடைய எந்தக் கனவும் பொருளாதாரத் தடைகளால் கைவிடப்படாமல் பாதுகாக்கிறோம்.

மூன்றாவது: சிறப்பானவற்றைப் பரவலாக்குதல்

முன்பு, தனியார் கல்வி நிறுவனங்களின் விலையுயர்ந்த சாதனங்களாக இருந்த கற்றல் உபகரணங்கள் இப்போது தமிழ்நாட்டின் ஒவ்வோர் அரசுப் பள்ளியிலும் அடிப்படை உபகரணங்களாக மாறியுள்ளன. தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்.  டிஜிட்டல் கற்றலை மேம்படுத்த, 31,129 அரசு தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி மதிப்பீட்டில் 79,723 கைக்கணினிகள் வழங்கியிருக்கிறோம். மைக்ரோசாப்ட் உடன் இணைந்து, எங்கள் மாணவர்களுக்கு முறையான AI குறித்த கல்வியும் வழங்கப்படுகிறது.

நான்காவது: ஆதார அடிப்படையிலான புதுமை

எங்கள் கொள்கைகள் அளவிடக்கூடிய முடிவுகளில் வேரூன்றியவை. இலவச சைக்கிள் திட்டம், 2010-11இல் 23.6% ஆக இருந்த பெண்களின் பள்ளி இடைநிற்றலை 2023-24இல் 4.4% ஆகக் குறைத்தது. IIT டெல்லியின் ஆய்வு, கிராமப்புற பெண்கள் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது ஒரு தசாப்தத்தில் இரு மடங்காக உயர்ந்ததை உறுதிப்படுத்தியது. தமிழ்நாடு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டங்களில் 0% இடைநிற்றலை அடைந்தது – இந்தியாவில் முதல் மாநிலமாக இந்தச் சாதனையைப் பெற்றது. எங்கள் 7% மேல்நிலை இடைநிற்றல் விகிதம், தேசிய சராசரியான 10.9% உடன் ஒப்பிடும்போது சிறப்பாக உள்ளது.

ஐந்தாவது: மொழி மற்றும் பண்பாட்டு பெருமை

நாங்கள் எங்கள் தமிழ் அடையாளத்தைக் கொண்டாடுகிறோம், அதே வேளையில் உலக அறிவை ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் இரு மொழிக் கொள்கை மொழி பன்முகத்தன்மையைப் பாதுகாக்கிறது, அதே நேரத்தில் சர்வதேச போட்டித்தன்மையை உறுதி செய்கிறது. இது குறுகிய பிராந்தியவாதம் அல்ல – இது பண்பாட்டு பெருமையில் வேரூன்றிய நம்பிக்கையுள்ள உலகளாவிய அணுகுமுறை.

கல்வி சிறப்பு: உலக அளவிலான அங்கீகாரம்

எங்களது திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை சர்வதேச மற்றும் இந்திய அரசின் புள்ளிவிபரங்களே பறைசாற்றுகின்றன. NIRF-2025 தரவரிசையில் இந்தியாவின் முதல் 100 உயர் கல்வி நிறுவனங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை – இது நாட்டின் முதன்மை நிறுவனங்களில் 17% ஆகும். வேறு எந்த மாநிலமும் எங்கள் தரத்தை எட்டவில்லை. IIT மெட்ராஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மிக முக்கியமாக, எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் இப்போது இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுகிறார்கள். ‘அனைவருக்கும் IIT’ முயற்சியின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வழிகாட்டுதல் பெற்றனர், இந்த ஆண்டு 363 அரசுப் பள்ளி மாணவர்கள் IIT மெட்ராஸில் BS Data Science படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் நிகழ்வு. தினக்கூலி தொழிலாளர்கள், ஹோட்டல் தொழிலாளர்கள், விவசாயிகளின் குழந்தைகளான அரசுப் பள்ளி மாணவர்கள் திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேரும்போது, என் சொந்த குழந்தைகள் வெற்றி பெற்றது போல மகிழ்ச்சியில் திளைக்கிறேன்.

