தளபதியின் தளபதி அன்பில் பொய்யாமொழி!

அன்பில் தர்மலிங்கம் அவர்களின் மகனும், இன்றைய கல்வி அமைச்சரின் தந்தையுமான அன்பில் பொய்யாமொழி, திமுக வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர். மெழுகாக தன்னை உருக்கிக்கொண்டு கட்சி வளர்ச்சிக்காக, தளபதி மு.க.ஸ்டாலினின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.

அன்பில் பொய்யாமொழி மற்றும் மு.க.ஸ்டலின் ஒரு விழாவில்

அன்பிலாரின் மூத்தமகன்:

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் திமுக என்கிற மாபெரும் சமூநீதி இயக்கத்தின் சோழமண்டலத் தளபதியாக விளங்கியவர் அன்பில் தர்மலிங்கம். 1967-இல் திமுக முதன்முதலில் தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது அன்பில் தர்மலிங்கம் வேளாண்துறை அமைச்சராக விளங்கினார். அவருக்கு பொய்யாமொழி, பெரியசாமி என இரு மகன்கள். இருவரில் மூத்த மகன்தான் அன்பில் பொய்யாமொழி.

அன்பில் பொய்யாமொழி அன்பில் தர்மலிங்கம் மற்றும் குடும்பதினர்

தளபதி ஸ்டாலினின் கல்லூரி நண்பர் :

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் உற்ற துணையாக இருந்தார் அன்பில் தர்மலிங்கம். அதேபோல தளபதி மு.க.ஸ்டாலினுக்கு உற்ற துணையாகவும், திமுக கட்சி வளர்ச்சிக்காக தளபதியின் தளபதியாக நின்றவர்தான் அன்பில் பொய்யாமொழி. தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் படித்தபோது அதே கல்லூரியில்தான் இவரும் படித்தார்.

அன்பில் பொய்யாமொழி, அன்பில் தர்மலிங்கம் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக இளைஞர் அணி தொடக்கம் :

இளைஞர் அணி அமைப்பு 1980-ல் மதுரையில் உள்ள ஜான்சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது. 1982-ல் திருச்சியில் 2-ம் ஆண்டு விழாவில் 7 பேர் கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலினும் அன்பில் பொய்யாமொழியும் இடம்பெற்றனர். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக் குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலும், ஒவ்வோர் ஊரிலும் இளைஞர் அணி கட்டியமைக்கப்பட்டது. மு.க.ஸ்டாலினுக்கு இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. அப்போது மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டார். மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இளைஞர் அணி முதன்முதலாக அன்பகத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டது, இன்றும் செயல்பட்டு வருகிறது.

அன்பில் பொய்யாமொழி, அன்பில் தர்மலிங்கம் மற்றும் மு.க.ஸ்டலின் ஒரு விழாவில்

திமுக இளைஞர் அணிக்காக நெடும்பயணம் :

திமுக இளைஞர் அணிப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்க்க அன்பில் பொய்யாமொழி முக்கியக் காரணமாக இருந்தார். தளபதி மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு ஊரிலும் இளைஞர் அணியைத் தொடங்கிவைத்தார். அப்போது தளபதியின் எல்லாப் பயணங்களிலும் உடன் நின்றவர். தளபதி மு.க.ஸ்டாலின் எங்கு செல்ல வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும், அணியை மென்மேலும் எப்படி வலுப்படுத்துவது என ஆலோசனைகள் கூறி பக்கபலமாக உடன் பயணித்தார்.

அன்பில் பொய்யாமொழி மற்றும் மு.க.ஸ்டலின் தி.மு.க இளைஞர் அணி விழாவில்

அன்பில் பொய்யாமொழி கட்சி வளர்ச்சிக்காய் மெழுகாய் உருகினார் :

ஒரு அமைச்சரின் மகனாக இருந்தாலும், தான் ஒரு மாவட்டச் செயலாளராக வேண்டும், அமைச்சராக வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. பதவி ஆசை அவரிடம் இல்லை. மாறாக முத்தமிழறிஞர் கலைஞரின் புதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞர்படையை வலுப்படுத்தினார். கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

அன்பில் பொய்யாமொழி, அன்பில் தர்மலிங்கம் மற்றும் மு.க.ஸ்டலின், திருச்சி சிவா ஒரு விழாவில்

இளைஞர் அணி வீறுகொண்டு எழுந்தது. திமுக என்கிற இயக்கம் தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட காலத்திலும்கூட இளைஞர் அணி உறக்கம் இல்லாமல் உழைத்தது. அதில் அன்பில் பொய்யாமொழியின் பங்கு முக்கியமனது.  தன்னையே கரைத்துக்கொண்டு கட்சிக்காக உழைத்தார். மெழுகாய் தன்னை உருக்கிக்கொண்டு தளபதி மு.க.ஸ்டாலின் கட்சியில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என அயராது பாடுபட்டார்.

அன்பில் பொய்யாமொழி மற்றும் மு.க.ஸ்டலின்

இரண்டு முறை எம்.எல்.ஏ. :

1989 மற்றும் 1996 ஆகிய இரண்டு தேர்தல்களில் திருச்சி -2 தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 28.8.1998 இல் அவர் மறைந்தார். தனது நண்பரின் மறைவையடுத்து, திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், “நான் ஒரு நண்பரையோ சகோதரனையோ மட்டும் அல்ல, என் உயிரையே இழந்துள்ளேன்” எனத் தெரிவித்தார். இதன்மூலம் இவர் தனக்கான தடத்தை தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமாக பதிவு செய்திருகிறார் என்பது தெளிவாகிறது.

களமாடும் மூன்றாம் தலைமுறை :

அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி வரிசையில் திருச்சி மண்டலத்தில் திமுகழகத்தின் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்தார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தற்போது தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தன் தாத்தா அன்பில் தர்மலிங்கம், தந்தை அன்பில் பொய்யாமொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் திறம்படச் செயலாற்றி வருகிறார். கொள்கை எதிரிகளே குலைநடுங்கும் அளவுக்கு திமுக என்கிற இயக்கத்தின் தூணாக நிற்கிறார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

2 thoughts on “தளபதியின் தளபதி அன்பில் பொய்யாமொழி!”

  1. Pingback: அப்பா அன்பில் பொய்யாமொழி தந்த சொத்து!

  2. Pingback: அன்பில் மகேஸ் காலம் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top