சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கம் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்தது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ என்ற நூலை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். இந்த நூல் வெளியீட்டு விழா, வெறும் புத்தக அறிமுகமாக மட்டுமின்றி, தேசிய கல்விக் கொள்கை-2020ன் ஆபத்துகளை உரக்கச் சொல்லும் ஒரு களமாகவே அமைந்தது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நுழைவாயில் தொடங்கி கல்வியின் மகத்துவத்தைச் சொல்லும் பொன்மொழிகளும், கல்வி சிறந்த தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட பேனர்களும் அலங்கரித்திருந்தன. வரவேற்பு முதல் மேடை வரை கல்வி குறித்த பெருமிதம் நிறைந்திருந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நூலை வெளியிட, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவருமான திக்விஜய சிங் எம்.பி அவர்கள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.கோபால கவுடா, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை வழங்கினார்.
தேசிய கல்விக் கொள்கை: தலைப்பாக மாறிய கலைஞரின் வார்த்தை
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பன்முகத் திறமைகளை வியந்து பாராட்டினார். குறிப்பாக, கல்வியைக் காவிமயமாக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக அவர் எழுதியுள்ள இந்த நூல் ஒரு முக்கிய ஆயுதம் என்று குறிப்பிட்டார்.
மேலும், 2016-ம் ஆண்டிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், “தேசிய கல்விக் கொள்கை என்ற மதயானை தமிழகத்திற்குள் புகுந்து, கல்வி சிறந்த தமிழ்நாட்டை நாசப்படுத்தி விடக்கூடாது” என்று எச்சரித்ததை நினைவு கூர்ந்தார். கலைஞரின் அந்த வலிமையான வார்த்தைகளையே இந்த நூலின் தலைப்பாக அமைத்தது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்தார். NEP-2020 எப்படி உருவானது, எப்படி காவிமயமாகியது, ஆர்.எஸ்.எஸ் எப்படி ஊடுருவியது என்பதையெல்லாம் இந்த நூல் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது என்றும் அவர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கை: ஜனநாயகப் போருக்கான அறிவாயுதம்!

“மதம்பிடித்த யானைக்கு வெறி மட்டுமே இருக்கும். யாரைத் தாக்குகிறோம், எதற்குத் தாக்குகிறோம் என்ற அறிவு இருக்காது. தேசிய கல்விக் கொள்கை என்பது நாடு முழுவதுமுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய ஆவணம். அப்படிப்பட்ட கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால் நாட்டின் எதிர்காலமே சிதைந்துவிடும். தேசிய கல்விக் கொள்கை என்பது வேதகால விஷம். அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று பலத்த குரலில் ஒலித்தது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இந்த நூல், கல்வி உரிமைக்கான ஜனநாயகப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் ஒரு முக்கிய அறிவாயுதம் என்றும் புகழாரம் சூட்டினார்.
சந்திரயான் காட்டிய வழி!
நூலைப் பெற்றுக்கொண்ட இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் நாடுகள் பல மில்லியன் டாலர் செலவில் நிலவுப் பயணங்களை மேற்கொண்டன. அந்த ஆராய்ச்சி முடிவுகளில் இருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டியது, குறைந்த செலவில் நாம் அனுப்பிய சந்திரயான் விண்கலம்தான். அதேபோல் தேசிய கல்விக் கொள்கை-2020இன் தவறுகளை, ஒரு தனி மனிதனாக அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்ற இளைஞர் எழுதிய நூல் சுட்டிக்காட்டியிருக்கிறது என்று அவர் பாராட்டினார். உலக நாடுகள் சந்திரயான் ஆய்வுகளை ஏற்றுக்கொண்டது போல, பிற மாநிலங்களும் இந்த நூலின் கருத்தை ஏற்று தேசிய கல்விக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார். மேலும், தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவினர் பெண்கல்வி குறித்து போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒன்றிய அரசை துணிச்சலோடு எதிர்க்கும் தமிழ்நாடு!
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி வி.கோபால கவுடா அவர்கள் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை அரசியலமைப்புத் தத்துவத்திற்கும், நாட்டின் பன்மைத்துவம், பண்பாடு, சமூகநீதி ஆகியவற்றுக்கும் எதிரானது என்று கடுமையாக விமர்சித்தார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது மூன்றாவது மொழியைத் திணிப்பதையும், பாடத்திட்ட மாற்றங்கள் மூலம் புராணங்களைத் திணிப்பதையும் அவர் கண்டித்தார். “தேசிய கல்விக் கொள்கை மனித உரிமைகளுக்கே எதிரானது. ஆனால், தமிழ்நாடு இதனை எதிர்த்து துணிச்சலோடு போராடுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர்ஸ்டாலின் ஒரு கலங்கரை விளக்கம்போல இந்தியாவுக்கே வழிகாட்டுவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
Read the speech of Thiru. V. Gopala Gowda