எங்களுடைய திராவிட மாடல் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் 2022 முதல் 41.38 லட்சம் மாணவர்களுக்குப் பயனளித்துள்ளது. இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுல்ல- ஒவ்வொரு குடும்பத்திலும் விதைக்கப்பட்ட மாற்றங்கள். ஒவ்வொரு கனவையும் நனவாக்கி, ஒவ்வொரு தடைகளையும் உடைத்தெறிந்து இந்தச் சாதனைகளைப் படைத்திருக்கிறோம். இது கல்வி வளர்ச்சி மட்டுமல்ல; வேலைவாய்ப்பை உறுதி செய்து, திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கி, அறிவியல் சார்ந்த தலைமுறையிடம் பகுத்தறிவைப் புகுத்தி, சமூகநீதியை உறுதி செய்யும் ஒரு சமூகப் புரட்சிக்கு நிகரான மாற்றம்.

நியூட்டனின் நிறங்கள்!

சர் ஐசக் நியூட்டனின் நிறப்பிரிகை கோட்பாடு குறித்துக் குறிப்பிட்டேன் அல்லவா? எங்களுடைய கல்வித் தத்துவத்துக்கும் நியூட்டனின் நிறப்பிரிகை கோட்பாட்டுக்கும் இடையே ஒரு சக்திவாய்ந்த ஒற்றுமை இருப்பதை நான் உணர்கிறேன். ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன், நியூட்டன் நிறப்பிரிகை குறித்த தனது புரட்சிகர பரிசோதனையை மேற்கொண்டார். 

இருண்ட அறையில், ஜன்னல் கதவில் ஒரு சிறு துளையை உருவாக்கி, ஒரு ஒற்றை வெள்ளை ஒளிக்கற்றை உள்ளே நுழைய அனுமதித்தார். இந்த ஒளிக்கற்றை, கேம்பிரிட்ஜின் ஸ்டவர் பிரிட்ஜ் கண்காட்சியில் வாங்கிய கண்ணாடி பிரிஸத்தில்பட்டபோது, மாயாஜாலம் நிகழ்ந்தது. தூய வெள்ளை ஒளி ஏழு அற்புதமான வண்ணங்களாக – ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு  எனப் பிரிந்தது. நியூட்டனின் இந்தக் கண்டுபிடிப்பு ஒளியின் புரிதலைப் புரட்சிகரமாக்கியது. வெள்ளை ஒளியில் அனைத்து வண்ணங்களும் இருப்பதை அவர் நிரூபித்தார். பிரிஸம் அந்த வண்ணங்களை உருவாக்கவில்லை – அது ஏற்கனவே இருந்தவற்றை பிரித்துக் காட்டியது.

இந்தக் கண்டுபிடிப்பு இன்றைய எங்களின் திராவிட மாடல் பாணியுடன் ஆழமாக ஒத்துப் போகிறது. நியூட்டனின் வெள்ளை ஒளியில் மறைந்திருந்த வண்ணங்களைப் போல, ஒவ்வொரு குழந்தையும் அறிவியல் ஆர்வம், கணித பகுத்தறிவு, தொழில்நுட்ப புதுமை, படைப்பு சிந்தனை ஆகியவற்றின் மறைந்திருக்கும் திறன்களைக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே நாங்கள் ‘வானவில் மன்றம்’ – STEM கல்விக்கான எங்கள் ரெயின்போ ஃபோரத்தை தொடங்கினோம். 

தமிழில் வானவில் என்றால் மழைக்கு முன்பு தோன்றும் அறிகுறி. இது நியூட்டனின் அறிவியல் சிந்தைக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி. நியூட்டனின் பிரிஸம் வெள்ளை ஒளியிலிருந்து ஏழு வண்ணங்களை வெளிப்படுத்தியது போல, எங்கள் வானவில் மன்றம் ஒவ்வொரு குழந்தையின் பல பரிமாண கற்றல் திறன்களை வெளிப்படுத்துகிறது. 

