வழிகாட்டும் கல்லூரி களப்பயணம் -2025

‘நான் முதல்வன் திட்டம்’ உயர்கல்விக்கான வழிகாட்டியாகச் செயல்படுகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, கல்லூரி களப்பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்களது பகுதிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

Minister Anbil Mahesh Poyyamozhi initiated the College Field Visit trip for Government school Students

ஒரு பள்ளியில் 35 மாணவர்கள் வரை தேர்வு செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நூலகம், ஆய்வகங்களைப் பார்வையிடுகிறார்கள். மேலும் அந்தக் கல்லூரியில் உள்ள இளநிலை, முதுகலை படிப்புகள், கல்வி உதவித்தொகை குறித்து அறிந்துகொள்கிறார்கள்.

இதனால் மாணவ–மாணவியர்களுக்கு உயர்கல்விக்குச் செல்வதில் ஆர்வம் ஏற்படுவதோடு, கல்லூரி வளாகம் அதன் நடைமுறைகள் குறித்த குழப்பமும் பயமும் நீங்குகிறது. மேலும், எந்தக் கல்லூரியில் என்ன துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து சிறப்பான முடிவுகளை எடுக்கவும் இந்தத் திட்டம் வழிவகைச் செய்கிறது.

பாதைகள் உன்னால் உருவாகும்!

தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்கள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்ய, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம் திட்டத்தை மூன்றாவது ஆண்டாக செயல்படுத்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான கல்லூரி களப்பயணம் நிகழ்வை இன்று (01.09.2025) தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு வாழ்த்துகளத் தெரிவித்து மகிழ்ந்தார் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

100% கல்லூரி சேர்க்கை இலக்கு!

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டின் தாயுமானவராக விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பள்ளிப் படிப்பை முடித்ததும் மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்விதமாக ஒரு திட்டத்தை வழங்கினார். அதிலிருந்து உருவானதே கல்லூரி களப்பயணம் திட்டம்.

முதன்முதலாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டபோது  33,000 மாணவச் செல்வங்கள் பயன்பெற்றனர். அடுத்த ஆண்டே அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது. இந்த ஆண்டு 1,40,000 மாணவர்களை 722 கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல உள்ளோம்.

முதல் ஆண்டுக் களப்பயணம் மேற்கொண்ட 33,000 மாணவர்களில் 70% பேர் உயர்கல்விச் சேர்க்கை பெற்று கல்லூரிகளில் சேர்ந்தனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 77% ஆக உயர்ந்தது. 2025-ல் களப்பயணம் மேற்கொள்ளும் 100% மாணவர்களும் உயர்க்கல்விச் சேர்க்கை பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்பதே நம் இலக்கு” என்றார்.

வழிகாட்டியாக மாறுங்கள்!

முத்தாய்ப்பாக, “கல்லூரி என்பது உயர்கல்விக்கான வாயில் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரி களப்பயணம் திட்டத்தில் பலன்பெற்று உயர்கல்விச் சேர்க்கை பெறும் +2 மாணவர்கள், உங்கள் நண்பர்களுக்கும் அரசின் திட்டம் குறித்து எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் ஒருவரே பலன்பெறுவதல்ல… உங்களோடு படிக்கும் சக மாணவனுக்கும் நீங்கள் வழிகாட்டியாக மாற வேண்டும். அதுவே நம் திராவிட மாடல் அரசின் வெற்றி!” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.  

மேலும் வாசிக்க:

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top