தமிழ்நாடு கல்விக் கொள்கையே சிறந்தது! தேசிய கல்விக் கொள்கை அல்ல!
மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங் அவர்கள் பேசுகையில், தமிழ்நாட்டின் கல்வி முறையை வெகுவாகப் பாராட்டினார். வட இந்திய மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தக் கொள்கை-2020 குறித்து நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடைபெறவில்லை என்றும், அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவை என்றும் அவர் கூறினார். “இந்த மதயானையை அங்குசம் கொண்டே அடக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அந்த அங்குசத்தை ஏந்தி நிற்கிறார். இந்தக் கொள்கையை எதிர்க்க எந்த நிலையிலும் நாமும் அங்குசத்தை ஏந்தி நிற்போம்” என்று அவர் உறுதியளித்தார்.


‘அன்பில் அழைக்கிறார் 2.0’
ஏற்புரை வழங்கிய நூல் ஆசிரியரும், அமச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “1956-ல் தேர்தல் களத்தில் திமுக போட்டியிடலாமா… வேண்டாமா… எனக் கருத்து கேட்பதற்காக பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘அன்பில் அழைக்கிறார் வாரீர்’ என அழைப்பு விடுத்து, மாநாடு நடத்திய அதே மே17-ம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கையால், ‘தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை’ நூல் வெளியாகியிருக்கிறது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் 2,000 கோடி ரூபாய் கல்வி நிதியை வழங்க முடியும் என்று ஒன்றிய அரசு சொன்னபோது, ’இரண்டாயிரம் கோடி அல்ல… நீங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொடுப்பதாகச் சொன்னாலும் நீங்கள் சொல்லும் ஒப்பந்தத்தில், நாங்கள் கையெழுத்துப் போட மாட்டோம். அப்படிக் கையெழுத்துப் போட்டால், இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமூகம் சென்றுவிடும்’ என்று மறுத்தவர் நம் முதலமைச்சர்என்றார்.
இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனையும் அறிவியல்சார்ந்த மனப்பான்மையோடு உருவாக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பிற்போக்குக் கருத்துகளைக் கல்வியில் திணிக்கிறது. ஆறு மணி ஆனதும் கைத்தட்டுங்கள்… விளக்கு ஏற்றி வையுங்கள்… கொரோனா ஓடிவிடும் என்று சொன்னவர்கள்தான், தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கிறார்கள் எனப் பேசினார்.



‘நம்பர் ஒன்’ தமிழ்நாடு
ஒன்றிய அரசின் பிற்போக்குக் கருத்துகளைக் கேட்காமல் இருப்பதால்தான் கல்வியில் தமிழ்நாடு ‘நம்பர் ஒன்’ ஆக இருக்கிறது. இந்திய அளவில் ‘நம்பர் ஒன்’ ஆக நம் முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். கல்விக் கொள்கை வேண்டாம் என்பதல்ல அது காவிகளின் கொள்கையாக இருக்கக் கூடாது என்பதே நம்முடைய நோக்கம். இதை மக்களிடம் எடுத்துச் சொல்லவே இந்த நூலை எழுதினேன்” என்றார்.

தாலாட்டி வளர்த்த மகனுக்கு பாராட்டு விழா!
இறுதியாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், இந்த விழா ஒரு புத்தக வெளியீட்டு விழாவா அல்லது உரிமைக் குரல் எழுப்பும் கூட்டமா என்று வியக்கும் அளவிற்கு இருந்ததாகக் குறிப்பிட்டார். “தாலாட்டி வளர்த்த மகனுக்குப் பாராட்டு கிடைக்கும்போது ஒரு தாய் எப்படி மகிழ்ச்சி அடைவாளோ, அதே மனநிலையில் நான் இருக்கிறேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் வரை போராட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அன்பில் மகேஸ் எழுதியுள்ள இந்த நூல் அந்தப் போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தார்.


தேசிய கல்விக் கொள்கை -2020க்கு எதிராக வழக்கு
மேலும், ஒன்றிய அரசிடமிருந்து பள்ளிக் கல்வி நிதியைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் வழக்குத் தொடர இருப்பதாகவும், அந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் சூளுரைத்தார்.
ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் வலிமையான குரலாக ஒலித்தது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இந்த முயற்சிக்கு முதலமைச்சரின் பாராட்டு மேலும் உத்வேகம் அளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாடு தனது திராவிட அங்குசத்தால் தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானையை உறுதியுடன் எதிர்கொண்டு நிற்கிறது!

Follow us
Whatsapp Channel – bit.ly/anbilmahesh4evr
X ID – https://x.com/AnbilMahesh4evr
Youtube – https://youtube.com/@AnbilMahesh4evr
Facebook – https://fb.com/AnbilMahesh4evr
Instagram – https://instagram.com/AnbilMahesh4evr
Pingback: `தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் உ