அரசுப் பள்ளிகளில், 33.50 லட்சம் மாணவர்கள் இன்றுவரை மொபைல் ஆய்வகங்களுடன் பயிற்றுவிக்கப்பட்ட STEM வழிகாட்டிகளின் வழிகாட்டுதலுடன் வானவில் மன்றம் எனும் நேரடி அறிவியல் பரிசோதனைகளில் பங்கேற்கின்றனர். நியூட்டனின் ஒற்றை பிரிஸத்திலிருந்து எங்கள் ஸ்மார்ட் வகுப்பறைகள் வரை – மாணவர்களின் ஆர்வங்களைக் கண்டுபிடிப்புகளாக மாற்றும் மாடலை நாங்கள் பின்பற்றுகிறோம்.

கல்வி இறையாண்மை: எங்கள் சொந்தப் பாதையை வகுத்தல்

திராவிட மாடல் என்பது  சிறப்பை நோக்கி சுயாதீன பாதைகளை வகுக்கும் தைரியத்தை உள்ளடக்கியது. எங்கள் மறைந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் தொலைநோக்கு பாரம்பரியத்தைப் பின்பற்றி, நாங்கள் தொடர்ந்து புதுமையான அணுகுமுறைகளை முன்னெடுத்து வருகிறோம். 1990களின் பிற்பகுதியில், மற்ற இந்திய மாநிலங்கள் கணினிகள் மற்றும் இ-ஆளுமை பற்றி சிந்திக்கத் தொடங்கியபோது, தமிழ்நாடு ஏற்கனவே ஒரு விரிவான IT கொள்கையை உருவாக்கி, எங்கள் சமகாலத்தவர்களை விட மிக முன்னேறியிருந்தது.

இந்த முன்னோக்கு தலைமையின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ செயல்படுத்தியுள்ளோம் – இந்தியாவில் முதல் மாநிலமாக, திராவிட மாடலின் மையக் கருத்தாக்கங்களில் வேரூன்றிய சுயாதீன கல்விப் பாதையை வகுத்துள்ளோம். எங்கள் மாநில கல்விக் கொள்கை பல மாற்றத்தை உருவாக்கும் அம்சங்களை உறுதி செய்கிறது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, முழுமையான கற்றலை ஊக்குவிக்க 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நீக்குதல், பகுத்தறிவு சிந்தனை மற்றும் அறிவியல் மனப்பான்மையை மைய கல்வி நோக்கங்களாக வலியுறுத்துதல், பள்ளியிலிருந்து உயர் கல்விக்கு 100% மாற்றத்தை அடையும் லட்சிய இலக்கு, மனப்பாட கற்றலுக்கு மாறாக புரிதலை மையப்படுத்தும் திறன் அடிப்படையிலான கற்றல்.

தமிழ்நாடு இந்த சவால்களை முனைப்புடன் எதிர்கொண்டுள்ளது. அண்ணா அறிவித்தபடி, “நாங்கள் திராவிட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்” – இந்த உணர்வுடன், எங்கள் குழந்தைகளின் கல்வி பயணத்தை தடுக்கும் ஒவ்வொரு தடையையும் அகற்றுவதற்கு நாங்கள் உழைத்துள்ளோம். எங்கள் விரிவான ஆதரவு அமைப்பு, எந்த குழந்தையின் திறனும் பண கட்டுப்பாடுகள் அல்லது வெளிப்புற தடைகளால் மட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

இது எங்கள் அர்ப்பணிப்பை – கொள்கைகளால் பிறந்து, நிரூபிக்கப்பட்ட வெற்றியால் உறுதிப்படுத்தப்பட்டது. கல்வி சமூக நீதிக்கு சேவை செய்ய வேண்டும், குறுகிய நலன்களுக்கு அல்ல என்பதால் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட மாடல் அதன் செயல்திறனை நிரூபித்துள்ளதால் நாங்கள் புதுமைப்படுத்துகிறோம். எங்கள் மாநில கல்விக் கொள்கை 2025, எங்கள் மதிப்புகளில் வேரூன்றிய சுயாதீன சிந்தனையின் சான்றாக, கல்வி இறையாண்மையை உள்ளடக்கியதாகவும், சிறப்பையும் உலகளாவிய ஈடுபாட்டையும் பராமரிக்கிறது.

