அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நவீன மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதன்மூலமாக 2025-26ம் கல்வியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இணைந்திருக்கிறார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தும் பல புதிய நலத் திட்டங்களின் வெற்றியையும்  மக்களின் நம்பிக்கையையும் இது பிரதிபலிக்கிறது.  

அரசுப் பள்ளிகள் இனி “பெருமையின் அடையாளம்”!

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த 30-7-2025 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்! ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.‘ அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!’ ” எனக் குறிப்பிட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவை தரமான கல்வியை வழங்கும் மையங்களாக உருவெடுத்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

மாணவர்கள் சேர்க்கை: பிரமிக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்

ஜூலை 30, 2025 நிலவரப்படி, தமிழக அரசுப் பள்ளிகளில் மொத்தம் 4,00,364 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள். 

Graph: Student enrolled in TN govt school 2025

 வகுப்பு வாரியான சேர்க்கை விவரங்கள் இதோ:

  • கே.ஜி. வகுப்புகள்: 32,807 மாணவர்கள்
  • 1 ஆம் வகுப்பு (தமிழ் வழி): 2,11,563 மாணவர்கள்
  • 1 ஆம் வகுப்பு (ஆங்கில வழி): 63,896 மாணவர்கள்
  • 2 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை: 92,098 மாணவர்கள்
  • மொத்தம்:  4,00,364 மாணவர்கள்

எந்தெந்த மாவட்டங்களில் அதிக மாணவர்கள் சேர்க்கை?

மாணவர் சேர்க்கையில் தென் மாவட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன!

Infographics : Districts with more govt school student enrolment
  • தென்காசி மாவட்டம்: 8,571 மாணவர்கள் (மாநிலத்திலேயே அதிகபட்சம்!)
  • திண்டுக்கல் மாவட்டம்: 8,000 மாணவர்கள்
  • திருச்சி மாவட்டம்: 7,711 மாணவர்கள்
  • கள்ளக்குறிச்சி மாவட்டம்: 7,554 மாணவர்கள்

மிகக் குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 1,022 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள், கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மீது பெற்றோர்கள் காட்டும் நம்பிக்கையைத் தெளிவாக்குகின்றன.

எப்படி சாத்தியமானது இந்த எழுச்சி?

தொடக்கக் கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களின் அயராத உழைப்பும், தமிழ்நாடு அரசு முன்னெடுத்த விழிப்புஉணர்வு பிரசாரங்களும் இந்த அபாரமான மாற்றத்துக்கு முக்கிய காரணம். 

கவனிக்கத்தக்க நடவடிக்கைகள்:

  • அங்கன்வாடி: அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடித்த குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விழிப்புஉணர்வு பிரசாரம்.
  • இல்லம் தேடிக் கல்வி: இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் மூலம் கற்றல் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டம், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்து, கல்வி கற்க உதவும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
  • ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகள்: நவீன கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு டிஜிட்டல் கற்றல் அனுபவத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 
  • விழிப்புஉணர்வு பிரச்சாரம்: அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் குறித்து பெற்றோர்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்துதல்.

இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக, அரசுப் பள்ளிகள் மீதான பெற்றோரின் பார்வை மாறி, தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். 

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், மற்றும் பல்வேறு நலத் திட்டங்கள் போன்றவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாகும்.

தேசிய கல்விக் கொள்கை-2020 கல்வி நிலையங்களில் மாநில உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தீவிரமான கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றியடைந்து, அரசுப் பள்ளிகள் நாளைய தலைமுறையை உருவாக்கும் பெருமைமிக்க இடங்களாக உருமாறி வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் காலம், ‘பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தினார். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 4 லட்சத்தைக் கடந்திருப்பது பெற்றோர்கள் மத்தியிலும் அந்த நம்பிக்கையைப் பரவச் செய்கிறது!  

Teachers appointment in TN Govt school

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top