தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியர்களுக்கு ‘பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும் என 2022 – 23ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பள்ளிக் கட்டமைப்பு, கல்விச் செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகள், அரசின் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்த பங்களிப்பு செய்த தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலத் தேர்வுக் குழு 500 மதிப்பெண்கள் நிர்ணயித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க – நடுநிலை – உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்ட 100 தலைமை ஆசிரியர்களுக்கு ‘பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2022 – 2023-ம் ஆண்டிற்கான ‘பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கும் விழா, 06.03.2024 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
2023 – 2024-ம் ஆண்டிற்கான ‘பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கும் விழா, பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழாவாக, திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் கடந்த ஜூலை 6ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அரசுத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்திய 100 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ‘பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’, கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு எனப் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் 76 அரசுப் பள்ளிகளுக்கு ‘பேராசிரியர் அன்பழகன் விருது’ மற்றும் கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற 4,552 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் தலைமைத்துவம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த, திராவிட இயக்கத் தலைவர்களை என்றென்றும் கொண்டாடி வருகிறது திராவிட மாடல் அரசு. அதன் அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தத் தலைமை ஆசிரியர், மாநில உரிமை – கல்வி உரிமைகளை நிலைநாட்டப் போராடிய பேரறிஞர் அண்ணாவின் பெயரில், தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை.
தந்தை பெரியாரின் அடியொற்றி சுயமரியாதைப் பகுத்தறிவுப் பாதையில் தன் பொதுவாழ்வைத் தொடங்கிய அண்ணா, இணையிலா எழுத்தாலும் எவரையும் ஈர்த்திடும் பேச்சாலும் அயராத உழைப்பாலும் தமிழ்நாட்டைத் தலைமைதாங்கிய தலைமகன்.
தமிழால் வளர்ந்த தமிழை வளர்த்த தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா. அரசியல் மேடைகளில் அழகுத் தமிழால் தமிழர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பிய மாபெரும் ஆளுமை அவர். தமிழில் எளிமையும், ஆங்கிலத்தில் புலமையும் கொண்ட அண்ணாவை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் கவுரவித்தது.
தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை’ தோற்றுவித்தார். இந்தித் திணிப்புக்கு எதிரான போரில் முன்னின்று களம் கண்டு, வெற்றி வாகை சூடித் தமிழையும் தமிழ்நாட்டையும் இன்றும் காத்து நிற்கும் கொள்கை வீரர் பேரறிஞர் அண்ணா.
இன – மொழி உணர்வை நெஞ்சில் ஏந்திப் போராடியவருக்கு மக்கள் தந்த பரிசு, 1967-ல் அமைந்தது திமுக தலைமையிலான ஆட்சி. சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் மாநிலக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமை அண்ணாவுக்கே உண்டு.
ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த அவரது ஆட்சியில் செய்த சாதனைகள் ஏராளம்.
சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டுவந்த நம் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டினார். ஆதிக்க இந்திக்கு இடமில்லை என தமிழ் – ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டினார். சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைக் கொண்டுவந்து, தமிழ்நாட்டில் பகுத்தறிவுச் சமூகத்தை வளர்த்தெடுக்க துணைபுரிந்தார். சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச் சான்றோருக்கு சிலைகள் அமைத்துப் பெருமைப்படுத்தினார். ஆகாஷ்வானி, சத்ய மேவ ஜெயதே போன்ற வடமொழிச் சொற்களை நீக்கி, வானொலி, வாய்மையே வெல்லும் உள்ளிட்ட தூயத் தமிழ்ச் சொற்களை நடைமுறைப்படுத்தினார். இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்துகளை நாட்டுடைமையாக்கியது அண்ணா தலைமையிலான ஆட்சியில்தான்.
ஒரு மாநில அரசு எப்படி செயலாற்ற வேண்டும், இந்திய ஒன்றியத்தில் கூட்டாட்சி தத்துவம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணமாகத் திகழ்ந்து முன்னோடியான முயற்சிகளை மேற்கொண்டவர் பேரறிஞர் அண்ணா.
தலைமைத்துவ விருது தலைமை ஆசிரியர்களுக்கான வாழ்நாள் கெளரவம்
‘தலைமைக்கான’ எளிய பண்புகளைக் கொண்ட பேரறிஞர் அண்ணாவில் பெயரில், தமிழ்நாட்டு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ‘தலைமைத்துவ’ விருது வழங்கி கெளரவித்திருக்கிறது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை. சிறந்த பள்ளிக் கட்டமைப்பு, தரமான கல்வி, மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் உயரிய பணியில் சிறந்து விளங்கும் தலைமை ஆசிரியர்களைளுக்கு திராவிட மாடல் அரசு வழங்கும் வாழ்நாள் கெளரவம் இது.
Pingback: பேராசிரியர் அன்பழகன் விருது : ஒரு பார்வை! - Anbil Mahesh Forever