எதிர்கால தொலைநோக்கு: உலகளாவிய ஒத்துழைப்பு

திராவிட மாடல் உலகளாவிய கல்விக்கு மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது: பண்டைய ஞானம் நவீன கொள்கையை எவ்வாறு வழிநடத்தும், இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகள் உண்மையான சமத்துவத்தை எவ்வாறு உருவாக்கும், மாநிலங்கள் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு சுயாதீன பாதைகளை எவ்வாறு வகுக்கலாம், ஒரே நேரத்தில் கல்வி சிறப்பு மற்றும் சமூக மாற்றமாக எவ்வாறு செயல்பட முடியும்.

முடிவாக, கேம்பிரிட்ஜ் மற்றும் பிற உலகளாவிய நிறுவனங்களுடன் ஆழமான கல்வி ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கிறேன். எங்கள் சாதனைகள் – 17 முதல் 100 நிறுவனங்கள், IITகள் மற்றும் NITகளில் எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள், எங்கள் விரிவான ஆதரவு அமைப்புகள் – எங்கள் மதிப்புகளுக்கு உண்மையாக இருந்து புதுமையை ஏற்றுக்கொண்டதன் பலன்களை பிரதிபலிக்கின்றன.

இது திராவிட வழி – சிறப்பை அடைவது, கொள்கைகளை பாதுகாப்பது, வாழ்க்கைகளை மாற்றுவது.

நியூட்டன் இந்த அரங்குகளில் முதலில் வெளிப்படுத்திய வானவில் எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு ஒளிக்கற்றையிலும் -ஒவ்வொரு குழந்தையிலும்- கண்டறியப்படக் காத்திருக்கும் எண்ணற்ற சாத்தியங்கள் உள்ளன. எங்கள் பங்கு திறனை உருவாக்குவது அல்ல, மாறாக அதை வெளிப்படுத்துவது, வளர்ப்பது, அது தனிப்பட்ட வாழ்க்கைகளை மட்டுமல்ல, முழு சமூகங்களையும் ஒளிரச் செய்வதை உறுதி செய்வது. நன்றி.” என முடித்தபோது அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும் கல்வியாளர்களும் நிறைந்த அவை  அமைச்சரி உரையை மனம் திறந்து பாராட்டினார்கள். அடுத்ததாக நடைபெற்ற கலந்துரையாடலில் அதன் ஆழம் வெகுவாகத் தெரிந்தது. 

திராவிட மாடல் கல்வி: சமூக நீதிக்கான ஒரு பாதை – ஆக்ஸ்ஃபோர்டு யூனியன் உரை

இங்­கி­லாந்­தில் உள்ள உல­கப் புகழ்­பெற்ற ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆக்ஸ்ஃ­போர்டு யூனி­யன் மன்­றத்­தில் கடந்த 13-–10–-2025 அன்று, தமிழ்­நாடு பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி ‘திரா­விட மாடல் கல்வி ஒரு பார்வை’ என்ற தலைப்­பில் ஆற்­றிய உரை வருமாறு:–

மாண்­பு­மிக்க ஆக்ஸ்ஃ­போர்டு யூனி­யன் உறுப்­பி­னர்­கள், மதிப்­பிற்­கு­ரிய பேரா­சி­ரி­யர்­கள், மற்­றும் மாண­வர்­க­ளுக்கு வணக்­கம். உல­கப் புகழ் பெற்ற ஆக்ஸ்ஃ­போர்டு யூனி­யன் மன்­றத்­தில் இன்று உரை­யாற்­று­வது எனக்கு மிகுந்த பெருமை அளிக்­கி­றது. இங்கு தமிழ்­நாட்­டின் பிர­தி­நி­தி­யாக மட்­டு­மல்ல, சமூக நீதி, சமத்­து­வம், மற்­றும் ‘எல்­லார்க்­கும் எல்­லாம்’ எனும் கொள்­கை­யு­டன் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய திரா­விட மாடல் கல்வி முறை மீது உறு­தி­ யான நம்­பிக்­கை­கொண்ட பிர­தி­நி­தி­யா­க­ வும் இங்கு வந்­துள்­ளேன்.

