முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் மட்டும் நடைமுறைபடுத்திவந்த நிலையில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை (26.08.2025) தொடங்கிவைத்து மாணவர்களோடு அமர்ந்து உணவு உண்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இந்நிகழ்வில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் திரு.பகவந்த் மான் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அறிவுப் பசிக்கு அமுதிடுவோம்!
சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அங்கிருந்த மாணவிகளிடம், “காலையில் நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்?” எனக் கேட்டார். மாணவிகள் பலரும் ‘சாப்பிடவில்லை, டீ மட்டும் குடித்தோம்’ என பதில் சொல்லியிருக்கிறார்கள்.
பசியோடு பள்ளிக்கு வந்தால், மாணவர்களின் கற்றல் திறன் எப்படி மேம்படும் என்ற முதலமைச்சரின் எண்ணமே, பின்னர் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமாக’ உதித்தது. குறிப்பாக 1 முதல் 5 வகுப்பு குழந்தைகள் பயன் பெறும் வகையில், பேரறிஞர் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2022-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் அபார வெற்றி!
மதுரையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முதற்கட்டமாக 1545 பள்ளிகளில் 1,14,000 குழந்தைகள் பயன் பெறும் வகையில் இத் திட்டம் தொடங்கப்பட்டது.
2023 பிப்ரவரி 28-ம் தேதியன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2024 ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் திட்டம் விரிவாக்கப்பட்டது. இதுவரை 17 லட்சம் மாணவ, மாணவியர் இத்திட்டத்தினால் பயன் பெறுகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் அபாரமான வெற்றியினைத் தொடர்ந்து நகரப் பகுதிகளில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் கூடுதலாக 3 லட்சத்து 6,000 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
இனி தமிழ்நாட்டில் செயல்படும் 37,416 அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20 லட்சத்து 59,000 மாணவர்கள் தினமும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் பயன் பெறுவார்கள்.
மகத்தான முன்னோடித் திட்டம்!
விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழாவில் வரவேற்புரையாற்றிய மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, “வயிற்றுப் பசியைப் போக்கி அறிவுப் பசியைத் தூண்டி, ஆரோக்கியத்திலும் அறிவிலும் சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்க அடித்தளம் அமைக்கிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.

2022-ல் மாதிரித் திட்டமாக தொடங்கப்பட்டக் காலை உணவுத் திட்டம் இன்று 37,416 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். கல்வியோடு காலை உணவும் வழங்கும் மகத்தான முன்னோடித் திட்டத்தை மற்ற இந்திய மாநிலங்கள் பாராட்டிப் பின்பற்றுகின்றன.
கடல் கடந்து வெளிநாடுகளிலும் நாம் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது, திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்தப் பெருமை!’’ என்றார்.
சமூக வளர்ச்சிக்கான முதலீடு!
விழாவில் சிறப்புரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், “இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள், மகிழ்ச்சிக்குரிய நாள். குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது, அவர்களைப் போலவே எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது.
காலை உணவுத் திட்டத்தினால் 20 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசியாறுகிறார்கள் எனில் இதைவிட மனநிறைவு வேறு எதிலும் எனக்குக் கிடைத்துவிடாது. இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி என்பது சமூக வளர்ச்சிக்கான சிறந்த முதலீடு. தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களை நம்பி அவர்களின் திறமை, அறிவு, ஆற்றல் மீது திராவிட மாடல் அரசு செய்யும் முதலீடு.

அவர்கள் நன்றாகப் படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றினால் அதுவே நம் அரசுக்குக் கிடைக்கும் சிறந்த பிரதிபலன். அதுதான் இத்திட்டத்தின் உண்மையான வெற்றி!” என்றார்.
வழிகாட்டும் திராவிட மாடல் அரசு!
நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் திரு.பகவந்த் மான் அவர்கள், “பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையை உணர்ந்து காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இந்தியாவிலேயே சிறப்பான முன்னெடுப்பு இந்தத் திட்டம். இதனைப் பஞ்சாப் மாநிலத்திலும் செயல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசித்து முடிவெடுப்போம்!’’ என்றார்.

அன்னமிட்ட அன்பில்!
காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை சென்னையில் மாண்புமிகு முதலமைச்சர் தொடங்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக திருவெறும்பூர் தொகுதி துவாக்குடி நகராட்சியில் உள்ள ஆர்.ஈ.சி நடுநிலைப் பள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்து மாணவச் செல்வங்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
மேலும் திருவெறும்பூர் தொகுதியில் உள்ள கூத்தைப்பார் பேரூர் கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் நடுநிலைப் பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு உணவு பரிமாறி காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.



“மாணவச் செல்வங்களின் பசிப்பிணி அகற்றி அனைவரும் ஆர்வமுடன் கல்வி கற்க அறிவுப் பசிக்கு அடித்தளமிடுவோம்!” என கருத்து தெரிவித்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
வயிற்றுப் பசிக்கு உணவும், அறிவுப் பசிக்குச் சிறந்த கல்வியும் வழங்கும் திராவிட மாடல் அரசு, உலகிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr