பள்ளிக் கல்வித் துறை விருதுகள் – திருச்சியில் ஆசிரியர்களின் திருவிழா!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (6/7/2025) பள்ளிக் கல்வித் துறையே விழாக்கோலம் கண்டதுபோல மாறியிருந்தது! திருச்சி தேசியக் கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது, மற்றும் கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக பள்ளிக் கல்வித் துறை விருதுகள் விழா நடைபெற்றது.  

Anbil Mahesh Poyyamozhi addressing teachers during their award function

பேரறிஞர் பேராசிரியர் விருதுகள்! 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  தலைமையில், மாநில அரசின் கல்வி விருது விழா எனக் கொண்டாடப்பட்ட இந்த முப்பெரும் விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றி, விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். 

விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ” தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைக் கல்வித் துறைக்காக செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அவருடைய சீரிய முன்னெடுப்புகளால் உருவான அரசின் திட்டங்களைத் தங்களுடைய பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படுத்திய நூறு அரசுப் பள்ளிகளுக்கு ‘அண்ணா தலைமைத்துவ விருது’ இந்த மேடையில் வழங்கப்படுகிறது. 

To read about the Trichy Model School: click

சவாலுக்குத் தயார்!

அதேபோல, கற்றல் கற்பித்தல் செயல்பாட்டில் சிறப்பாகச் செயலாற்றிய 76 பள்ளிகளுக்கு ‘பேராசிரியர் அன்பழகன் விருது’ வழங்கப்படுகிறது. மேலும், கற்றல் அடைவுக்கான நூறு நாள் சவாலில் பங்கேற்று சிறப்பாகப் பங்களித்த 4,552 தொடக்கப் பள்ளிகளுக்கும் அதன் ஆசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே 4,552 பள்ளிகள் சிறப்பாகப் பங்களித்த நிலையில், அதன் தொடர்ச்சியாகத் தற்போது 12,685 தலைமை ஆசிரியர்கள், ‘நாங்களும் சவாலுக்குத் தயாராக இருக்கிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறார்கள். உள்ளபடியே அந்தச் செய்தி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  

நம்முடைய செயல்பாடுகள் குறித்து, சில ஆய்வறிக்கைகள் வெளியாகின்றன. ஏசர் (ASER) போன்ற அறிக்கைகள் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ்நாடு அரசு நடத்தும் மாநிலத் திட்டக் குழு நம் ஆசிரியர், மாணவர்களுடைய கற்றல்- கற்பித்தல் தரத்தைச் சரியாக மதிப்புட்டு கற்றல் அடைவு (SLAS) ஆய்வு அறிக்கையை வழங்கியிருக்கிறது.  அந்த அறிக்கையின் அடிப்படையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை என ஆறு நாள்களில் பத்து மாவட்டங்கள் வரை நேரில் சென்று ஆய்வு நடத்தினேன். அது ஆசிரியர்களாகிய உங்களை ஊக்குவிப்பதற்கான ஆய்வு. ஒரு சரகத்தில் ஒரு பள்ளியோ, ஒரு பள்ளியில் ஒரு மாணவனோ, ஒரு மாணவன் படிக்கும் பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ சில தங்குதடைகள் இருக்கலாம். அவற்றை நாம் அடையாளம் கண்டு சரிசெய்துவருகிறோம்.    

தலைமை ஆசிரியர்களாகிய உங்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாகத்தான் பல திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். அறிவியல் சார்ந்த சமுதாயமாக இந்தச் சமுதாயத்தை மாற்ற, ஆசிரியர்களால் மட்டுமே முடியும் என்பதை முதலமைச்சர் உளபூர்வமாக நம்பி வருகிறார். ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். உங்களைப் பார்த்துக்கொள்ள நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார். 

நீங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கும் கல்வியே, அவர்கள் தங்களின் வாழ்வின் எந்த உயரத்திற்குச் சென்றாலும் அவர்களுக்குக் கைகொடுக்கிறது. நம் அரசுப் பள்ளிகளில் படித்த பலரும் உலகப் புகழ்பெற்ற அறிஞர்களாகவும் நிபுணர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள் என்பதே அதற்குச் சான்று.  நல்ல மாணவச் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் பெயர்களில் விருதுகள் வழங்குவதில் எங்களுக்குத்தான் பெருமை! 

அன்று, இருமொழிக் கொள்கையை அண்ணா உயர்த்திப் பிடிக்கவில்லை என்றால், இன்று நம் தாய்மொழியான தமிழையும், நம் உரிமைகளையும் இழந்திருப்போம். சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது, அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் அப்போதைய நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன். அண்ணா பெயரிலும், பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருதுகள் வழங்கப்படுவது, உங்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்வு. உங்களைக் கௌரவப்படுத்துவதன் மூலம், நாங்களும் பெருமை அடைகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது கல்வி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஆசிரியர்கள் சொல்லித்தந்ததை அப்படியே மனதில் பதித்து, தேர்வுகளில் வென்றேன். புத்தகங்களைத் தொட்டதில்லை. விவசாயப் பணிகளுக்காகக் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. கல்லூரிப் படிப்பு முடித்திருந்தால் ஆங்கில அறிவு கிடைத்திருக்கும் என நினைத்தேன். ஆனால், முத்தமழறிஞர் கலைஞர், அதிகாரிகளுடனும் மற்றவர்களுடனும் எப்படிப் பேச வேண்டும் என எங்களுக்குப் பயிற்சி அளித்தார். ” என்றார்.

ஆசிரியர்களின் கூட்டணி

தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணிகள் உண்டு. ஆனால், எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கூடுதலான கூட்டணியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான். எம்.ஜி.ஆர். காலத்திலேயே நாங்கள் வாக்கு கேட்கச் சென்றபோது, எங்களை இன்முகத்துடன் வரவேற்றவர்கள் ஆசிரியர்கள்தான். மறைமுகமாக ஒரு வாக்கு சதவீதம் உள்ளது என்றால், அது ஆசிரியர்களுடைய வாக்கு சதவீதம்தான். ஆசிரியர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவர்களைச் சீராட்டி, பாராட்டி வளர்த்தவர் கலைஞர்” என்றார். 

பெருமையின் அடையாளம் அரசுப் பள்ளிகள்!

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ.47 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ‘அரசுப் பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்’ என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுவார்; அதற்கு ஏற்ப அது நடந்துள்ளது. ஆரம்பப் பள்ளியில் கற்றுத்தருவதுதான் ஒரு மாணவன் எந்த உயரத்திற்குச் சென்றாலும் உதவுகிறது. 

தனியார் பள்ளியில் கல்வி பயின்றவர்களை விட, அரசுப் பள்ளியில் கல்வி பயின்ற பலர் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்” என்று கூறி, அரசுப் பள்ளிக் கல்வியின் வலிமையைப் பறைசாற்றினார். இந்த முப்பெரும் விழா, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும், ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவைக்கும் ஒரு சான்றாக அமைந்தது. கல்விதான் ஒரு சமூகத்தின் அஸ்திவாரம் என்பதை இந்த விழா மீண்டும் ஒருமுறை உணர்த்தி இருக்கிறது.

3 thoughts on “பள்ளிக் கல்வித் துறை விருதுகள் – திருச்சியில் ஆசிரியர்களின் திருவிழா!”

  1. Pingback: பேரறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது! - Anbil Mahesh Forever

  2. Pingback: 7.5% உள் ஒதுக்கீடு - சமூகநீதிப் பாதையில் தமிழ்நாடு! - Anbil Mahesh Forever

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top