எங்­க­ளைப் பொறுத்­த­வரை, வகுப்­பறை என்­பது கற்­றல் நடை­பெ­றும் இடம் மட்­டுமே அல்ல; அது சமூக நீதி­யின் புக­லி­ட­மா­க­வும், மாற்­றங்­க­ளுக்­கான உந்­து­சக்­தி­யா­க­வும் இருக்க வேண்­டும். ஒரு விவ­சாயி, ஒரு மீன­வர், மாநில ஆளு­நர் என எல்­லோ­ரின் குழந்­தை­க­ளும் ஒரே இடத்­தில் சமத்­து­வ­மான கல்­வி­யைப் பெற வேண்­டும். அந்­தக் குழந்­தை­கள் ஒரே உண­வைப் பகிர்ந்­து­கொள்­வ­தோடு, தங்­க­ளின் கன­வு­களை அடை­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளைப் பெற வேண்­டும். அதற்­கான திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்த வேண்­டும் என்­பதே எங்­கள் திரா­விட மாடல் பார்வை.

முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம்!

அப்­படி ஒரு திட்­டம் உரு­வான சம்­ப­வத்தை உங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன். அந்­தத் திட்­டம் சர்­வ­தேச அள­வில் பாராட்­டு­க­ளைப் பெற்ற ஒன்று. அது ஓர் அரசு அதி­கா­ரி­யின் அலு­வ­ல­கக் கோப்­பு­க­ளில் இருந்து பிறக்­க­வில்லை. எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஒரு பள்­ளி­யில் ஆய்வு மேற்­கொண்­டார். அப்­போது, காலை உணவு அருந்­தா­மல் பசித்த வயி­று­டன் சில குழந்­தை­கள் வகுப்­ப­றை­யில் அமர்ந்­தி­ருப்­ப­தைக் கண்­டார். அவர்­க­ளு­டைய பசி­யின் பின்­னால் இருந்த ஆழ­மான உண்­மையை அவர் புரிந்­து­கொண்­டார். கூடவே, ‘ஒரு குழந்­தை­யின் வயிறு காலி­யாக இருந்­தால், அவர்­க­ளின் மன­மும் காலி­யாக இருக்­கும்” என்று அவர் சிந்­தித்த அந்த நொடி­யில் அவர் இத­யத்­தில் இருந்து உரு­வா­ன­து­தான் முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம்.

பள்­ளிக் குழந்­தை­க­ளுக்கு காலை உணவு வழங்­கும் திட்­டம் தமிழ்­நாட்­டில் செயல்­ப­டுத்­தப்­பட்ட பிறகு, அத­னால் ஏற்­பட்ட மாற்­றங்­கள் பல ஆச்­ச­ரி­ய­மான விளை­வு­க­ளைச் சுட்­டிக்­காட்­டின.

மாண­வர்­க­ளின் வரு­கைப் பதிவு அதி­க­ரித்­தது. கற்­றல் செயல்­பா­டு­க­ளில் உற்­சா­க­மாக மாண­வர்­கள் பங்­கேற்­றார்­கள். மிக முக்­கி­ய­மாக ஊட்­டச்­சத்­துக் குறை­பாடு தொடர்­பு­டைய கார­ணங்­க­ளுக்­காக ஊர­கப் பகு­தி­க­ளில் 68% மற்­றும் நகர்ப்­பு­றங்­க­ளில் 80% எனும் அள­வில் உடல் நலக் குறை­வால் குழந்­தை­கள் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லும் அளவு அப­ரி­மி­த­மா­கக் குறைந்­தி­ருக்­கி­றது. தொடக்­கக் கல்­வி­யில் கற்­றல் இடை­நிற்­றல் சத­வி­கி­தம் பூஜ்­ஜி­யம் ஆக்­கி­யி­ருக்­கி­றோம்.

