`தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்றார் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ. தேவைகளைத் தாண்டி சொந்த வாழ்வின் அனுபவங்களும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இருக்கின்றன. அந்தவகையில் அரசுப் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோர் அன்னாசி பழம் அறுவடையில் ஈடுபடும்போது பாம்பு கடிக்கு ஆளானதால், தனது பெற்றோருக்காக நவீன அறுவடைக் கருவியைக் கண்டுபிடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

நவீன அறுவடைக் கருவியும் அரசுப் பள்ளி மாணவி சத்யாவும்
நாமக்கல் கொல்லிமலை நத்துக்குழிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி சத்யா. இம்மாணவியின் பெற்றோருக்கு விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். அன்னாசிப் பழ அறுவடையின்போது பாம்புக் கடி ஏற்படுவது தவிர்க்க முடியாத பிரச்னையாக இருந்துவரும் நிலையில், சத்யாவின் பெற்றோரே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தன் பெற்றோருக்காக, தனது அறிவியல் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் நவீன அறுவடைக் கருவியை உருவாக்கியிருக்கிறார் சத்யா.
ரூ.1 லட்சம் முதல் பரிசைத் தட்டிச் சென்ற அரசுப் பள்ளி மாணவிகள்!
அந்தக் கருவியை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கக் கண்காட்சியில் இடம்பெறச் செய்த நிலையில், தங்களது பள்ளியின் சார்பாக ரூ.1 லட்சம் முதல் பரிசை வென்றிருக்கிறார்கள் அரசுப்பள்ளி மாணவிகள்.
மாணவச் செல்வங்கள் அறிவியல்சார்ந்து சிந்திக்க வேண்டும்!
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறிப்பிடுகையில், “புத்தாக்கக் கண்காட்சியில் தங்களது கண்டுபிடிப்புக்காக ரூ.1 லட்சம் முதல் பரிசையும் வென்றிருக்கிறார்கள் நாமக்கல் கொல்லிமலையைச் சேர்ந்த நம் அரசுப் பள்ளி மாணவிகள். அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
வானவில் மன்றம்: விளைவுகளைக் களத்தில் காண்கிறோம்!
அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் அறிவியல்சார்ந்து சிந்திக்கவும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடவும் வானவில் மன்றம் போன்ற முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது நம் திராவிட மாடல் அரசு. அதன் விளைவுகளை இன்று களத்தில் காண்கிறோம்” என்று வாழ்த்தினார்.
‘எனது அம்மா பாம்பு கடியால் பாதிக்கப்பட்டார்…’
மாணவி சத்யா கூறுகையில், `பொதுவாகவே நாமக்கல் கொல்லிமலை பகுதிகளில் அன்னாசிப் பழம் அதிகம் விளையும். அறுவடையின்போது பாம்புகள், விஷப் பூச்சிகளின் கடிகளுக்கு மக்கள் ஆளாவதுண்டு. எனது அம்மாவும் அன்னாசிப் பழ அறுவடையின்போது, பாம்பு கடியால் பாதிக்கப்பட்டார். இனியும் என் அம்மாவைப் போல யாரும் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் இந்தக் கருவியைக் கண்டுபிடித்தேன்’ என்றார்.
மின்விசிறி, LED லைட், ஹைடெக் கண்டுபிடிப்பு!
மேலும், `பெரும்பாலான விவசாயிகள் அறுவடை முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது இரவு நெடுநேரம் ஆகிவிடுவதால் அறுவடைக் கருவியிலேயே LED லைட்டையும், வெயிலின் தாக்கத்தைக் குறைக்க மின்விசிறியையும் கருவியிலேயே பொருத்தி இருக்கிறோம். சக மாணவிகளின் உதவியோடும், அறிவியல் ஆசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்களின் வழிகாட்டுதலோடும் இந்தக் கருவியை வடிவமைத்தேன். எளிய முறையில் அனைத்து மக்களும் அறுவடை கருவியைப் பயன்படுத்தும் வகையில் கருவியை வடிவமைத்திருக்கிறோம்” என்றார்.
எளிய மக்களுக்காகச் சிந்திக்கத் தொடங்கியுள்ள மாணவிகளின் அறிவியல் பயணம் மேன்மேலும் சிறக்கட்டும்!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: திருவள்ளூர் அரசுப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்! - Anbil Mahesh Forever