2026 ஜனவரி 20 முதல் 24 வரை நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர், நான்காம் நாள் (ஜனவரி 23, 2026) நடைபெற்ற சட்டமன்றக் கேள்வி நேரத்தில் அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விரிவாக எடுத்துரைத்தார்.

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் கேள்விகள்
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. கி. அசோக்குமார் எழுப்பிய வினா (எண் 149410) கீழ்க்காணும் கேள்வியுடன் இருந்தது:
“கிருஷ்ணகிரி தொகுதி, காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், ஜெகதாப் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு முன்வருமா?”
அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிகளில் திராவிட மாடல் அரசால் மேற்கொள்ளப்பட்ட புதிய உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி விவரித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜகதாப் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் மூன்று வகுப்பறைகள் (இரு வகுப்பறைகள் + ஒரு நூலக வகுப்பறை) தேவைப்படுகின்றது. கருத்துருக்கள் பெறப்பட்டு, வரும் கல்வி ஆண்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்பதை தெரிவித்தார்.
பள்ளிகளில் மாணவர் தொகை மற்றும் இடவசதி சவால்கள்
திரு. அசோக்குமார் தொடர்ந்து கூறியதாவது:
காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி பிஆர்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 110 மாணவர்கள் + 110 மாணவிகள் = 220 மாணவர்கள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 383 மாணவர்கள் + 188 மாணவிகள் = 580 மாணவர்கள். மாற்றுத்திறனுடைய 25 மாணவர்கள் மற்றும் பகல்நேர மையம் என மொத்த 816 மாணவர்கள். பள்ளி 50 சென்ட் பரப்பளவு கொண்டது. இதனால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட போதிய இடவசதி இல்லை, மேலும் மழைக்காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்.
அமைச்சர் பதில்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதற்கு பதிலளித்தார்:
தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றே வளாகத்தில் செயல்படுவதை மாற்றி, உயர்நிலைப்பள்ளிக்கு தனித்த வகுப்பறைகள் வழங்கப்படும். ஏற்கனவே பள்ளியில் 13 வகுப்பறைகள், ஒரு அறிவியல் ஆய்வகம், ஆரம்பகால கழிப்பறைகள் இருக்கின்றன. இடவசதிக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டமுடியுமா என்பதைக் ஆய்வு செய்யச் சொல்லியுள்ளனர்.
திரு. அசோக்குமார் மேலும் குறிப்பிட்டார்:
கிருஷ்ணகிரி கட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 82 சென்ட் நிலம் உள்ளது. கம்மம்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி: தற்போதைய மாணவர் சேர்க்கை 451, ஆனால் 18 வகுப்பறைகள் தேவை, தற்போது 9 மட்டுமே உள்ளன.

அரசின் திட்டங்கள்
அமைச்சர் மேலும் கூறியதாவது:
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ. 3,878 கோடி மதிப்பீட்டில் 477 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 7,000–7,500 கோடி மதிப்பீட்டில் 17,314 வகுப்பறைகள் கட்டும் திட்டம் உள்ளது. இதுவரை 9,416 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு, 7,898 வகுப்பறைகளுக்கான கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் சூழலில், கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதே அரசின் கடமை என்று கூறினார். மேலும், உறுப்பினரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, எங்கெங்கெல்லாம் புதிய கட்டடங்கள், கட்டுமானங்கள் தேவைப்படுகின்றனவோ அவை கட்டப்படும் என நிறைவு செய்தார்.