அத­னால்­தான் எப்­போ­தும் சொல்­கி­றோம். கல்வி விலை உயர்ந்­தது என்று நினைப்­ப­வர்­கள் முத­லில் பசி­யைப் போக்க முயற்சி செய்­யுங்­கள். அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும்­போதே சிறப்­பான மாற்­றங்­க­ளுக்­கான முதல் படியை நாம் கடக்­கி­றோம்.

அர­சுப் பள்­ளி­கள் பெரு­மை­யின் அடை­யா­ளம்!

திரா­விட மாடல் அடிப்­படை வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தில் மட்­டு­மல்ல, உயர்­வான சாத­னை­களை நோக்கி மாண­வர்­களை உந்­தித் தள்­ளும் முயற்­சி­க­ளுக்­கும் பெரும் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றது. எங்­க­ளு­டைய அரசு மற்­றும் அரசு உதவி பெறும் பள்­ளி­கள், அரசு மாதி­ரிப் பள்­ளி­க­ளில் படித்த மாண­வர்­கள், ஐஐடி, ஐஐ­எம் போன்ற இந்­தி­யா­வின் முதன்­மைக் கல்வி நிறு­வ­ன ங்­க­ளி­லும் சர்­வ­தேச அள­வில் உயர்­நி­லைக் கல்வி நிறு­வ­னங்­க­ளி­லும் சேர்க்கை பெற, அவர்­களை நாங்­கள் தயார் செய்­கி­றோம். அதற்­கான திட்­டங்­க­ளை­யும் தொடர்ந்து செயல்­ப­டுத்­து­கி­றோம்.

இதற்கு முன், அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளில் ஒரு சிலர் மட்­டுமே இந்த உயர்­நிலை நிறு­வ­னங்­க­ளில் சேர்க்கை பெற்று வந்­த­னர். கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் அந்த எண்­ணிக்கை பன்­ம­டங்கு உயர்ந்து வரு­கி­றது. மாண­வர்­கள் அனைத்து வகை­யான திற­மை ­க­ளை­யும் பெறு­வ­தற்கு நாங்­கள் வழி­காட்­டு­கி­றோம். இது­தான் எங்­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யின் அடிப்­ப­டைக் கோட்­பாடு.

கல்­வி­யோடு, கலை, கலா­சா­ரம், மற்­றும் விளை­யாட்டு என அனைத்­துத் தளங்­க­ளி­லும் எங்­கள் மாண­வர்­களை நாங்­கள் ஆத­ரிக்­கி­றோம். பொரு­ளா­தா­ரத் தடை­கள் அவர்­க­ளின் கல்­வி­யைப் பறிப்­பதை நாங்­கள் ஒரு போதும் அனு­ம­திப்­ப­தில்லை. அனை­வ­ருக்­கும் சம­மான வாய்ப்­பு­கள் கிடைப்­பதை நாங்­கள் உறுதி செய்­கி­றோம்.எங்­கள் அர­சுப் பள்­ளி­கள் வறு­மை­யின் அடை­யா­ள­மாக அல்ல, பெரு­மை­யின் அடை­யா­ள­மாக விளங்­கு­கின்­றன.

முற்­போக்­குத் திட்­டங்­க­ளால் ஏற்­ப­டும் தலை­முறை மாற்­றங்­கள்!

தமிழ்­நாட்­டின் வகுப்­ப­றை­க­ளில் சமத்­து­வம், சமூக நீதியை உறுதி செய்­யும் நான் முதல்­வன், தமிழ்ப் புதல்­வன், புது­மைப்­பெண் உள்­ளிட்ட திட்­டங்­க­ளால் இளை­ஞர் திறன் மேம்­பாடு பெறு­வ­தும் உயர் கல்வி பெறு­வ­தும் உறுதி செய்­யப்­ப­டு­கி­றது.

அர­சுப் பள்­ளி­க­ளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாண­வர்­கள் உயர் கல்­வி­யைத் தொடர மாதந்­தோ­றும் ரூ.1,000 நிதி­யு­தவி வழங்­கு­கி­றோம். அதே­போல, உயர் கல்வி பயி­லும் பெண்­க­ளுக்­கும் மாதாந்­திர உத­வித் தொகை ரூ.1,000 வழங்­கு­கி­றோம்.

குழந்­தை­யின் இத­யத்­தைத் தொடு­ப­வர்­கள் ஆசி­ரி­யர்­கள்!

இந்த முற்­போக்­கான திட்­டங்­கள் இடை­நிற்­ற­லைத் தடுப்­ப­து­டன் பெண்­க­ளின் கல்­லூ­ரிச் சேர்க்­கையை 34% ஆக­வும் ஒட்­டு­மொத்த உயர் கல்­விச் சேர்க்கை 50%-க்கு மேலா­க­வும் அதி­க­ரித்து மாபெ­ரும் தலை­முறை மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

நவீன உலகை நோக்­கிய எங்­க­ளின் கல்­விப் பய­ணத்­தில் தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளை­யும் அதி விரை­வா­கத் தழு­வு­கி­றோம். தொடக்­கக் கல்வி பயி­லும் 44.50 லட்­சம் மாண­வர்­கள் பயன்­பெற 22,931 ஸ்மார்ட் போர்டு வகுப்­ப­றை­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம். பள்­ளிப் பாடத் திட்­டங்­க­ளில் AI, ரோபாட்­டிக்ஸ், கோடிங் உள்­ளி ட்ட நவீ­னத் தொழில்­நுட்­பச் சாத்­தி­யங்­களை எங்­கள் பள்ளி வளா­கங்­க­ளுக்­குள் கொண்­டு­வந்­தி­ருக்­கி­றோம்.

இங்கு முக்­கி­ய­மாக நான் குறிப்­பிட விரும்­பு­வது என்­ன­வென்­றால், தொழில்­நுட்­பம் என்­பது ஒரு கருவி மட்­டுமே. அது ஓர் ஆசி­ரி­ய­ருக்­கான சிறந்த மாற்று ஆக இருக்க முடி­யாது. எந்­த­வொரு குழந்­தை­யின் இயல்­பான அறி­வை­யும் உணர்ச்­சி­க­ளை­யும் முழு­மை­யா­கப் புரிந்­து­கொள்ள ஆசி­ரி­ய­ரால் மட்­டுமே முடி­யும். ஆசி­ரி­யர்­க­ளால் மட்­டுமே ஒரு குழந்­தை­யின் இத­யத்­தைத் தொட முடி­யும் என்­பதை நாங்­கள் உளப்­பூர்­வ­மாக நம்­பு­கி­றோம்.

எங்­களை இயக்­கும் கதை­கள்!

தமிழ்­நாட்­டின் கடைக்­கோடி கிரா­மத்­தில் உள்ள பள்ளி ஒன்­றில், பாடம் எடுத்து வரும் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரைப் பற்றி இங்கு குறிப்­பிட விரும்­பு­கி­றேன். தமிழ்­நாட்­டின் 234 தொகு­தி­க­ளி­லும் உள்ள பள்ளி சார்ந்த 77 பொருண்­மை­க­ளில் நான் ஆய்­வுக்­குச் சென்­ற­போது அந்த ஆசி­ரி­ய­ரைச் சந்­தித்­தேன். அப்­போது அவர் கண்­ணீர்ப் பெருக்­கோடு என்னை வர­வேற்­றார்

நாட்­டின் சுதந்­தி­ரத்­திற்­குப் பிறகு முதன்­மு­த­லாக ஒரு கல்வி அமைச்­ச­ராக நான் அவ­ரது பள்­ளிக்கு வருகை தந்­த­தைக் குறிப்­பிட்டு, தன் மகிழ்ச்­சியை அவர் கண்­ணீ­ரு­டன் வெளிப்­ப­டுத்­தி­னார். அதே பள்­ளி­யில் ஒரு பழங்­குடி மாண­வ­ரைச் சந்­தித்­தேன். அவ­ரோடு உரை­யா­டும்­போது, நான் எங்­கள் தலை­மு­றை­யில் முதல் மாண­வ­னாக கல்வி கற்க வந்­தி­ருக்­கி­றேன். ஒரு­போ­தும் நான் கடைசி மாண­வ­னாக இருக்க மாட்­டேன் என நெஞ்­சு­று­தி­யோடு கூறி­னார்.

இவை­தான் எங்­களை இயக்­கும் கதை­கள். எங்­க­ளு­டைய அர­சி­யல் பாரம்­ப­ரி­யம் என்­பது அதி­கா­ரத்­திற்­கா­னது மட்­டு­மல்ல. அது எளிய மனி­தர்­க­ளுக்­கும் கல்வி, சுதந்­தி­ரம், சமத்­து­வம், சமூக நீதி, பகுத்­த­றிவு எனும் ஜன­நா­ய­கம் கொண்­டது. ‘எல்­லார்க்­கும் எல்­லாம்’ என்று உரைக்­கும் திரா­விட மாடல் பாரம்­ப­ரி­யம் எங்­க­ளு­டை­யது.

மனி­த­கு­லத்தை விடு­விக்­கும் செயல்!

உல­கின் தலைசிறந்த மனி­தர்­கள் உரை­யாற்­றிய இந்த ஆக்ஸ்ஃ­போர்டு யூனி­யன் அரங்­கில் அமர்ந்­தி­ருக்­கும் அறி­வார்ந்த சபை­யி­னர் முன்பு நான் அறி­விக்­கும் செய்தி இது­தான். ‘கல்­வி­யைக் கெட்­டி­யா­கப் பிடித்­துக்­கொள்­ளு ங்­கள். ஒரு­போ­தும் அதை விட்­டு­வி­டா­தீ ர்­கள். கல்வி ஒரு முத­லீடு. அது ஒரு குழந்­தை­யைப் படிக்­க­வைக்­கும் செயல் மட்­டு­மல்ல… எல்லா தளை­க­ளில் இருந்­தும் மனி­த­கு­லத்தை விடு­விக்­கும் செய­லா­கும்!’ இவ்­வாறு அரங்கம் நிறைந்த கைத்தட்டல்களுடன் அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி அவர்கள் தனது  உரை­யை னிரைவு செய்தார் .

ஆக்ஸ்ஃபோர்டு யூனியன் தலைவர் கொடுத்த பாராட்டு: “திராவிட மாடல் கல்வி அசத்தல்!”

தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு, ஆக்ஸ்ஃபோர்டு யூனியன் மன்றத்தின் தலைவர் மூசா ஹர்ராஜ் அவர்கள் ஒரு பாராட்டு மற்றும் நன்றி கடிதத்தை அனுப்பினார். 

 கடிதத்தில்:அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், ‘திராவிட மாடல் கல்வி’ பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொண்டதற்க்கு  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிப் பயணம் மற்றும் திராவிடப் பாரம்பரியம் பற்றி நீங்கள் பேசிய கருத்துகள், சமத்துவம் மற்றும் சமூக முன்னேற்றத்தை உருவாக்க ஒரு அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் புரிய வைத்துள்ளது. உங்களின் பேச்சு மிகவும் ஊக்கமளிப்பதாகவும், விஷயங்களைத் தெளிவாகப் புரிய வைப்பதாகவும் இருந்தது. நிகழ்வு முடிந்த பிறகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இதுபற்றிப் பெரிய அளவில் விவாதம் தொடர்ந்தது.

எங்கள் மன்றத்தின் இந்த ஆண்டு நிகழ்ச்சிகளில், உங்கள் கூட்டத்திற்கு மட்டும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். இது ஒரு பெரிய சாதனை. உங்களை இங்கு வரவழைத்தது எங்களுக்குப் பெருமை. தமிழ்நாட்டின் கல்வித் தலைமைக்கும் ஆக்ஸ்ஃபோர்டு மாணவர்களுக்கும் இடையே இந்த நல்ல தொடர்பு தொடர்ந்து நீடிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு ஆக்ஸ்ஃபோர்டு யூனியன் தலைவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top